Raj Panneer Selvam

Drama

4.9  

Raj Panneer Selvam

Drama

அவளின் முதல் முத்தம்

அவளின் முதல் முத்தம்

7 mins
1.8K


மைப்பூசிய இருட்டு மெல்லக் கரைய வெண்பனி போர்த்திய காலை சோம்பலுடன் புலர்ந்து கொண்டிருந்தது. 

முன்தினம் ஊர் சுற்றிய அசதி இன்னமும் உடலைவிட்டுப் போகாததால் , பஸ்சின் ஜன்னலில் சாய்ந்து தூங்கிக் கொண்டு 

இருந்தாள் சந்தியா.


"தங்கம் ... எழுத்துரு டா... பெண்ணாத்தூர் வந்துருச்சு ..." என்று கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி செல்லமாக 

எழுப்பினான் அருண்.


"குட் மார்னிங்ங்ங்ங் ..." என்று இழுத்துக் கொண்டே லேசாகக் கண்ணை முழித்துப் பார்த்தவள் , மீண்டும் ஒரு குட்டி 

தூக்கத்திற்குத் தயாரானாள்.


பத்து நிமிடத்தில் ஊர் வந்துவிடும் என்பதால் லக்கேஜ் கேரியரில்  இருந்த தனது பையையும் , சந்தியாவின்  

பையையும் எடுத்து அருகில் வைத்துக் கொண்டு இறங்கத் தயாரானான் அருண்.

அதற்குள் தன் குட்டி தூக்கத்தை முடித்துக்கொண்டு , கண்களை நன்றாக முழித்துப் பார்த்தவள் கொட்டாவி விட்டுக் கொண்டே தன் இரு கைகளையும் உரசி உள்ளங்கையை வெப்பமேற்றி குளிருக்கு இதமாக முகம் கழுவிக் 

கொண்டாள் சந்தியா.

"இப்ப தான் சோமாஸ்பாடியே  வருது ... உனக்கு அதுக்குள்ள ஏன் இந்த அவசரம் ..." என்று சொல்லிக் கொண்டே தன் மொபைலை எடுத்தவள் சிறிது நேரம் யோசித்துவிட்டு , தன் அப்பாவிற்கு அழைத்தாள்.

"எங்கம்மா வந்து இருக்க… " என்றது எதிர்முனை குரல் ஆவலோடு.

"அப்பா ... பஸ் பைபாஸ் வந்துருச்சு ... நீங்க பஸ் ஸ்டாண்ட் வந்துருங்க ..." என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

முகத்தில் ஒரு தயக்கத்துடன் , வார்த்தைகள் குழையச் சங்கடமாக அருணிடம் பேச ஆரம்பித்தாள்.

"ஏய்... அப்பாவை பஸ் ஸ்டாண்ட் வர சொல்லிட்டேன்... இன்னைக்கு வீட்டுக்கு வர வேண்டாம் ... தெருல எல்லாம் 

சொந்தகாரங்க ... முதல் முறையா  வரீங்க ...  நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா போனா , தேவை இல்லாம எல்லாரும் கேள்வி கேப்பாங்க ... " என்று இழுக்க.

"ஆமா டா தங்கம் ... நான் இதை யோசிக்கவே இல்ல ... சாரி தங்கம் ... நானும் அப்பாவை  பாத்துட்டு அப்படியே கிளம்புறேன் ... ஆல்ரெடி லேட் ... மச்சான் கல்யாணத்துக்குத் தான் போக முடில , கறி சோத்துக்காச்சும் போய் அட்டெண்டன்ஸ் போட்டு ஆகணும்  ஊர்ல ... " என்று சொல்லிக் கொண்டே மன்னிப்பு கேட்டான்.

"அட நீ வேற ... " என்று சொல்லிக் கொண்டு இருக்கையிலே வண்டி பஸ் நிலையத்துக்குள் நுழைந்தது.

அவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் அருண் என்ன நினைத்தானோ தெரியாது தனது வலது மணிக்கட்டை அவள் முகத்திற்கு நேராக நீட்டி "ஒரு முத்தம் கொடேன்… உன் நியாபகார்த்தமா…" என்று கண்களில் அவ்வளவு வாஞ்சையுடன் கேட்க , கைகளை வேகமாகத் தட்டிவிட்டு "ஆளையும் … மூஞ்சியையும் பாரு… பஸ் நின்றுச்சி… சீக்கிரம் இறங்குங்க… அப்பா வெயிட் பண்ண போறாரு…" என்று சொல்லி விட்டு வேகமாகச் சீட்டில் இருந்து எழுந்தாள்.

சட்டென சந்தியாவின் காதில் ஏதோ குரல்…!  தன்னை நோக்கிய கடுவலான குரலாய் ஒலிக்கவே படபடத்துக் கண்விழித்துப் பார்த்தாள்.

"ஏம்மா… எந்த ஊரும்மா போற… டிக்கெட் எடு்துட்டு தூங்க வேண்டியது தானே…வண்டியில ஏறனதும் தூங்கிடுறது …." என்று கண்டெக்டர் கட்டலாகக் குரல் கொடுக்க , மேலே சொன்ன அத்தனை  

காட்சிகளையும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் சுதாரிப்பானாள்.

அருணின் நினைவுகள் அத்தனையும் நிழலாடிய கண்களில் கண்ணீர் தழும்பி வழிந்து கொண்டிருக்க "மதுரை … ஒன்னு கொடுங்க…" என்று சன்னமான அழுகை குரலோடு கேட்டு டிக்கெட்டை வாங்கி பர்சில் வைத்தவள், மீண்டும் கண்களை மூடுகையில் தனது மொபைல் ஒலித்தது.

பர்சை பரபரப்பாகத் திறந்து மொபைலை எடுத்து அவசர அவசரமாக அழைப்பை ஏற்றாள்.

"சொல்லுங்க ஆன்ந்த் அண்ணா… இப்ப எப்படி இருக்காரு அவரு… " என்று அழுகையோடு நலம் விசாரித்தாள்.

"நீ கிளம்பிட்டியா இல்லையா…??? " என்றது மறுமுனை குரல் கோவமாக

"அண்ணா … பஸ் ஏறிட்டேன் ண்னா… அவரு இப்ப எப்படி இருக்காரு… டாக்டர் ஏதும் இம்ப்ரூவ்மன்ட் இருக்குன்னு 

சொன்னாங்களா…???" என்று மீண்டும் முதல் கேள்வியையே கேட்டாள் ஆனந்திடம்.

"இப்ப இவ்ளோ அக்கறையா கேக்குற நீ , அன்னைக்கு ஒரு நிமிசம் யோசிச்சு அவன்கிட்ட  பேசி இருந்தா இவ்ளோ தூரம் போய் இருக்காதுல… " என்று கோவத்தில் திட்டினான்.

"டாக்டர் … என்ன சொன்னாரு…??? அதை மட்டும் சொல்லுங்க… வேற எதையும் நான் உங்ககிட்ட கேக்கல… " என்றாள் கோவமாக.

"அதான … உன் தப்பை ஏத்துக்கவே ஏத்துக்காத… இப்படியே பிடிவாதமா இரு… டாக்டரு தாங்காது , வீட்டுக்கு எடுத்துட்டு போக சொல்லிட்டாரு… " என்று சொல்லி கோவத்தில் ஆனந்த் போனை கட் செய்தான்.

இதைக் கேட்டதும் இடியும் மின்னலும் அவளைத் தாக்கியது போல உணர்ந்தாள். உயிரிருந்தும் உயிரள்ளவளாய் உருமாறியவள் தன்னையும் மீறித் தேம்பித் தேம்பி மெல்லமாக அழ ஆரம்பித்தவள் , சில வினாடிகளில் அருணை இழக்கப் போவதை நினைத்து சத்தமாகவே அழத் தொடங்கினாள்.

தன்னை எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல் போகவே , பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் மெல்லமாக அழுகையின் காரணத்தை விசாரிக்கத் தொடங்கினார். சந்தியா எதையும் காதில் வாங்காமல் துப்பட்டாவால் தன் முகத்தை மூடி அழுது கொண்டிருக்கவே , தன் மனைவியைத் தொல்லை செய்து அழுகையின் காரணம் அறிய முற்பட்டார்.

கிட்டதட்ட பத்து நிமிடத்திற்கு மேல் "ஒன்னும் இல்லை சார்… ஒரு பர்சனல் ப்ராபளம்… அதான் கன்டிரோல் பண்ண முடியாம அழுதுட்டேன்… சாரி சார்…" என்று திடமாக இருப்பது போலப் பதில் சொல்லிவிட்டு , கர்ச்சிப்பால் முகத்தை எல்லாம் துடைத்துக் கொண்டு அமர்ந்த அடுத்த நொடியே மீண்டும் தாரை தாரைாய் கொட்டியது.

"அட… என்னம்மா நீ… என்னை உன் அண்ணனா நினைச்சிக்கோ… என்ன பிரச்சனைன்னு சொல்லு… என்னால முடிஞ்சா தீர்வு சொல்றேன்… இல்லா ஆறுதலாச்சும் சொல்ல பாக்குறேன்…" என்றார் மிகுந்த வாட்டமான குரலில்.

சந்தியாவால் அந்த முகவாட்டத்தை நன்றாக உணர்ந்து உள்வாங்க முடிந்தது. தீராத காதல் கொண்ட ஒரு அண்ணன் , தன் தங்கை அழுவதைப் பார்க்க சகியாத பொழுது வரும் வேதனையின் வாட்டம் என்பதை நன்கு புரிந்து கொண்டாள்.

"அண்ணா… உங்களுக்குத் தங்கச்சின்னா ரொம்ப பிடிக்குமா… அண்ணா…" என்றாள் தேம்பி அழுது கொண்டே சந்தியா தன்னையும் மறந்தவளாய்.

ஆச்சரியத்தில் அருகில் இருந்த அவரின் மனைவி "என்னம்மா… ஜோசியம் சொல்ற மாதிரி கரெக்டா சொல்ற அவரைபத்தி…???" என்று தலை மீது கையை வைத்து சந்தியாவின் கலைந்த முடிகளைச் சரி செய்து ஆசுவாசப்படுத்தினாள்.

அந்த அண்ணன் - அண்ணியின் இதமான வார்த்தைகள் ஓரளவு சந்தியாவின் கண்ணீரைக் குறைக்கத் தொடங்கி இருந்தது. இதற்குள் வண்டி கும்மிருட்டில் திருக்கோவிலூர் தென்பெண்னை ஆற்றுப் பாலத்தைக் கடந்து கொண்டிருக்க, காய்ந்து வறண்டு போன ஆற்றின் மணற் பரப்பைப் பார்த்ததும் , யாரிடமாவது பேசினால் மனபாரம் சற்று தனியும் என்று சந்தியா தானாக முன் வந்து பேசத் தொடங்கினாள்.

