அப்பா
அப்பா


எதிலும் தன்னிறைவு கொள்ளாதவள் மீனாட்சி. தன் பெற்றோருக்கு ஒரே பெண். நிறைவான குடும்பம், அளவிற்கு மிகுதியான அன்பைப் பொழிந்தனர் தாயும் தந்தையும். பள்ளி , கல்லூரியில் முதல் மாணவி அவள். படிப்பை முடித்தவுடன் வளாக நேர்காணலில் புகழ் பெற்ற பெருநிறுவனத்தில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப் பட்டாள். தினமும் அவளது அப்பா தான் அவளை அலுவலகப் பேருந்து நிறுத்தம் வரை அழைத்து சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவார். அம்மாவோ மீனாட்சிக்குப் பிடித்த உணவை மட்டுமே செய்வதோடல்லாமல் அலுவலகத்தில் தேர்வு, உரையாடல் என அனைத்திற்கும் மீனாட்சிக்கு உறுதுணையாய் இருந்து அவளை ஆயத்தம் செய்தாள்.
மீனாட்சியின் அப்பா அவளுக்கு பசிக்கிறதா என்று அவள் முகத்தைப்பார்த்தே கண்டுபிடித்து விடுவார். அவளும் தன் பெற்றோர் மேல் அதிக அன்பு வைத்திருந்தாள். தன் வங்கிப் பண அட்டையைக் கூட தன் தந்தையிடமே கொடுத்து விட்டாள். அவரும் குடும்ப செலவுக்குத் தேவையானதை மகளின் வாங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்வார். இருப்பினும் தன் சம்பளத்தை எப்படி செலவு செய்வது அல்லது சேமித்து வைப்பது என்று தன்னால் தன்னிச்சையாக முடிவு செய்ய இயலவில்லை என வருந்தினாள். ஆணாகப் பிறந்து இருந்தால் அந்த சுதந்திரம் கிடைத்திருக்குமோ என எண்ணிக்கொண்டாள்.
பேருந்து நிறுத்தத்தில், அலுவலகம் செல்லும் முன் தன் சட்டைப் பையில் இருக்கும் சில்லறை மற்றும் நோட்டுகளை கணக்கு பார்க்காமல் அவளிடம் செலவிற்கு கொடுப்பார் அப்பா.
"பிடித்ததை வாங்கி சாப்பிடும்மா !" என்பார்.
"சாப்பாட்டு செலவிற்கு உணவு அட்டை இருக்கு அப்பா. எதுக்கு காசு வேற குடுக்குற? கிளம்பற அவசரத்துல பையில வச்சிக்க கஷ்டமா இருக்கு. இனிமே குடுத்தா வீட்ல இருக்கும் போதே குடு !!" என்று அங்கலாய்த்துக் கொள்வாள்.
இப்படியாக இயங்கிக் கொண்டிருந்த அவள் வாழ்வில் திருமணம் குறுக்கிட்டது. மணமகனை தேர்வு செய்யும் பொறுப்பையும் பெற்றோரிடமே கொடுத்து விட்டாள். எல்லா பெண்களையும் போல் மனம் நிறைய கனவுகளை சுமந்து இல்லற வாழ்வில் நுழைந்தாள். முக்கியமாக, தன் பணத்தை தானே நிர்வகிக்கும் சுதந்திரம் கிடைக்கும் என எண்ணினாள். செல்லமாக வளர்ந்த பெண் தானா என்று ஆச்சரியப்படும் வகையில் பொறுப்புடன் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தாள். புகுந்த வீட்டில் யாரேனும் அவளை கடிந்து கொண்டால் கூட இன்முகத்துடன் தன் கடமைகளைத் தவறாமல் தொடர்ந்தாள். தன் பணியிடத்திலும் சிறந்த பங்களிப்பை வழங்கினாள்.
மன அழுத்தம் மிகுந்த ஓரு நாள் காலையில், தன் கணவன் தான் உண்ட தட்டையும் களைந்த உடைகளையும் ஆங்காங்கே வரவேற்பறையில் போட்டு வைத்திருந்தது அவளுக்கு எரிச்சலூட்டியது.
"பொருட்களை அதற்கான இடத்தில் வைக்காமல் இப்படி போட்டு வச்சிருக்கீங்களே! நானும் அலுவலக வேலையும் செஞ்சு வீட்லயும் எவ்வளவு தான் வேலை செய்றது? உடம்பு அலுப்பாக இருக்கு!!" என்றாள் கணவனிடம்.
"பெண் என்றால் அப்படித்தான் இருக்கனும். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். என் மகனுக்கு நான் தான் உணவு ஊட்டி விடுவேன். சாப்பிட்ட தட்டை கூட அவனை கழுவ விட்டதில்லை" என மாமியாரிடம் இருந்து பதில் வந்தது. கணவனிடம் மிஞ்சியது மௌனமே.
ஏற்கனவே பணிக்குத் தாமதமானதால் காலை உணவைத் தவிர்த்தாள். அதையும் கவனிக்கவில்லை ஒருவரும். பேருந்தை தவறவிட்டமையால் வாடகை மகிழ்வுந்தில் செல்ல நினைத்தாள்.
"நீ கால் டாக்ஸியில் சென்றால் பணம் செலவாகும். அதனால் நானே உன்னை அலுவலகத்திற்கு அழைத்து செல்கிறேன்" என்றான் கணவன்.
உள்ளத்தில் எஞ்சியிருந்த ஏமாற்றத்துடன் "சரி" என்று கிளம்பினாள். வழியில் ஒரிரு முறை "பசிக்குது" என்று அவள் கூறியதையும் அவன் பொருட்படுத்தவில்லை. அவள் இறங்குமிடம் வந்தது.
"நான் பர்ஸை (பணப்பையை) வீட்ல மறந்து வச்சிட்டேன். உன் உணவு அட்டையை என்னிடம் தா !" என்றான் அவன்.
"மாதம் பிறந்தவுடனே என் சம்பளத்தை உங்கள் கணக்கிற்கு மாற்ற சொல்லி விடுகிறீர்கள். என்னிடம் பத்து ரூபாய் கூட இல்லை" என்றாள்.
"மதிய உணவும் வீட்டில் இருந்து எடுத்து செல்கிறாய். வேற என்ன செலவு இருக்கிறது உனக்கு ?!" எனக் கூறி விட்டு அவள் பதிலுக்காக காத்திருக்காமல் உணவு அட்டையை பிடுங்கி சென்றான்.
மனதை அழுத்திய பாரத்துடன் அவன் தலை மறையும் வரை நின்றாள். தன்னை அறியாமல் கணவனைத் தன் தந்தையுடன் ஒப்பிட்டாள். கைபேசி ஒலித்து அவளை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது. அப்பா தான் அழைத்திருக்கிறார். கையில் எடுத்து பேசினாள்.
"சாப்பிட்டியாம்மா ?!" என்றார் அப்பா.
கன்னத்தில் வழிந்த சில கண்ணீர்த்துளிகளை துடைத்தவாறு, பொய்யான உற்சாகத்தோடு "சாப்பிட்டேன் அப்பா. நீ எப்படி இருக்க?" எனக்கேட்டாள்.