Tamizhan Dravidan

Abstract Drama

4.7  

Tamizhan Dravidan

Abstract Drama

அசுரமரம்

அசுரமரம்

4 mins
1.0K


அது ஒரு அழகிய எழில் கொஞ்சும் கிராமம். அந்த கிராமத்தின் எல்லையைத் தாண்டி வரும் எவரும், அதன் எல்லையில் இருக்கும் பழமையான பிரம்மாண்டமான ஆலமரத்தை பார்க்காமல் உள்ளே வர முடியாது. 


   அந்த ஆலமரத்திற்கு சற்று அருகில் இரெண்டே வீடுகள் மட்டும்தான் இருந்தன, ஒரு வீடு முனியாண்டி குருக்களுடையது , மற்றோரு வீடு குப்புசாமி குருக்களுடையது.


  ஒரு நாள் நள்ளிரவு வேளையில், ஆலமரம் இருக்கும் இடத்தில இருந்து வித்தியாசமாக வந்த சத்தத்தை கேட்டு, முனியாண்டி குருக்களும், குப்புசாமி குருக்களும் தங்கள் வீட்டின் ஜன்னலில் இருந்து எட்டி பார்த்தார்கள். பார்த்தவர்கள் திடுக்கிட்டு பயந்து போனார்கள். 


 மறுநாள் ஊரையே கூட்டி, அந்த அமானுஷ்ய ஆலமர சத்தத்தை பற்றி ஊர் மக்களிடம் சொன்னார்கள், மேலும் அந்த ஆலமரத்தின் மேல் பல பேய்களும், பிசாசுகளும் இருக்கின்றன. அது எங்களை அருகில் வரும் படி அழைத்தது என்றும் சொன்னார்கள். அருகில் சென்றால் அந்த பிசாசு நம்மை பிடுத்து விடும் என்றும் பயந்தார்கள். இதை கேட்ட மக்கள் பீதியில் உறைந்து போனார்கள்.

   

    அந்த ஊரில் ஓரளவு விவரம் அறிந்தவர்கள் என்றால் முனியாண்டியும், குப்புசாமியும் தான். அவர்கள் சொல்லும் மந்திரத்தால் தான் ஊரில் நல்ல மழை பெய்து, ஊர் செழிப்பாக இருக்கிறது என்பது மக்களின் நம்பிக்கை. அதனால், அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் அந்த ஊர் மக்களுக்கு வேத வாக்கு. இனிமேல் யாரும் அந்த மரத்திற்கு அருகில் இரவு வேளையில் செல்லாதீர்கள், அப்படியே செல்ல வேண்டிய அவசியம் வந்தால், ஆலமரத்தின் திசை நோக்கி திரும்பாமல் ஸ்ரீ ராம ஜெயம் சொல்லி கொண்டே செல்லுங்கள், அது உங்களை ஒன்னும் செய்யாது என்று உத்தரவு போட்டார்கள். மக்களும் அதன்படி நடந்து கொண்டார்கள். 


  பிறகு இந்த ஆலமரத்தை பற்றிய கதை பக்கத்துக்கு ஊர்களுக்கும் பரவ தொடங்கியது. அந்த மரம், போன மாதம் ஒருவரின் ரத்தத்தை குடித்து விட்டதாகவும், மரத்திற்கு அருகில் பந்து விழுந்து விட்டது என்று எடுக்க போன ஒரு சிறுவன் எங்கு போனான் என்றே தெரியவில்லை என்றும் ஊருக்கு ஊர் வித விதமான கதைகள் பரவி கொண்டிருந்தது. இதை பற்றி முனியாண்டி மற்றும் குப்புசாமியிடம் விசாரிக்க வருபவர்களிடம். ஆமாம், நேற்று கூட யாரோ கத்துவதை போல சத்தம் கேட்டது, இதுக்கு மேலும் நாம் பொறுமையாக இருக்க கூடாது என்று, அந்த ஆலமரத்தை வெட்டி விடலாம் என ஊர் மக்களிடம் யோசனை சொன்னார்கள். உள்ளூரில் இருந்து யாரும் மரத்தை வெட்டுவதற்கு வரவில்லை என்று, ஊருக்கு வடக்கெ உள்ள வடவூரில் இருந்து சில ஆட்களை கூட்டி வந்து வெட்ட ஏற்பாடு நடைபெற்றது.