"அண்ணா… நான் தப்பு பன்னிட்டனான்னு எனக்குத் தெரியலை… ஆனால் நான் மனசரிஞ்சு ஏதும் பண்ணலை… ஆனால் அருண் பிரென்ட்ஸ் மட்டும் இல்ல , எங்க அம்மாவும் என்னைத் தான் குத்தம் சொல்றாங்க… " என்று உதட்டைக் கடித்துக் கொண்டு அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னாள்.

"யாரும்மா… அருண்… அவருக்குத் தான் இப்ப உடம்பு சரியில்லையா… என்னாச்சு…" என்று  அடுக்கடுக்கான கேள்விகளை அந்த அண்ணன் கேட்கத் தொடங்கினார்.

"சொல்றேன் ண்னா… நான் நடந்ததை எல்லாம் சொல்றேன்… சத்தியமா நான் செஞ்சது தப்பான்னு எனக்குத் தெரியலை … நீங்களாச்சும் சொல்லுங்க…" என்றாள் கண்களை இடது கைகளால் துடைத்துக் கொண்டு.

"சரிம்மா… தப்பா ரைட்டா ன்னு இரண்டாவது பேசுவோம்… அருணுக்கு என்னாச்சு… முதலை அதை சொல்லு???"


"போன வாரம் அவரு சென்னைக்கு வந்துட்டு அப்படியே என்ன பார்க்கத் திருவண்ணாமலை வந்திருந்தப்ப , கோயில் வாசல்ல வேட்டி இடறி கீழ விழுந்ததுல பின் மண்டையில காயம்… சுய நினைவு இல்லாம இருக்காரு… இங்க பார்க்க முடியாதுன்னு சொன்னதும் , சொந்த ஊரு மதுரைக்கே ஆம்புலன்ஸ் ல கூட்டிட்டு போய்டாங்க… அங்க ஹாஸ்பிட்டல் தான இருக்காரு… அவரை பார்க்கத் தான் இப்ப போய்ட்டு இருக்கேன்… " என்றாள் விசும்பிக் கொண்டே.


அதுவரை அமைதியாக நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கண்டெக்டர் , தனது இருக்கையில் அமர்ந்தவாரே சந்தியா பக்கம் திரும்பிப் பேசத் தொடங்கினார்.

"ஏம்மா… என்ன பொண்னுமா நீ… காலையில இதே பஸ் ல தான் மதுரையில இருந்து கிளம்பி திருவண்ணாமலை வந்த… இப்ப திருப்பியும் ரிட்டன் போற… அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு… ஒழுங்கா அங்கயே கூட இருந்து பாக்காம ஓடி வந்துட்டு , இப்ப திருப்பி ரிட்டன் ஓடுற… " என்று தன் பங்குக்கு வசவு பாடினார்.

"அட கண்டெக்டர் சார்… நீங்க வேற ஏன் என்னனே தெரியாம , அந்த புள்ளைய குறை சொல்றீங்க… " என்று அந்த அண்ணன் கண்டெக்டரை கடிந்து கொண்டார்.

"சார்… நீங்க சொல்றது சரி தான்… போன வாரம் திங்ககிழமை கீழ விழுந்தாரு… மறுநாளே மதுரை கூட்டிட்டு போய்டாங்க… அன்னையில் இருந்து நான் அங்க தான் இருந்தேன்… ஆனால் சுத்தி இருக்குற அத்தனை பேரும் , ஒவ்வொரு நிமிசமும் என்னை கொலைகாரி மாதிரியே பாக்குறாங்க… எங்க அம்மா அப்பா முதற் கொண்டு… எப்படிச் சார் அந்த இடத்துல என்னால இருக்க முடியும்… நீங்க இருப்பீங்களா…???" என்றாள் கோவமும் கண்ணீருமாக.

"அப்படி என்ன தான்மா நீ பண்ண… அவரு இந்த நிலைமைக்குப் போக…???" என்றார் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த டிரைவர் பொறுமையை இழந்து .

அதுவரை மௌனித்து இருந்த பக்கத்து இருக்கை அண்ணி "என்ன காதலா…???" என்றாள்.

நமட்டு சிரிப்புடன் "ஆமாம்… காதல் தான்... ஆழமான காதல்… அதனால் தான் இப்படி அவஸ்தை படுறேன்…" என்று கூறிக் கொண்டிருக்கையில் பஸ் மோட்டலில் நின்றது.

சந்தியாவை எவ்வளவு கூப்பிட்டும் வராததால் , பக்கத்து இருக்கை அண்ணனும் - அண்ணியும் டீ குடிக்க இறங்கிச் சென்றனர்.

என்ன செய்வதென்று தெரியாத வெறுமையில் மீண்டும் மொபைலை எடுத்து ஆனந்த்திற்கு அழைத்தாள்.

அழைப்பை ஏற்றதும் "சாரிம்மா… ஏதோ ஒரு கோவத்துல அப்பத கத்திட்டேன்… என்னை மன்னிச்சிடு…" என்றான்.

"அட… விடுங்க அண்ணா… என்னைத் தான் எல்லாரும் கொலைகாரின்னு பட்டம் கட்டிடீங்களே… இதுக்கு அப்புறம் கோச்சிகிட்டா என்ன , கோச்சிக்கலைன்னா என்ன… அவரு எப்படி இருக்காரு… " என்று வாழ்க்கையை வெறுத்தவள் போலப் பேசியதும் எதிர்முனையில் லைனில் இருந்த ஆனந்த்திற்கு என்ன சொல்வதென்று தெரியாது நெடிய மௌனத்தோடு இருந்தான்.

"என்ன அண்ணா….எதும் பதில் கூட பேச மாட்டிக்கிறீங்க…??? இல்லை பதில் சொல்ல விருப்பமில்லையா…???" என்றாள்.

"சாய்ந்திரத்தை விட இப்ப பல்ஸ் கொஞ்சம் கம்மியா இருக்கு… விடிஞ்சதும் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்குத் தூக்கிட்டுப் போக சொல்லிட்டாங்க… " என்று அழுது கொண்டே சொல்ல , துக்கத்தை அடக்க முடியாது தனது ஷாலை கொண்டு முகத்தை மூடி ஓவென அழத் தொடங்கினாள்.

அதற்குள் சூடாகக் காபியை வாங்கிக் கொண்டு வந்த பக்கத்து இருக்கை அண்ணனும் - அண்ணியும் , அழுது கொண்டிருந்த சந்தியாவை எழுப்பித் தேற்றினர்.

"அதெல்லாம் ஒன்னும் ஆகாதும்மா… நீ தைரியமா இரு… முதல்ல முகத்தை கழுவிட்டு இந்த காபியைக் குடி… அழுது அழுது முகமே வீங்கி போய்டுச்சு பாரும்மா… " என்று அந்த அண்ணி முகத்தை வலுக்கட்டாயமாக கழுவி விட , பஸ் டிரைவரும் கண்டெக்டரும் சந்தியாவைப் பார்த்து வருத்தமானார்கள்.

"ஏம்மா… அர்ஜெண்டுன்னு சொல்லி இருந்தா மோட்டல்ல போடாம ஒரே அழுத்தா மதுரையில போய் இறக்கி விட்டுறுப்பேன்ல… என்ன பொண்னுமா நீ…" என்று திட்டிக் கொண்டே வண்டியை நகர்த்தினார் டிரைவர்.

கண்களைத் துடைத்துக் கொண்டவள் , அந்த நொடி யார் தோளிலாவது சாய்ந்து கொண்டாள் தேவலம் என்று நினைத்தவள் அந்த அண்ணியின் தோள்களில் சாய்ந்து கொண்டு "இது தான் வினையை விதைத்தவன் , வினையை அறுப்பான் போல…" என்று புலம்பினாள்.

"என்னம்மா நீ… வண்டி ஏறுனதுல இருந்து ஒரு மணி நேரமா புரியாத மாதிரியே பேசுற… என்னதான் பிரச்சனை சொல்லுமா…" என்றார் அந்த அண்ணன்.

"இந்த *ஒரு மணி நேரம்* தான் பிரச்சனையே … இந்த ஒரு வருசமா எத்தனை வாட்டி அவரு என்கிட்ட கெஞ்சி இருப்பாரு , உன்கிட்ட பேசனும் ஒரே ஒரு மணி நேரம் ஒதுக்குன்னு… ஆனால் நான் தான் திமிர் பிடிச்சு போய் போன வாரம் வரைக்கும் டைம் இல்லாமல் சுத்துனேன்… ஆனால் இன்னைக்கு அவரு எனக்கு டைம் கொடுத்து இருக்காரு… காலையில வரை… கடவுள்கூட இப்ப அவரு பக்கம் தான நியாயம் பேச தொடங்கிட்டாரு…" என்று சொல்லிக் கொண்டே அவ்வளவு வேதனையையும் சிரிப்பாக வெளிப்படுத்திக் கொண்டே தங்கள் கதையை ஆரம்பித்தாள்.

கரெக்டா ரெண்டு வருசம் முன்னாடி , எனக்கு அவரு பெயர் ஒரு மேடை சொற்பொழிவு விளம்பரம் மூலம் அறிமுகம். அது சென்னையில இருந்ததால என்னால அங்க போக முடியாட்டியும் , எப்படியோ கஷ்டப்பட்டு அவரு போன் நம்பரை கண்டுபிடிச்சேன். அவரு பேசி முடிச்சிட்டு , அன்னைக்கு நைட் அவரு சொந்த ஊரான மதுரைக்கு பஸ் ல போகும் பொழுது தான் முதன் முதல் அவர் பேச்சைக் கேட்காத ரசிகையா அவருக்கு போன் செஞ்சேன்.

தலைவரு செம டீசன்ட் … பொண்னுகிட்ட பேசுறோம்ன்னு ரொம்ப வழியாம , கிட்தட்ட அரை மணி நேரம் தன் மேடைப் பேச்சுகளைப் பற்றி மட்டுமே பேசி காலை கட் செய்தார்.

அதன் பின் என்றாவது ஒரு நாள் , பேஸ்புக்கில் சந்தித்துக் கொள்வோம் சில லைக்குகளுடன். கிட்டதட்ட ஒரு வருடம் , நட்பு என்ற அளவில் கூட அல்லாமல் வெறுமனே பரஸ்பரம்  மரியாதையோடு கடந்தது.

கடந்த வருடம் தை பொங்கலுக்கு எதர்சையாக ஒரு வார வேலை காரணமாக மதுரையில் தங்க நேர்ந்தது. அப்பொழுது தான் அவர் நியாபகம் வரவே , சொக்கநாதர் மீனாட்சியை அவரைத் தவிர யாரும் சுவைப்படப் பேசிவிட முடியாது என்று எண்ணி அவருக்கு போன் செய்தேன் , மதுரையில் இருப்பதாகவும் அவருக்கு நேரம் இருப்பின் கோவிலை வந்து சுற்றிக் காட்டும்படியும் கேட்டுக் கொண்டேன்.

"அப்படி தான் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது . ஒருவிதத்தில் நான் குற்றவாளி என்றால் , நாங்கள் ஒன்றிணையக் காரணமான மீனாட்சி சொக்கனும் குற்றவாளி தான்" என்றாள்.

"அட… முதல்ல சொல்லி முடிம்மா… அப்புறம் யாரு குற்றவாளின்னு முடிவு பண்ணலாம்…" என்று கதை கேட்டுக் கொண்டிருந்த கண்டெக்டர் அதட்டினார்.

மேலும் தொடர்ந்தாள்…

அன்னைக்குச் சொக்கநாதரை பாதத்துக்குப் பிறகு எங்களுக்குள்ள நெருக்கம் அதிகமாச்சு. என்னைக்கோ ஒருநாள் பேசியவர்கள் , தினம் தினம் பேசத் தொடங்கினோம்.


"அட … எல்லா கதையும் போலத் தான்… நாங்க பிரெண்ட்ஸா தான் பழகினோம்…அப்புறம் தான் எங்களுக்குள்ள அது காதலா மாறிடுச்சு… இது உங்க தப்பு இல்லைமா … விதி… வயசு… " என்று கண்டெக்டர் சிரித்துக் கொண்டே சொல்ல , சந்தியா கோவமே படாமல் கண்டெக்கருக்கு பதில் கூறினாள்.


"அட ஆமாம் சார்… விதி தான்… என்ன பன்றது … எங்களுக்குள்ள அப்படி ஒரு காதல் சார்… 25 வருசமா ஒருத்தரை ஒருத்தர் மிஸ் பன்னிட்டு வாழ்ந்துட்டோ மேன்னு நினைச்சி இருக்கோம்… எந்த அளவுக்கு லவ்ன்னா , நான் வீட்ல இல்லாதப்ப கூட அவரு என் வீட்டுக்கு வந்து உரிமையோட என் பெட்ரூம்ல தூங்குவாரு… அந்த அளவு வீடு வரை காதல் கால் ஊனிடுச்சி…" என்று முகத்தில் அடிப்பது போலப் பதில் சொன்னாள் சாதுவாகச் சிரித்துக் கொண்டே.


"ஓ… வீட்ல கூட எல்லாமே  ஒத்துகிட்டாங்கன்னா அப்பறம் என்னதான் பிரச்சனை உங்களுக்கு …???" என்று புதிராய் அந்த அண்ணன் கேட்டார்.


"நீங்களுமா சார்…" என்றாள் முகத்தை விகாரமாய் வைத்துக் கொண்டு.


"என்னம்மா… இவ்வளவு நேரம் அண்ணன்னு சொன்ன… திடீர்ன்னு சார்ன்னு சொல்ற…." என்று ஒன்றும் புரியாது பரிதாபமாய் கேட்டார்.


"பின்ன எப்படிக் கூப்பிட சொல்றீங்க உங்களை…??? நீங்களும் ஒரு சராசரி மனுசன் தான… உங்க எல்லாரோட எண்ணமும் எப்படியும் எதிர் பாலின நட்பு காதல்ல தான் வந்து முடியும்ன்னு தியரி வச்சி இருக்கீங்க… ஏன் சார் தாம்பத்திய உறவைத் தாண்டி எத்தனை உறவு ஆணுக்கும் - பெண்ணுக்கும் இடையில இருக்கு … அதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா… ஏன் நாங்க அண்ணன் –தங்கச்சியா இருக்கக் கூடாதா , இல்லை முடியாதா…???" என்று அனைவர் கன்னத்திலும் பளார் பளார் என்று அரைவது போலக் கேள்வி கேட்டாள்.


ஒரு நிமிடம் கதை கேட்டுக் கொண்டிருந்த மூவரும் ஆடிப் போக , நான்காவதாய் கதை கேட்டுக் கொண்டிருந்த ஒட்டுநர் சட்டென பிரேக் போட்டு வண்டியை மெல்லமாக்கி ரோட்டின் ஓரம் ஒதுக்கி நிறுத்தினார்.

"சாரிம்மா… மன்னிசிடுமா… " என்று என்ஜின் லைட்டை போட்டு சந்தியாவிடம் இருக்கைகளைக் கூப்பி மன்னிப்பு கோரினார்.

"நீங்க ஏங்க என் கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க… " என்று சந்தியா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார் டிரைவர்.

"அண்னே … விடுங்க அண்னே… இந்தாண்னே முகத்தை துடைண்னே…" என்று பாட்டில் நீரையும் டர்கி டவலையும் நீட்டி கண்டெக்டர் டிரைவரை தேற்றினார்.

சந்தியாவிற்கும் , பக்கத்து இருக்கை அண்ணன் - அண்ணிக்கும் ஒன்றும் புரியாது பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்க "அண்னே… கீழ இறங்கு .. பார்கிங் லைட்டை போட்டு விட்டுவிட்டு , ஒரு பத்து  நிமிசம் ரெஸ்ட் எடு…" என்று கண்டெக்டர் சொல்லிவிட்டு மூவரையும் அழைத்துக் கொண்டு கீழ் இறங்கினார்.

பயணிகள் சிலர் விழித்துப் பார்க்க , டிரைவர் ரெஸ்ட் எடுக்க வண்டி நிற்கிறது என்று தகவலைச் சொல்லிவிட்டு , அருகில் இருந்த கல்வெர்ட் பிரிட்ஜ் கைபிடி சுவற்றில் சந்தியாவையும் , அந்த தம்பதிகள் இருவரையும் அமரச் சொன்னார் கண்டெக்டர்.

"அது ஒன்னுமில்லமா … இரண்டு மாசம் முன்னாடி தான் இவரு பொண்னு சூசைடு பண்ணி இறந்து போச்சு… காரணம் இதே எழவெடு்த்த சந்தேகம் தான்… பெத்த பொண்னுகிட்ட மனசு விட்டு பேசாம , அவசரப்பட்டு ஏதோ பையன் கூட அடிக்கடி போன்ல பேசுறதை பாத்துட்டு என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம லவ் பன்றியான்னு கேட்டு இருக்காரு… அந்த பொண்னும் எவ்வளவோ சொல்லி இருக்கு , அந்த பையன் எனக்கு பிரெண்டு தான்னு… ஆனால் நாம தான் மூளை மழுங்கிப் போய் இருக்கோமே… அதான் டெய்லி பேப்பரை துறந்தா வெறும் கட்டுக்கதை செய்தியா கள்ளக்காதல் , மாமியார் மருமகள் , அண்ணன்- தம்பி சொத்து தகராறுன்னு வெறும் பொய்யும் தப்பும் நிறைந்த சென்சேசனல் நியூசை படிச்சி மூளை மழுங்கிப் போய் இருக்கோமே… விசாரணை எல்லாம் இல்லாம டைரக்ட் தீர்ப்பு தான்… ஆண் - பெண் உறவு காதல்ல தான் முடியும்ன்னு … அதே பானில தன் பொண்னு எவ்வளவு சொல்லியும் கேக்காம திட்டி இருக்காரு… அது மனசு ஒடஞ்சி போய் தூக்கு மாட்டிகிச்சி… " என்று சொல்லிக் 

கொண்டே தோளில் இருந்த கிரீஸ் படிஞ்ச துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் கண்டெக்டர்.

"என் மைதிலி எப்படி இருக்காளோ… " என்று அந்த அண்ணன் தலையில் கையை வைத்துக் கொண்டே புலம்புகையில் , அந்த அண்ணியின் முகம் குற்ற உணர்ச்சியில் நிறைந்து காணப்பட்டதை சந்தியாவால் நன்கு உணர முடிந்தது.

"என்ன அண்ணி… நீங்களுமா…???"

"அட நீ வேற… கல்யாணம் ஆன புதுசுல , மைதிலி பத்தி சொன்னது தான் பாக்கி… இன்னைக்கு வரைக்கும் அவளுக்குள்ள ஒரு சந்தேகம்… அவள் என்னோட 'எக்ஸ்' ன்னு…." என்று சிரித்துக் கொண்டே மனதில் உள்ள வலியை வெளிப்படுத்தினார்.

"இது தான் சார் இந்த உலகம்… காதல் ன்ற வார்த்தை இன்னைக்கு சமூகத்துல என்னமோ அது தாம்பத்தியத்தில் முடியும் ஆண் – பெண்ணின் உறவுக்கான சொல்லாக சித்தரிக்கபட்டுவிட்டது… அது பொதுச் சொல் என்பதை எல்லாரும் மறந்து போறாங்க… எல்லா உறவுகளுக்குமான பொதுச் சொல் தான் காதல்… இதையெல்லாம் சமூகத்துக்குப் புரிய வைக்கத் தான் நான் கொஞ்சம் பிச்சியானேன்… என் அண்ணனுக்கான நேரத்தை குறைசிட்டேன்… ஆனால் உறவுகளும் உயிர்களும் தினம் தினம் இது போன்ற தவறான புரிதல் , பொசசிவஸ்நெஸ் ன்னு பல மண்ணாங்கட்டி காரணத்தில போய்ட்டு தான் இருக்கு… இதுக்கு முற்றுப்புள்ளியே இல்லை… " என்று விரக்தியில் சொல்லிக் கொண்டே வெறிக்க மேகங்கள் இல்லாமல் வெறும் கருமையான வானில் தவழ்ந்து கொண்டிருக்கும் நிலவைப் பார்க்கத் தொடங்கினாள்.

யாருக்கென்று தெரியாமல் தினம் காயும் நிலவு போல , தன் கதையைச் சொல்வதனால் யாருக்கென்ன லாபம் என்று பிரதிபலன் பார்க்காமல் தன்னை பெற்ற தாய்க்கும் தன்னை காப்பாற்றும் தெய்வத்திற்கும் இணையாகக் காதலித்து , இன்று அவனுடைய கடைசி நிமிடங்களை எட்டி பிடிக்க முயலும் தறுவாயில் உள்ள "அருண்" உடனான கடந்த ஒரு வருட நினைவலைகளை மூவரிடமும் பகிர்ந்து கொண்டாள் சந்தியா.

 

இதற்குள் மனதின் அசதி நீங்கி , விழித்துப் பார்த்த டிரைவர் மூவரையும் வண்டியில் ஏறும்படி சைகை காட்ட , வேகமாக மூவரும் இருக்கையில் வந்தமர , சீரான வேகத்தில் 1 மணிக்கெல்லாம் வண்டி திருச்சியைத் தாண்டி பயணித்துக் கொண்டிருந்தது.


துக்கத்தில் யாருக்கும் தூக்கம் வராமல் பெரிய நிசப்தத்தோடு மதுரையை எதிர்நோக்கிக் காத்திருந்த வேளையில் ஜன்னல் கண்ணாடியில் தன்னையும் மறந்து அசந்து சாய்ந்து தூங்கிய சந்தியாவை , பக்கத்து இருக்கை அண்ணன் எழுப்பினார்.