 வடவூரில் இருந்து வந்தவர்கள், கோடரிகளை கொண்டு வெட்ட தொடங்கினார்கள். ஒரு வெட்டோ இரு வெட்டோதான் வெட்டி இருப்பார்கள். கோடரி உடைந்து வெட்டியவனின் தலையில் தெறித்து அவன் மண்டை பிளந்து ரத்தம் கொட்டி கதறியபடியே ஓடினான், பிறகு மற்ற மர வெட்டிகளும் பயந்து ஓடி போனார்கள். அன்றோடு அந்த மரத்தை வெட்டுவர்தற்கு யாருமே வரவில்லை.  


  என்ன செய்வதென்று தெரியாது எரிச்சலுற்ற முனியாண்டியும் குப்புசாமியும். அந்த மரத்தின் பலம் அதிகரித்து விட்டது என்றும், இனி இந்த ஊரில் யாருக்கு என்ன கெட்டது நடந்தாலும் அந்த மரம்தான் காரணம் என்று தினமும் குறி சொல்ல தொடங்கினார்கள். மக்களும் அவர்களின் குறியை கேட்டு நம்பி நடுங்கினர். காலம் செல்ல செல்ல முனியாண்டியும் குப்புசாமியும் குறி சொல்லியே நல்ல வருமானம் ஈட்டி, தங்கள் பிள்ளைகளை டவுனுக்கு படிக்க வைக்கும் அளவுக்கு முன்னேறி வந்தார்கள்.


   இப்படியே பல வருடங்கள் உருண்டோடியது, ஒரு நாள் அந்தி சாயும் பொழுதில் அந்த ஊருக்கு ஜென் துறவி ஒருவர் வந்தார். இந்த ஊருக்கு வருவதற்கு முன்னமே, ஆலமரத்தை பற்றிய அனைத்து கதைகளையும் கேள்வி பட்டிருந்தார். ஊருக்குள் நுழையும் போதே அந்த பெரிய ஆலமரத்தின் விருட்சத்தை கண்டு பிரமித்து போனவர், நீண்ட தூர நடை பயணத்தின் களைப்பை போக்க, ஆலமரத்தின் நிழலில் இளைப்பாறினார். அப்போது அந்த பக்கம் நடந்து போன ஊர் மக்கள், துறவியை பார்த்து இந்த மரத்திற்கு கீழ் அமரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்தார்கள். முனியாண்டியும் குப்புசாமியும் ஊரில் வேறு இல்லையே, இந்த துறவிக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று தங்களுக்குள் முனுமுனுத்து கொண்டனர்.


  பொழுதும் சாய்ந்து கொண்டு இருந்தது, ஊர் மக்கள் ஆள் அரவமே இல்லாமல் அந்த இடம் விரிச்சோடியது, துறவியோ மரத்திற்கு அடியில் உட்கார்ந்த வண்ணம் அப்படியே கண்ணை மூடி தியான நிலைக்கு போனார். சுமார் அரைமணி நேரம் சென்றிருக்கும், வித்தியாசமான சத்தங்களும், இரைச்சல்களும், பறவைகளின் கீச்சுகளும் கேட்க தொடங்கியது. துறவி கண்ணை மூடிய படியே சத்தங்களை உன்னிப்பாக கவனித்தார். திடீரெண்டு யாரோ பேசி முனுமுனுப்பதை போலவும் கேட்டவுடன். கண்ணை திறந்தார். 


  என்ன ஒரு ஆச்சரியம், பல மக்கள் அந்த மரத்தின் அடியில் இருந்தனர். அவர்கள் துறவியை பார்த்து புன்னைகைத்தனர். அப்படியே மரத்தை அன்னாந்து பார்த்தார், பலவிதமான பறவைகள், குரங்குகள், அணில்கள், பட்டாம்பூச்சிகள், சில்வண்டுகள் என பல்லுயிர்கள் அந்த மரத்தின் கிளைகளிலும், விழுதுகளிலும் மகிழ்ச்சியாக துள்ளி திரிந்து வாழ்ந்து வந்தன., பார்க்கவே ரம்மியமான காட்சி அது.


துறவி அங்கு இருந்த மக்களை பார்த்து கேட்டார். "நீங்கள் எல்லாம் யார், இவ்வளவு பேர் இங்கு தங்கி இருக்குறீர்கள்! பிறகு ஏன் இந்த ஊர் மக்கள் இந்த மரத்தை பார்த்து பயப்படுகிறார்கள்". அதற்கு அவர்கள் சொன்னார்கள், "அய்யா இந்த மரத்தின் அடியில் இருக்கும் நாங்கள் அனைவரும் வீடு வாசல் இல்லாது சமுதாயத்தால் நசுக்கப் பட்டவர்கள், சிலர் வாழ்ந்து கெட்டவர்கள்,ஒரு காணி நிலம் கூட சொந்தம் என்று சொல்லி கொள்ள இல்லாது போன உழைப்பாளிகள் , உடலை வருத்தி வேலை பார்க்கும் கூலி தொழிலாளிகள். நாள் முழுக்க வெவ்வேறு ஊர்களுக்கு சென்று உழைக்கும் எங்களுக்கு போக்கிடம் இந்த மரத்தின் நிழல் மட்டும்தான்" என்றனர். 