"சந்தியா… தொந்தரவு பன்றேன்னு தப்பா நினைச்சிக்காத… என் பிரெண்ட் யூ. எஸ் ல இருக்கான்… அவன் அப்பா நீ சொன்ன ஹாஸ்பிட்டல்ல சீனியர் டாக்டர்… அவன் கிட்டப் பேசி , அவங்க அப்பாகிட்டயும் பேச சொல்லிட்டேன்… உன் அருணோடு நிலைமை பத்தி விசாரிச்சிட்டேன்… ஜஸ்ட் ஒரு பத்து நிமிசம் முன்னாடி தான் பிரெண்டோட அப்பா ஹாஸ்பிட்டல் கிளம்பி இருக்காரு… நீ போன்றதுக்குள்ள அவரு அங்க இருப்பாரு… அவரால முடிஞ்ச எல்லா  ஹெல்பையும் பண்ணுவார்…" என்று சொல்லிக் கொண்டிருக்கையிலே சந்தியா தனது கையில் வாட்சை பார்த்தாள்.

"மணி… 2 30 ஆகுது… இந்த நேரத்துல ஏன் எல்லாரையும் தொந்தரவு பன்றீங்க…" என்று வார்த்தைகள் இன்றி இழுத்தாள்.

இன்னொரு புறம் சந்தியாவை இது மிகப் பெரிய குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தியது. உண்மையிலே தன் தவற்றை அக்கணம் தான் உணர தொடங்கினாள் , அதுவும் மிகக் கால தாமதமாக. வழியில் சந்தித்த ஒரு சக பயணியின் கஷ்டத்தை அறிந்ததும் , பல்லாயிரம் மைல் கடந்து உள்ள நண்பனைத் தொடர்பு கொண்டு அவர் மூலம் தன் அப்பாவை அழைத்து நிலைமையை எப்படியாவது சரி செய்திடத் துடிக்கும் அந்த அண்ணனின் பேராசையைக் கண்டு உண்மையில் குற்ற உணர்ச்சியின் உச்சத்தில் ஒரு கணம் செத்து மீண்டும் அழுகையோடு உயிர்த்தெழுந்தாள்.

"ஒரு அரை நிமிசம் தன் அண்ணன் போனை அட்டென்ட் பண்ணி இருந்தா , இல்லை அவன் பேசும் பொழுது கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா….இன்னைக்கு அவன் சந்தோசமா என்கிட்ட பேசிட்டு இருந்திருப்பானே… " என்று மீண்டும் அழத் தொடங்கினாள்.

ஆம் போன வாரம் நடந்தது இது தான்…!

சென்னை , ஞாயிறு நண்பகல்:

"டேய் தங்கம்… சென்னை வரை ஒரு வேலையா வந்திருக்கேன் டா…  போகும் பொழுது வீட்டுக்கு வந்து அம்மாவை பாத்துட்டு போறனே…" என்றான் அருண் போனில் ஞாயிறு மாலை 3 30 மணியளவில்

"தெரியலை அண்ணா… நாளைக்கு காலையில 5 மணிக்குப் பாண்டிச்சேரி போலாம்ன்னு பிளான் ஓடிட்டு இருக்கு வீட்ல… இப்பவே மணி 4 ஆச்சு… நீங்க இப்ப சென்னையில இருந்து கிளம்புனீங்கன்னா வரவே 9 ஆகிடும்… காலையில உங்களால 5 மணிக்கு எழுந்திருச்சி ஊருக்குக் கிளம்ப முடியுமா…?" என்றாள் வார்த்தையில் பிடி இல்லாமல்.

"ஆமால… எப்படியும் நைட் 10 ஆகிடும்… ஒன்னும் பிரச்சனை இல்லை… நான் பாண்டி வரேன்… அப்படியே அம்மா கூட நிறையப் பேச டைம் கிடைக்கும்…"

"கார்ல இடம் இல்லை , யாரை கூட்டிட்டு யாரை விட்டுட்டு போறதுன்னு தெரியலை... பத்தாததுக்கு இன்னும் கன்பார்ம் ஆகலை…" என்று இழுத்தாள்.

"நோ வொரிஸ்… நீ பிளான் கன்பார்ம் ஆனதும் சொல்லு , நான் டைரக்டா பாண்டி வந்துறேன்… இல்லாட்டி காலையில கிளம்பி வீட்டுக்கு வந்து அம்மாவ பாத்துட்டு ஊருக்கு போறேன்" என்றான்.

"சரிடா அண்ணா… நான் போனை வச்சிடுறேன்…" என்று காலை கட் செய்தவள் அவனை அப்படியே மறந்து போனாள் தனது தொகுப்பாளினி வேலையில் மூழ்கிப்போகவே. ஆம் ஏதோ லயன்ஸ் சங்க நண்பர் கேட்டுக் கொள்ள ஒத்து கொண்ட வேலைக்காகத் தன்னை வருத்தி , வீட்டில் அம்மாவையும் வருத்தி உப்பு காசுக்குப் பெறாத விசயத்திற்காகச் சாப்பிடாமல் கூட வேலை பார்த்ததில் மாலை 7 மணிக்கெல்லாம் தலைப் பாரமாகி வெடித்து விடுவது போல வலி எடுக்கத் தொடங்கியது.

இருப்பது பத்தாதற்குத் தேவையில்லாமல் பெருந்தன்மையாய் தலை கொடுத்திருந்த அனாதை ஆசிரம வேலைகளும் முடிக்காமல் இருக்க , வந்த டென்சனை எல்லாம் சாப்பிடக் கூப்பிட்ட அம்மாவிடம் காட்டி , அம்மாவையும் அழ வைத்திருந்தாள்.

செயற்கை மண்டைக் கனமும் , அதன்பார் உண்டான இயற்கை மண்டைக்கனமும் ஒன்று சேர படுத்தி எடுத்துக் கொண்டிருந்த வேலையில் , மீண்டும் 8 மணி வாக்கில் அருண் அழைத்தான் ஏதாவது பிளான் அப்டேட்  இருக்கிறதா என்று அறிய.

வழக்கமாக இந்த ஒருவருடம் அவள் செய்து வந்ததையே செவ்வனே மீண்டும் செய்தாள். ஆம் வெளியிடத்து டென்சனை எல்லாம் எப்படி அம்மாவிடம் கொட்டுவாளோ , அதே போல தன் அண்ணன் போன் அழைப்புகளைக் கட் செய்துவிடுவாள். 1000 கால்களுக்கு இரண்டு கால் அட்டென்ட் செய்திருந்தாளே ஆச்சரியம் . ஆனால் ஒவ்வொரு முறையும் அருண் கால் செய்து செய்து ஏற்பட்ட காயம் காலப் போக்கில் பழகிப் போனது. அதே போலத் தான் இம்முறையும் பெரிதாக எரிச்சல் ஏதும் இல்லாமல் இலகுவாக எடுத்துக் கொண்டு , வாட்ஸ்அபில் மெசேஜ் அனுப்பினான்.

"தங்கம்… நான் மயிலை வந்து இருக்கேன்.. இப்ப கோவிலுக்குள்ள போறேன்… சிக்னல் இருக்காது… பிளிஸ் அப்டேட் தி பிளான்…" என்று அனுப்பும் பொழுதே சிங்கள் டிக் மட்டுமே வந்தது. சரி டென்சன்ல டேட்டாவ ஆப் செய்து விட்டாள் போல என்று மயிலை கபாலீச்சுவரர் கோவிலுக்குள் நுழைந்தான். ஆனால் மணிக்கொருமுறை மொபைலை எடுத்து டெலிவரி ஆகிவிட்டதா என்று சரிபார்க்கத் துளி கூட அருண் தவறவில்லை.

சரியாக 9 30 மணிக்குப் பள்ளியறை பார்த்துக் கொண்டிருந்து பொழுது மெசேஜ் டோன் வரவே , அந்த மும்முறத்திலும் மொபைலை எடுத்துப் பார்த்தான். அது அருணின் வழக்கம் , ஆம் மெசேஜ் அடிக்ட் எல்லாம் கிடையாது. தன் உற்றவர்களை தன் பதிலுக்காக முடிந்த வரை காக்க வைக்கக் கூடாது என்ற எண்ணம் , மேலும் உறவுகளைத் தாண்டி தான் உலக மக்கள் என்பதில் மிகத் தெளிவானவன். பிரதமரே ஆயினும் , தங்கச்சி வெயிடிங் வந்தால் உடனடியாக காலை கட் செய்து தங்கையுடன் பேசத் தொடங்குவான். அவன் கொள்கையை இடைமறித்துப் பேசி இதுவரை யாரும் அவனிடம் வென்றதில்லை , ஆனால் தங்கை ஒருவளை தவிர. ஆம் அவள் இதனைத் தவறு என்று சொல்லி இந்த ஒரு வருடத்தில் கோவ பட்டு இருக்கிறாளே தவிர , ஒரு நாளும் அருணின் பதிலைக் காது கொடுத்துக் கேட்டதில்லை.

இதுபோலத் தான் சொல்ல நினைத்த விசயங்களை , அவள் வேலை வேலை என்று காது கொடுத்துக் கேட்காமல்  வளர்ந்து போன பிரச்சினைகளைப் பேச "ஒரு மணி நேரம்" ஒதுக்கச் சொல்லிக் கேட்டே ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் முன்பை விட அவள் செய்கை மோசமானதே ஒழிய , மாறிய பாடில்லை.

அருணுக்கோ ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தனக்கு மிகவும் தூரமானவராக இருந்தாலே கொஞ்சம் கூட பயப்படாமல் கூப்பிட்டுப் புத்திமதி கூறி திருத்தாமல் விடமாட்டான். அப்படிப் பட்டவன் தன் உற்ற தங்கை தம்பிகளை எப்படி விடுவான். ஆதலால் தான் அவனும் ஒரு வருடமாகப் போராடி வருகிறான் , *ஒரு மணி நேரம்* கேட்டு.

இந்த ஒரு வருடத்தில் கிட்டதட்ட 7 மாதங்கள் பேசாமலே கழிந்தது போனது. அதற்குக் காரணம் அருணின் குரூர வார்த்தை பிரயோகமும் , சந்தியாவின் ஆக உச்சமான உதாசினமும் மெத்தனமும் தான்.

"நான் ரொம்ப அப்செட்டாக இருக்கேன்…  நீடு ரிலாக்சேசன்.. குட் நைட்…" என்று சந்தியாவிடம் இருந்து வந்த குருந்தகவலை பார்த்துவிட்டு , மொபைலை சட்டைப் பையில் வைக்கவும் பள்ளியறை பூஜை முடிந்து கதவுகள் தடார் தடார் எனச் சாத்தும் சத்தம் கேட்டது.

கோயிலை விட்டு வெளியே வந்ததும் குளிருக்கு இதமாக ஒரு டீயை மட்டும் குடித்துவிட்டு , நண்பன் அறைக்கு வந்து சேர்கையில் மணி 1 க்கு மேல் ஆனது. நண்பனிடம் ஏதேதோ கதைகள் எல்லாம் பேசிக் கொண்டிருக்க , காலை நாலு மணிக்குக் கிளம்புவதற்காக வைத்த 3 மணி அலாரம் அடிக்கும் பொழுது தான் சுதாரிப்பானான் நேரம் விரையமானதை உணர்ந்தான்.

"சரிடா… நான் போய் குளிச்சிட்டு கிளம்புறேன்… " என்று எழுந்தவனை நண்பன் திசைதிருப்ப முயற்ச்சித்தான்.

"டேய் அருண்… இருந்தது இருந்துட்ட… காஞ்சிபுரம் வரை வந்துட்டு , அங்க இருந்து அப்படியே திருவண்ணாமலை போயேன்டா… " என்றான் நண்பன்.

"இல்லைடா… திடீர்ன்னு மெசேஜ் வந்தா பாண்டி போகனும்… அதான் வெயிடிங்…" என்று இழுத்தான்.

"அடேய் படுத்தாதடா… அதான் இப்ப வரை வரலைல… ஒழுங்கா எந்திரிச்சி கிளம்பு… கார் வந்துரும்…" என்று சொல்லிக் கிளம்பச் சென்றான்.

அரைமனதுடன் நண்பனுடன் கிளம்பியவன் காஞ்சிபுரம் வந்தடைகையில் பொழுது நன்றாகப் புலர்ந்திருந்தது. விஷ்னு காஞ்சியில் வரதனைப் பார்த்துவிட்டு , கச்சபேஸ்வரர் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கையில் மொபைலை எடுத்து மீண்டும் வாட்ஸ்அப் பார்க்கையில் தான் அதிகாலை அனுப்பிய மெசேஜ்கள் புளு டிக் காட்டியது. எழுந்துவிட்டாள் என்று எண்ணிப் பரபரப்பாக அவளுக்குக் கால் செய்தான்.


வழக்கம் போல அருண் காலை கட் செய்துவிட்டு "தூங்கிட்டு இருக்கேன்…" என்று மெசேஜ் மட்டும் அனுப்பினாள்.

"சரி தங்கம்… நான் காஞ்சிபுரத்தில் இருக்கேன்,  பத்து மணிக்கு இங்க இருந்து கிளம்பிடுவேன்… மதியம் 3 மணிக்கு வீட்டுக்கு வந்துறேன்…" என்று மெசேஜ் அனுப்பிவிட்டு மீண்டும் நண்பர்களுடன் மூழ்கினான்.

சரியாக பதினொரு மணிக்கெல்லாம் வேலை எல்லாம் முடியவே , நண்பர்கள் மீண்டும் சென்னை கிளம்புகையில் "டேய்…  நான் திருவண்ணாமலை போறேன்… ஆட்டோ பிடிச்சி பஸ் ஸ்டான்ட் போய்கிறேன்…." என்று கூறிவிட்டு பஸ் ஸ்டான்ட் நோக்கி தனிமையில் நடந்தான்.

"தங்கம்… வேலை இப்ப தான் முடிஞ்சது… நான் பஸ் ஏற போறேன்… " என்று மெசேஜ் அனுப்பிவிட்டு மெல்லமாக நடந்து வந்து பஸ் ஸ்டேன்ட் நுழைகையில் மணி 12 ஆனது. அதுவரையிலும் மெசேஜ் படிக்காமலே இருந்தது.

அருணுக்கு உள்ளூர ஒரு சந்தேகம் எழுந்தது, ஒரு வேளை வேறு எங்காவது சென்று இருப்பாளோ என்று. எங்கே தான் வீட்டுக்குப் போய் ஆள் இல்லாமல் போய்விட போகுது என்று குழப்பத்தில் சந்தியாவிற்கு போன் செய்தான். இம்முறையும் வழக்கம் போலக் காலை கட் செய்யவும் , அருணுக்கு எரிச்சலும் கொஞ்சம் கோவம் வந்தது. அந்நிலையிலும் அவள் மீது கொண்ட அதீத அன்பு மயக்கத்தால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு , பஸ் ஸ்டான்ட் நாற்காலியில் குப்பைகளுக்கு மத்தியில் புகையிலை நாற்றத்தில் மௌனமாய் சந்தியாவின் போன் காலை எதிர்பார்த்து  அமர்ந்திருந்தான்.

இப்படியே கிட்டதட்ட ஒரு மணி நேரம் அமைதியாகக் காத்திருந்தவன் , கொசுக்கடி தாளாமல் பொறுமை இழந்து மீண்டும் அழைக்கையில் காலை மீண்டும் கட் செய்தாள். அந்த சமயம் மதுரை செல்லும் பேருந்து ஒன்று வந்து நின்றது.

ஒரு புறம் கோவமும் மற்றொருபுறம் அவளுக்கு என்ன ஆயிற்றோ என்ற குழப்பமும் அவன் மனதைப் பிடுங்கித் தின்ன , மதுரைக்கு பஸ் ஏறலாமா இல்லை திருவண்ணாமலை பஸ் ஏறலாமா என்று பெரும் தடுமாற்றத்தில் நின்று கொண்டிருக்கையில், சந்தியாவின் அம்மா மொபைலுக்கு அழைத்தான். அவன் போதாத நேரம் தான் என்னவோ , சோதனைக்கு என்றே அதுவும் பதினொரு மணியில் இருந்து நாட் ரீச்சபள் என்றே வந்து கொண்டிருந்தது.

கோவமும் ஏமாற்றமும் நிறைந்த மனதைத் தேற்றிக் கொண்டு மதுரை பஸ்சில் ஏறி அமர்ந்தான். மெல்லமாக கூட்டம் சேர ஆரம்பித்ததும் , கண்டெக்டர் டிக்கெட் போட ஆரம்பித்து இருந்தார். வண்டியை எடுக்க டிரைவர் ஏறி அமர்ந்து கொண்டிருந்த தருணத்தில்,  அவளின் அம்மாவே அருண் மொபைலுக்கு அழைத்தார்.

"தம்பி… எங்க தான் இருக்க… காலையிலே வரேன்னு தங்கச்சி சொன்னா… இன்னும் ஆளை கானோம்…" என்றார்.

"அம்மா… நானும் தங்கச்சிக்கு மூனு வாட்டி போன் போட்டுடேன்… பல மெசேஜ் அனுப்பிட்டேன்… காலையும் எடுக்க மாட்டிக்கிறா… மெசேஜ்க்கு ரிப்ளையும் பண்ண மாட்டிக்கிறா… அதான் ஊருக்கு போகலாம்ன்னு மதுரைக்கு பஸ் ஏறி உக்காந்து இருக்கேன்…" என்றான் கலக்கமாக.

"அட… அவள் வெளில போய் இருக்கா தம்பி… அவளும் திருந்த மாட்டாள் , நீயும் திருந்த மாட்ட… பர்ஸ்ட் பஸ்சை விட்டு இறங்கு…  ஒழுங்கா வீட்டுக்கு வந்துட்டு போ…" என்று கோவத்துடன் சொல்லி போனை வைத்தார்.

என்னவோ தெரியவில்லை சந்தியா அம்மாவிடம் இருந்து போன் வந்தது முதல் மனம் பஞ்சு போல லேசாக மாறிப்போனது. அந்த சந்தோசத்தில் திருவண்ணாமலை பஸ்சில் ஏறி அமரவும் தூக்கம்  நன்றாக வரவே அப்படியே கண் அசந்து தூங்கி விட்டான். வெயில் சரிந்த மாலை நெருங்கிய கொண்டிருக்க ,  ஆரணி பஸ் ஸ்டான்டுக்குள் வண்டி நுழையும் பொழுது மணி 3 30 ஆகிவிட்டது. பஸ் ஸ்டாண்ட் சத்தம் கேட்டு கண் முழித்தவன் ,  மொபைலை எடுத்து கைகள் பரபரக்கத் தங்கச்சி ஏதேனும் மெசேஜ் அனுப்பி இருக்கிறாளா என்று பார்த்து மீண்டும் ஏமாற்றம் அடைந்தான்.

சோகத்தில் மீண்டும் துளி நம்பிக்கையும் அற்று அவளுக்குக் கால் செய்தான். நீண்ட நாள் கழித்து தங்கையையும் அம்மாவையும் பார்க்க வருகிறோம் , அதுவும் அவள் வீட்டிற்கு வருகிறோம் என்று அவள் தானே நமக்கு போன் போட்டு ஆவலாய் விசாரிக்க வேண்டும். ஆனால் நிலைமையோ தலைகீழாக இருக்கிறதே என்று வெதும்பினான். வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்னவன் வருகிறானா , இல்லையா என்று கூட கேட்காமல் , முன்னிரவு முதல் காலை கட் மட்டுமே செய்து கொண்டிருப்பதில் சற்று அதீத எரிச்சலில் தான் இருந்தான் அருண்.

ஔவையின் மதியாதார் தலை வாசல் மிதியாதே என்ற வரிகள் நினைவுக்கு வந்தும் , தங்கை என்பதால் மானமற்றவனாய் அவளுக்கு மீண்டும் கால் செய்தான்.

இம்முறை தெய்வ கடாட்சம் போலும் , ரிங் ஆனதும் அழைப்பை ஏற்கவும் சந்தோசத்தில் திக்கு முக்காடி போனான் அருண்.

இதுவரை ஏதேதோ பேச நினைத்தவன் , அவள் ஏதேதோ கேட்பாள் என்று நினைத்தது எல்லாம் தலைகீழாக மாறிப்போனது. அப்படி ஒருசொல்லை இது வரை யாரும் அருணின் பின்னாடி கூடச் சொன்னதாக அவன் கேள்வியுற்றது இல்லை.

"உனக்குக் கொஞ்சம் கூட அறிவே இருக்காதா எத்தனை வாட்டி சொன்னாலும்…" என்று தான் தொடங்கினாள் சந்தியா போனை எடுத்ததும்.

அந்த நிலையிலும் பாசம் தன் கண்னை மறைக்க கோவத்தை மறைத்துக் கொண்டு "தங்கம்… மன்னிச்சிடுடா… வீட்டுக்கு கிளம்பிட்டேன் , அதான் இருக்கியா இல்லையான்னு செக் பண்ணத் தான் கால் பன்னேன்… பிளிஸ் மன்னிச்சிடு… " என்றான் வழக்கம் போலக் கெஞ்சலாக.

"ஏன் எத்தனை வாட்டி சொன்னாலும் புத்தியே வராதா… அறிவு இருக்கா , இல்லையா… நான் வேலையில இருக்கும் பொழுது போன் போடாதீங்கன்னு எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்…" என்றாள்.

அவளின் கடுஞ்சொல்லைக் கேட்டதும் அவமானத்தில் கூனி குறுகி , வாய் குளற வார்த்தைகள் பாதி ஒலிப்புகளுடன் "இல்லை … வீட்ல இருக்கியான்னு தெரியலை… அம்மாக்கும் போன் போகலை , அதான் செகன்ட் டைம் உனக்கு டிரை பன்னேன்…" என்று இழுத்தான்.

அருண் நிலையைக் கொஞ்சம் கூட உணராத சந்தியா இம்முறை பதிலுக்கு உச்சபட்ச வார்த்தையால் கொன்றாள். அவள் உதிர்த்த அந்த வார்த்தை பிரயோகம் தான் அன்றே அவனை நடை பினமாக்கியதோடு அன்று இரவே அவனை பினமாக்கிட படுக்கை வரை அனுப்பி இருந்தது.

கிட்டதட்ட ஐந்து நிமிடங்களாகக் கால் செய்தமைக்காக வெறுமனே மன்னிப்புகளைக் கெஞ்சிக் கொண்டிருந்தவனிடம் பதிலுக்கு மிக உச்சமாக "நீங்க தான் வெட்டி … ஊர் சுத்துறீங்க… உங்களை மாதிரின்னு நினைச்சீங்களா என்னை… தலைக்கு மேல எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா… சும்மா சும்மா போன் போட்டு நொய் நொய்ன்னு தொந்தரவு பன்றீங்க… படிச்சி இருக்கீங்களா இல்லையா…" என்று அவள் சொன்னது தான் பாக்கி , பதில் ஏதும் பேச மனமில்லாமல் காலை கட் செய்தான்.

தப்பே செய்யாமல் அத்தனை மன்னிப்புகள் கேட்டது கூட அவனைத் துயரத்தில் ஆழ்த்தவில்லை , ஆனால் அறிவிருக்கா என்று கேட்டது அருணை மிகவும் உடைந்து போகச் செய்தது. ஆயிரம் கடப்பாறைகளை நெஞ்சில் விட்டது போல உணர்ந்தான். ஆசைஆசையாய் வீட்டுக்கு வரும் வழியில் இப்படி ஒரு இழி சொல்லைக் கேட்டு மனம் சுக்குநூறாக உடைந்திருந்தது.

அழுது அழுது அப்படியே கண்ணயர்ந்து போக , "கலெக்டர் ஆபிசு இறங்கிக்கோ …" என்ற வார்த்தை அவனை எழுப்பியது. கண்டக்டர் குரல் கேட்டு முழித்துப் பார்த்தவன் தன் உடம்பில் இன்னமும் உயிர் இருக்கிறது என்பதை உணர்வதற்குள்   பஸ் ஸ்டேன்டிற்குள் வண்டி நுழைந்தது.

உயிருள்ள பிணமாய் பஸ்சை விட்டு கீழ் இறங்கியவன் மனதிலும் நினைவிலும் நடந்த எல்லாம் அழிந்து , முதல் முறை அவளுடன் இதே திருவண்ணாமலை பஸ் நிலையம் வந்திறங்கிய பொழுது தன் மணிக்கட்டை நீட்டிக் கேட்ட "முதல் முத்தம்" மட்டும் அப்படியே அவன் கண் முன்னே நிழலாடியது.

தன்னை நினைத்துச் சிரித்துக் கொண்டவன் நீண்ட சிந்தனைக்குப் பின் , மெல்லமாய் நடைபோட்டு பெரிய கோவிலை நோக்கி நடந்தான். மணி 6 ஆகியும்  அருணை இன்னும் காணவில்லை என்று சந்தியாவின் அம்மா அருணுக்கு அழைத்தாள்.

உண்மையில் விரக்தியின் உச்சத்தில் இருந்தவன் காதுகளை மொபைல் அழைப்பு எட்டவே இல்லை. கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள கடையில் செருப்பு மற்றும் பைகளை வைத்து விட்டு குழப்பங்களுடன் உள்ளே நுழைந்தவன் கூட்டம் பெரியதாக இல்லாத காரணத்தால் , சீக்கிரமே மூலஸ்தானம் சென்று தரிசனம் முடிந்தது.


அன்றைய நிலையில் அவன் ஆசை  தங்கச்சி ஒருவள் தான் அவனை மதிக்கவில்லை , ஆனால் மற்றவர்கள் மத்தியில் அருண் எல்லா  ஊர்காரங்களும் அறிந்த பிரபலம். ஆனால்  என்றுமே தன் தங்கையிடம் அந்த தலைக்கனத்தை அவன் காட்டியதில்லை.

அன்றும் அப்படி தான் , இவன் முகத்தைப் பார்த்ததும் வரவேற்று சீக்கிரமே தரிசனம் செய்ய உதவினர். எப்பொழுதுமே எந்த கோவில் சென்றாலும் "இத்திருவிடம் மீண்டும் வர ஆசி புரி" அன்று வேண்டுபவன் , அன்று சற்று வித்தியாசமாய் விகாரமாய் வேண்டிக்கொண்டான்.

"இதுவே எனது கடைசி திருவண்ணாமலை பயணமாக அமையட்டும்…" என்று வேண்டிவிட்டு , அதே குழப்பங்களோடு வெளியே வந்தான். அப்படியே ஏதும் சொல்லாமல் சென்றால் முறையில்லை என்றெண்ணி சந்தியாவின் அம்மாவுக்குக் கால் செய்து நடந்தவற்றை எல்லாம் கூறிவிட்டு , தான் மதுரை கிளம்புவதாகத் தகவல் சொல்லிவிட்டு அவர்களின் பதிலைக் கூட  கேட்க மனமில்லாமல் காலை கட் செய்தான்.

இந்த ஜென்மத்தில் தான் இப்படி ஆகிவிட்டது , அடுத்த ஜென்மத்திலாவது அவளுக்குப் பிடித்த அண்ணனாகப் பிறக்க வேண்டும் என்று மனதினுள் வேண்டியவாறே கொடி மரம் கீழே விழுந்து வணங்கிவிட்டு கிளி கோபுர கடந்து வந்தான் . இதற்கிடையில்  தொடர்ச்சியாக சந்தியாவின் அம்மா கால் செய்தும் அதனை எடுக்காமல் கோவிலை விட்டுக் கிளம்பத் தொடங்கினான்.

கொடிமரத்தில் இருந்து வல்லாள மகாராஜா கோபுரம் வருவதற்குள் இரண்டு முறை வேட்டி இடையில் இருந்து நழுவ , மீண்டும் மீண்டும் இறுக்கிக் கட்டினான். தனது மனதில் நொறுங்கிப் போனதில் பிடி இல்லாமல் போகவே , அது அப்படியே அவன் வேட்டி கட்டிலும் பிரதிபலித்தது.

வல்லாள மகாராஜா கோபுரத்தை விட்டு படிக்கட்டுகளில் இறங்குகையில் , இடையில் சரியாக சுற்றபடாது இருந்த வேட்டி இடறி கீழே சரிய , அதில் கால் மாட்டியதில் அப்படியே உருண்டு கீழே விழுந்தான். என்ன நடந்தது என்பதைச் சுதாரிக்க முடியாததால் கீழே விழுகையில் பின் மண்டையிலும் , உருளும் பொழுது முகத்தின் தாடையிலும் நல்ல அடி. படிகளில் விழுந்த உருண்டதில் பேச்சு மூச்சுப் பேச்சு அற்றவனாய் கிடந்தான்.

அருண் உருண்டு விழுவதைக் கண்ட அருகில் இருந்தோர் ஓடி வந்து , அவசர ஊர்தி பேசி அரசு மருத்துவமனை எடுத்துச் செல்லும் இடைப்பட்ட நேரத்தில் , உதவிக்கு வந்த நபர் டயல் லிஸ்டில் கடைசியாக இருந்த சந்தியா மொபைல் எண்ணுக்கு நான்கைந்து முறை முயற்சிக்கையில் வழக்கம் போலக் கட் செய்ய , அடுத்ததாக இருந்த அவளின் அம்மாவிற்குத் தகவல் சொல்லிவிட்டு போனை ஆம்புலன்சில் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

போனில் விசயம் அறிந்து பதறிப் போய் சந்தியாவின் அம்மா , அப்பா மருத்துவமனை விரைய அதற்குள் அருணின் வீட்டிற்கும் தகவல் சென்றது.

அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்துவிட்டு பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கே மறுநாள் மாலை வரை அருண் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போகவே தான் , அவன் பெற்றோர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மதுரைக்கே மேல் சிகிச்சைக்குக் கூட்டிச் சென்றனர்.

சந்தியாவின் அப்பாவும் , அம்மாவும் மதுரைக்குக் கூடவே சென்று ஒரு வாரமாக கவலைக்கிடமாக உள்ள அருணை விட்டு நீங்காது , தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தனர்.

லயன்ஸ் சங்க விழாவில் பிசியாக இருந்த சந்தியா விழா முடிந்து இரவு 9 மணிக்கு தன் மொபைலை ஆன் செய்ததும் , அம்மாவிடம் இருந்து அருண் கீழே விழுந்த செய்தியைக் கேட்ட நொடி முதல் பதறிப் போய் , தன் உயிர் தன்னில் இல்லாமல் பேதலித்துப் போனாள்.

அன்று இரவே பாண்டிக்குச் சென்றவள் அங்கிருந்து மதுரைக்கும் சென்று கூடவே இருந்தாள். அவள் செய்த தவறால் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள் சந்தியா.

ஆனந்த் நடந்த விசயம் எல்லாவற்றையும் இருவீட்டு  பெற்றவர்களிடம் சொல்லவும் ஏனையோர் எல்லோரும் சந்தியாவை அக்கணம் முதல் குற்றவாளியாகவே பார்க்கத் தொடங்கினர் , 

ஆதலால் தான் அன்று காலை வரை மதுரையில் இருந்தவள், அதற்கு மேலும் எல்லோரின் குற்றப் பார்வையையும் தன்னால் தாங்கிக் கொள்ள இயலாது என்று யாரையும் கேட்காமல் சொல்லாமல் திருவண்ணாமலைக்குக் கிளம்பி மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தாள்.

ஆனால் அவள் கிளம்பிய பின்னர் மெல்ல மோசமடைய தொடங்கிய அருணின் உடல் நிலை மாலைக்குப் பின் மேலும் கவலைக்கிடமானது. ஆயிரம் கோபம் இருந்தாலும் அருண் உயிருக்கு உயிராக நேசித்த தங்கை என்ற காரணத்தால் எல்லா நண்பர்களும் வற்புறுத்த , ஆனந்த் போன் செய்து தகவல் சொன்னான்.

தகவல் கேட்ட நொடி முதல் அழுது அழுது கண்கள் சிவக்க முகமும் வீங்கியது. தன் நிலையை யாருக்கும் புரிய வைத்திட இயலா மன துயறுடன் மீண்டும் மதுரை நோக்கி வந்த பேருந்திலே மீண்டும் மதுரை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள்.

***

சந்தியாவுக்காக டீ குடிக்கக் கூட நிப்பாட்டாமல் டிரைவர் விரைந்து ஓட்டிக் கொண்டு வந்ததால் சரியாக அதிகாலை மணி 2 50 க்கு எல்லாம் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டேன்டுக்குள் வண்டி நுழைந்தது.

துயர் நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த வேளையில் கடவுள் போல வந்து ஆதரவாய் பயணித்த பக்கத்து இருக்கை அண்ணன் - அண்ணியிடம் சீனியர் டாக்டர் நம்பரைப் பெற்றுக் கொண்டு , டிரைவர் கண்டக்டரிடமும் தவறாமல் நன்றியைச் சொல்லிவிட்டு விடை பெறப் பைகளை எடுத்துக் கொண்டு தயாராகிக் கொண்டிருந்தாள்.

"ஏம்மா… நில்லு… இந்தா என் போன் நம்பர்… போயிட்டு தகவல் சொல்லு… ஒன்னும் பயப்படாத… உங்க அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது… நீ தைரியமா போ… எல்லாம் அந்த சொக்கநாதர் பாத்துக்குவான்…" என்று கண்டக்டர் ஒரு பேப்பரில் போன் நம்பர் எழுதிக் கொடுத்து வழி அனுப்பினார்.

உடைந்து போய் இருந்தவளுக்கு உண்மையில் கண்டக்டர் உதிர்த்த வார்த்தைகள் யாவும் சந்தியாவிற்கு அந்த நொடியில் பெரும் ஆறுதலாக மட்டும் இல்லாமல் அந்த சொக்கநாதர் வாக்கு போலவே உணர்ந்தாள். தெய்வ வாக்கிற்க்கு நன்றி சொல்லும் விதமாகச் சிறு புன்னகையுடன் கையசைத்துவிட்டு ஆட்டோவில் மருத்துவமனை நோக்கி விரைந்தாள்.

அருண் இருக்கும் மருத்துவமனையை நெருங்க நெருங்க இதயத் துடிப்பு மத்தளம் வாசிப்பது போல வெளியே கேட்க , அதற்குச் சற்றும் சளைக்காத கண்கள் கண்ணீரைத் தாரை தாரையாய் கொட்ட ஆரம்பித்தது. அதிகாலை சரியாக மணி 3 30 மணியளவில் மருத்துவமனை வாசலை அடைந்தாள். ஆட்டோவில் இருந்து இறங்கியவள் ஒரு கையால் பர்சில் காசை எடுத்துக் கொண்டே , மறுகையில் மொபைலை எடுத்து ஆனந்த்திற்கு அழைத்தாள்.

"என்ன சந்தியா… எங்க இருக்க…" என்றான் ஆனந்த் பரபரப்பாக.

"அண்ணா… நான் வாசல்ல தான் இருக்கேன்… கேட் பாஸ் இல்லை… கொஞ்சம் கீழ வாங்க…" என்று சொல்லிவிட்டு அடுத்த போன் காலை அந்த சீனியர் டாக்டருக்கு போட்டாள்.

அவருக்கு இருமுறை ரிங் போயும் எடுக்காததால் தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுதே , ஆனந்த் கேட்டிற்கு வந்து சந்தியாவை அழைத்துச் சென்றான்.

லிப்ட் லாபி வரை இருவரும் ஏதும் பேசாமல் நடந்து செல்ல , அந்த மௌனத்தை ஆனந்தே உடைத்தான்.

"அப்பக் கூட நீ உன் வேலையில தான் பிசியா இருக்குற… எப்படி இருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டியா…???" என்றான் கோவமாக லிப்டில் ஏறியதும்.

"உங்களுக்கு உங்க ப்ரெண்ட் முக்கியம்… எனக்கு என் அண்ணன் முக்கியம்… செத்த வாய மூடிட்டு , உங்க வேலையை பாத்துட்டு போங்க…" என்று எரிந்து விழுந்தாள்.


"நீ திருந்தவே மாட்டியா…" என்று சொல்லிக் கொண்டிருக்கையிலே லிப்ட் கெஸ்ட் ரூம் இருக்கும் தளத்தை அடைந்தது. கோவத்தில் ஒரு முறை முறைத்துவிட்டு , மீண்டும் ஐ சி யு இருக்கும் தளத்திற்குப் பொத்தானை அழுத்தினாள்.


"நீ நினைச்ச நேரம் எல்லாம் ஐ சி யு ல விடமாட்டாங்க…" என்றான் ஆனந்த் கோவமாக.


மௌனமாக ஏதும் பதில் பேசாமல் , லிப்ட் கதவுகள் திறந்ததும் வேகமாக ஐ சி யு வார்டுக்குள் நுழைந்து ரிசப்ஷனை நோக்கி ஓடினாள். என்ன செய்யப் போகிறாள் என்று தெரியாமல் , ஆனந்தும் அவளை பின் தொடர்ந்தான்.

"எக்ஸ் கியுஸ் மீ… ஷாகுல் ஹமீது சார் எங்க இருக்காரு… ஹாஸ்பிட்டல் ரீச் ஆகிட்டாருன்னு சொன்னாங்க… கால் பன்னேன்…  புல் ரிங் போகுது… பட் அவர் காலை எடுக்கலை…" என்றாள் சந்தியா படபடப்பாக.

"நீங்க யாரு மேடம்… எந்த பேசன்ட்…"

"அருண்…"

"ஓ … சார் அப்பவே வந்துட்டாரு…அரை மணி நேரமா உள்ள அந்த பேசன்டை தான் அட்டென்ட் பன்னிட்டு இருக்காரு … மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் எடுத்துகிட்டு டியூட்டி டாக்டர்ஸ் கூட மீட்டிங்ல இருக்காரு… நீங்க இப்படி வெயிட் பன்னுங்க… அவரு வெளிய வந்ததும் கூப்பிடுறேன்… " என்று பதில் வந்தது.

ஒரு நிமிடம் தன் தலையில் சம்மட்டியால அடித்தது போல உணர்ந்தாள். யாரென்று கூட தெரியாத நபர் , தன் அண்ணன் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்திற்காக யாரோ ஒருவர் போன் செய்ய , வயது மூப்பைக் கூட கணக்கில் கொள்ளாமல் இந்த நடுராத்திரியில் எழுந்து ஓடி வந்து சேவை செய்து கொண்டிருப்பதை நினைத்து உண்மையில் மிரண்டு போனாள் சந்தியா. பணம் பெயர் புகழை எல்லாம் தாண்டி , இந்த அர்த்த ராத்திரியில் உறவும் அன்பும் தான் இவ்வளவு தூரம் ஓடி வந்து கடமை செய்ய வந்துள்ளதை நினைத்து, அப்பொழுது தான் தன் மீதான குற்றத்தை உணர்ந்தாள்.

கடந்த சில வருடங்களாக உறவுகளுக்கு என்று தான் நேரம் ஒதுக்காமல் பெயர் எடுப்பதற்காகத் திமிராய் திரிந்த நாட்கள் எல்லாம் வேகமாகக் கண்கள் முன் நிழலாட மனம் குற்ற உணர்ச்சியில் தீயாய் எரிந்தது.

சந்தியாவின் முகம் விகாரமாகிப் போனதைக் கண்டு பயந்து போன ஆனந்த் , அங்கே நடப்பது ஒன்றும் புரியாமல் "என்னம்மா சந்தியா , என்ன நடக்குது…??? யார் ஷாகுல் ஹமீது…? " என்றான்.

சந்தியா பதில் ஏதும் சொல்லாமல் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அதன்பின் கேள்வி ஏதும் கேட்காது , தானும் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

சரியாக மணி 4 30 இருக்கும் ,டாக்டர் ஷாகுல் ஹமீது மீட்டிங்கை முடித்து விட்டு  வெளியே வந்தார்.

"சார்… அருண் தங்கச்சி…" என்று இழுத்தாள்.

"ஓ… சந்தியா நீ தானா… சாரிம்மா மீட்டிங்ல இருந்தேன் … அதான் உன் காலை கட் பன்னிட்டேன்… " என்றார்

"சார்… அண்ணனுக்கு…." என்று சொல்லும் பொழுதே அழுகை வந்துவிட்டது.

"ஹே… கமான்… வா ரூம்ல போய் பேசுவோம்… உன் அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது…" என்று உள்ளே கூட்டிச் சென்று சந்தியாவின் அழுகையை நிறுத்தினார்.

"சார்… என் அண்ணனை எப்படியாச்சும்…" என்றவளுக்கு அதற்கு மேல் பேசவராமல் மீண்டும் அழுகை வந்தது.

"ம்மா… உன் அண்ணன் மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் எல்லாம் இப்பதான் பார்த்தேன்… டிஸ்சார்ஜ் போட வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்… காலையில என் ப்ரெண்டு நியூரோ ஸ்பெசலிஸ்ட் கூட்டிட்டு வந்து பார்த்த பிறகு , ஐ வில் சே மை ஒப்பீனியன்…" என்றார்.

"சார்… எங்க அண்ணனை எப்படியாச்சும் காப்பாத்துங்க சார்…." என்று காலில் விழுந்தாள்.

"அட… நீ என்ன்மா… எழுந்திரு…"

"சார்… " என்று சொல்லிய பின் பேச ஏதும் வராததால் , தேம்பித் தேம்பி அழுதாள்.

"ஒரு வாட்டி நான் அவரை பாக்கலாமா… பிளீஸ் என்ன கண்டிசன்னு ஓபனா சொல்லுங்க…" என்று வற்புறுத்தினாள்.

"சாரி டூ சே திஸ்… இப்ப உங்க அண்ணன் உயிர் இருக்குதுன்னா…. அது ஏதோ ஒரு ஏக்கத்துல இருக்கு… அது கிடைச்சதுன்னா…..?!?!??!?" என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே சென்றார்.

உள்ளே நடந்த எல்லாவற்றையும் ஆனந்திடம் சொல்லி அழத் தொடங்க, சந்தியாவை தன் தோளில் சாய்த்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தவன் அதற்கு மேல் தன்னையும் கட்டுப்படுத்த இயலாமல் தானும் அழத் தொடங்கினான்.

"சரி… வா சந்தியா… போய் பாத்துட்டு வரலாம்…" என்று சந்தியாவின் கையை பிடித்து ஐ சி யூ விற்கு கூப்பிட , வேகமாகக் கையை உதறி விட்டு வர மறுத்தாள்.

"வேணாம் ஆனந்த் அண்ணா… என்ன பாக்குற ஏக்கத்துல தான் என் அண்ணன் உசிர வச்சிட்டு இருப்பான்… நான் வரலை…" என்று அழத் தொடங்கினாள். எவ்வளவோ பேசி பார்த்தும் சந்தியா வர மறுத்துவிட்டு , ஐ சி யு வாசல் கதவின் கண்ணாடி வழியே உயிருக்குப் போராடும் தன் ஆசை அண்ணனைப் பார்த்துப் பார்த்து அழுது கொண்டிருந்தாள்.

ஏதோ வேலை காரணமாக , தாமதமாக மதியம் வந்த நியூரோ ஸ்பெசலிஸ்டும் பெரியதாக பாசிடிவ் ரெஸ்பான்ஸ் ஏதும் சொல்லவில்லை. அழுது அழுது வாடி உடைந்து போன சந்தியா , நர்ஸ்களிடமும் டாக்டர்களிடமும் திட்டு வாங்கிக் கொண்டே அன்றைய நாள் பொழுதை எல்லாம் அந்த கண்ணாடி துவாரங்கள் உள்ள இடத்திலே கடத்தினாள்.

இரவு மணி இரவு 8 30 இருக்கும்… என்ன நினைத்தாளோ தெரியாது, ஆவது ஆகட்டும் என்று நர்ஸ்களிடம் கூட கேட்காமல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து வேகமாக அருண் பெட் அருகே சென்றாள்.

மனதைக் கல்லாக்கிக் கொண்டு அங்கே பிணம் போல கிடத்தப்பட்டிருந்த அருணை பார்த்து உதட்டைக் கடித்துக் கொண்டு மனதினுள் அழத் தொடங்கினாள். 

தங்கம் தங்கம் என்று தன்னை ஆசையுடன் அழைக்கும் வாய் அன்று செயலற்று ஆக்சிசன் குழாய்களுக்குள் சிறைப்பட்டுக் கிடந்தது. அன்பாய் தன் முகத்தை வருடும் வலிமையான இரு கரங்களும் , ஏதோ ஒட்ட வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல வலிமையற்ற கிடந்தது.

மெல்ல அருகே சென்று , தன் விரல்களால் அருணின் முடியைக் கோதினாள். தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் , மெல்லமாய் காய்ந்த தன் உதட்டினை நனைக்கச் சட்டென என்ன நினைத்தாளோ தெரியாது அருணின் நெற்றி முடிகளை எல்லாம் ஒதுக்கினாள்.


ஆம் , இத்தனை நாளாய் அவன் ஏங்கிக் கேட்ட ஆசை முத்தம் தரத் தொடங்கினாள். ஜீவன் இழந்த தனது உதட்டினால் மெல்லமாய் நீண்டதொரு முத்தத்தை அவன் நெற்றியில் அவனே எதிர்பாராத நிலையில் வழங்கினாள்.

எத்தனையோ நாட்கள் இந்த நெடியதொரு ஆசை முத்தத்திற்காக அவன் ஏங்கி இருப்பான் , பலமுறை சண்டையிட்டும் இருப்பான் . ஆனால் இப்படி ஒரு தருணத்தில் அவன் ஆசையை நிறைவேற்றுவோம் என்று மனதில் கூட நினைக்கவில்லை சந்தியா.

அவன் பால் கொண்ட ஆழ அன்பினை அவள் கொடுத்த முத்தம் அருணின் மூளைக்கு அன்பை உணர்வுகளாகக் கடத்தவே , முத்தம் கொடுத்த ஓரிரு நிமிடங்களில் பல்ஸ் முன்னேறத் தொடங்கியது. அந்த ஜீவன் நெடுநாளாய் ஏங்கிய ஒன்றைப் பெற்றதும் , மூளை குதூகலித்துச் செயல்படத் துவங்கியது . மூளையின் உத்தரவுகள் இன்றி முடங்கி இருந்த உறுப்புகள் யாவையும் மெதுவாகக் கட்டளைகள் பெறத் தொடங்க ஒவ்வொன்றாய் செயல்பாட்டிற்குத் தயாரானது.

கைவிரல்களில் லேசான அசைவுகளைக் கண்டதும் , சந்தியா வேகமாக ஓடிச் சென்று நர்ஸ்களை அழைத்து ஐ சி யூ வை பரபரப்பாக்கினாள். ஐந்து நிமிடத்தில் காட்சிகள் எல்லாம் விருவிருப்பானது.  டாக்டர்கள் குழு அருணை சூழ்ந்து நின்று விவாதித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை விலக்கிக் கொண்டு ஹமீதும் ஆவலாக அருணை நெருங்கினார்.

ஆனந்தத்தில் கண்களில் நீர் தழும்ப அங்கே நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவை , நர்ஸ்சுகள் வலுக்கட்டாயமாக மீண்டும் வெளியேற்றினர். வேறு வழியின்றி மீண்டும் அந்த சிறு துவாரத்தின் வழியே ஆவலோடு அருணை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அரை மணி நேரம் அருணை கண்காணித்து விட்டு அடுத்து ஏதோ அவசர ஆப்ரேசன் செல்ல வேண்டியிருந்ததால் ஹமீது அவர்கள் வேகமாக ஐ சி யு விட்டு வெளியே செல்கையில் அங்கே நின்று கொண்டிருந்த சந்தியாவிடம் ஏதும் பேசாமல் , கைகளால் "வெற்றி" சின்னத்தை மட்டும் காட்டிவிட்டு வேகமாக மறைந்தார்.

போகும் பொழுது பார்வையாளர்கள் யாரையும் உள்ளே விட வேண்டாம் என்று ஹமீது அறிவுறுத்திச் சென்றிருந்தமையால் , சந்தியா எவ்வளவு கெஞ்சியும் அவளை மீண்டும் ஐ சி யுக்குள் விடவில்லை நர்ஸ்சுகள்.

அருண் மீண்டும் பூர்ண நலம் பெற்று கண் விழிப்பதைக் காண ஆவலாய் ஐ சி யூ வாசலில் நின்றிருந்ததில் அன்றைய இரவு கடந்து மறுநாள் காலைப் பொழுது விடிந்ததே தெரியாமல் போனது சந்தியாவிற்கு. அவள் அருகே நின்று கொண்டிருந்த ஆனந்த் , ஒருகட்டத்தில்  தரையில் அமர்ந்தபடி தூங்கத் தொடங்கினான். அதிகாலை 5 மணிக்கு நைட் ஷிப்ட் முடித்த நர்சுகள் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

தன் அண்ணனை எப்படியாவது உயிர்பித்துவிட வேண்டும் என்று மனதில் இடைவிடாது சொக்கனை பூஜித்துக் கொண்டே கொஞ்சம் கூட கண் அசராமல் , அந்த சிறு துவாரத்தின் வழியே தன் அண்ணன் தன்னை கை அசைத்துக் கூப்பிட மாட்டானா என்று ஏக்கத்தில் இரவில் இருந்து நின்று கொண்டிருந்தாள்.

நைட் சிப்ட் நர்சுகள் கிளம்புவதைக் கவனிக்கத் தலையைத் திருப்பியவள் , அப்படியே மையிருட்டு வேலை நீங்கி வானில் வெளிச்சம் தோன்றிக் கொண்டிருந்ததை ஜன்னல் இடுக்குகள் மூலம் உணர்ந்தாள். அப்படியே மீண்டும் பார்வையை ஐ சி யு பக்கம் திருப்புகையில் தன் அண்ணன் கை அசைத்து தன்னை கூப்பிடுவது போல உணர்ந்தாள்.

சித்த பிரமை , என்று தனக்குள் சிரித்துக் கொண்டு "சொக்கா… என் அண்ணனை எப்படியாச்சும் திருப்பி சீக்கிரம் பழையபடி பேசவை…" என்று கண்னை மூடி மனதினுள் வேண்டிக் கொண்டு கண்களைத் திறந்து பார்க்கையில் இம்முறை அருண் தனது இடது "ஆட்காட்டி விரலை" நன்கு உயர்த்தி சந்தியாவை நோக்கி அசைத்து "உள்ளே வா" என்பது போலக் காட்டினான்.

ஒரு கனம் உறைந்து , மீண்டும் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டாள் சந்தியா. இப்பொழுது கண்டது கனவோ , பிரமையோ அல்ல.  நிஜமாகவே தன் அண்ணன் தான் கை அசைத்தான் என்று புரிந்து கொண்டவள் ஐ சி யூ கதவை வேகமாகத் திறந்து உள்ளே நுழைந்தாள் .

அருணின் வலது கரத்தில் ஊசிகள் மாட்டப்பட்டு கைதி போல இருந்ததால் , தனது இடது கரத்தின் உதவியோடு தன் தங்கையை வரவேற்கத் தான் கொண்டிருந்த   சயன கோலத்தில் இருந்து அமர்ந்த கோலத்திற்கு மாற முயற்சித்தான்.

"டேய் எறுமை மாடு… இப்ப எதுக்குடா எழுந்திருக்கிற… ஒழுங்கா படு…" என்று திட்டிக் கொண்டே அவனை நெருங்கியதும் மீண்டும் அவனைப் படுக்க வைக்க முயற்சித்தாள்.

தாடையில் பலமாக அடிபட்டு தையல் போட்டு இருந்தமையால் , இயல்பாகப் பேச முடியாமற் போகவே , சைகையால் சந்தியாவை தன் வாயருகே வரும் படி சொன்னான் . அவளும் தன் அண்ணன் என்னவோ சொல்ல ஆசைப்படுகிறான்  என்ற ஆர்வத்தில் அவன் வாயருகே முகத்தைக் கொண்டு செல்ல , அருண் தனது தாடை வலி சிரமங்களை எல்லாம் துச்சமாக எண்ணி மறந்து விட்டு.தனது தங்கையின் கன்னத்தில் "ஒரு முத்தம் " கொடுத்தான்.

அவ்வளவு வலியிலும் தன் தங்கையின் காதுகளில் "மன்னிச்சிடு தங்கம்… உன்னைத் தொந்தரவு பன்னதுக்கு…" என்று சொன்னான்.

"டேய் அண்ணா… என்னை மன்னிச்சிடு…" என்று கதறி அழ தொடங்கினாள்.

"தங்கம்… இப்ப ஏன் அழுவுற…  நைட்ல இருந்து பாவம் நின்னுகிட்டே தான் இருக்க… கால் வலிக்கும்ல…  வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுடா… அதைச் சொல்லத் தான் உன்னைக் கூப்பிட்டேன்…" என்று குளறல் பேச்சுடன் சொல்லியவன் சட்டென "லவ் யு தங்கச்சி" என்று  சொல்லிக் கொண்டே அவள் கைகளை இருக்கமாகப் பிடித்துக் கொள்கையில் , இருவர் கண்களும் குளமானது.


Rate this content
Log in

Similar tamil story from Drama