     "நீங்கள் இந்த மரத்தின் அடியில் தங்கி இருப்பது எப்படி இந்த ஊர் மக்களுக்கு தெரியவில்லை " என்று மீண்டும் துறவி வினவினார். "நாங்கள் பொழுது சாய்ந்ததும் வருவோம், விடிவதற்குள் கூலி வேலை செய்ய பக்கத்துக்கு ஊர்களுக்கு சென்று விடுவோம். ஆனால், நாங்கள் இங்கு இருப்பது முனியாண்டி குருக்களுக்கும், குப்புசாமி குருக்களுக்கும் மட்டும் தெரியும் அய்யா, அவர்கள் தான் எங்களை எப்படியாவது இந்த இடத்தை விட்டு துரத்தி விட வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகின்றனர்" என்றார்கள்.


   துறவி மீண்டும் ஒரு முறை அந்த பெரிய அழகிய ஆலமரத்தை அன்னாந்து பார்த்தார். இப்போது துறவிக்கு அனைத்தும் புரிந்து விட்டது. இந்த ஏழை மக்களும் உயிரினங்களும் தங்கள் வீட்டுக்கு அருகே மகிழ்ச்சியாக வாழ்வது முனியாண்டிக்கும் குப்புசாமிக்கும் பிடிக்கவில்லை, இந்த மக்கள் இரவில் இங்கு தங்கி இருப்பது அவர்களுக்கு எரிச்சலை தருகிறது, அதனால் தான் இந்த உன்னதமான மரத்தை பற்றி பேய் பிசாசு என்று கட்டு கதைகளை சொல்லி ஊர் மக்களை முட்டாளாக்கி வருகிறார்கள். இவ்வளவு நன்மை செய்யும் இந்த ஆலமரத்தை பற்றி இப்படி பொய் சொல்லும் இவர்கள் மனிதர்களா இல்லை கல்லா என்று துறவிக்கு கோவம் வந்தது. 


   "இந்த ஆலமரம் நல்ல மரம் தான் , இங்கு பேய் பிசாசு எதுவும் இல்லை என்று நீங்கள் ஊர் மக்களிடம் சென்று சொல்ல வேண்டியதுதானே" என்று உழைப்பாளிகளை பார்த்து கேட்டார் துறவி. அதற்கு அவர்கள் "நாங்கள் எங்கள் வேலை உண்டு நாங்கள் உண்டு என்று இருந்து விடுவோம். அப்படியும், எங்களில் இருந்து முன்னேறி இந்த இடத்தை விட்டு ஊருக்குள் வசதி வாய்ப்பு வந்து சென்றவர்கள், இது வெறும் மரம் தானே என்று இந்த மரத்தை மறந்து விடுகின்றனர் அய்யா" என்றனர்

 "நீங்கள் இப்படி சுயநலமாக இருப்பதால் இந்த மரத்திற்கு தான் எவ்வளவு அவ பெயர். அத்துனை அவமானத்தையும் தாங்கி கொண்டு உங்களுக்காக இந்த ஆலமரம் இடியிலும் மழையிலும் உங்களை காத்து நிற்கிறதே. 


 ஒரு நாள் நீங்கள் களைப்படைந்து கூடு திரும்புகையில் மரம் அடியோடு சாய்க்க பட்டிருக்கும், அப்போது எங்கு செல்வீர்கள். நீங்கள் எல்லோரும் வாழ்வின் கரை சேர்ந்த பிறகு, இந்த மரத்தை உதாசீன படுத்துகிறீர்களே, ஒரு நாள் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கோ, உங்களை போன்ற திக்கற்றவர்களுக்கோ மீண்டும் இந்த மரத்தின் கதைகதைப்பு தேவைப்படுமே, அப்போது அவர்கள் என்ன செய்வார்கள் எங்கு போவார்கள்.


 இனி நான் இந்த மரத்தை பற்றிய உண்மையை ஊர் ஊராக சென்று அனைத்து மக்களுக்கும் எடுத்து சொல்ல போகிறேன், இதுதான் நான் இனி வாழ்வில் செய்ய போகும் இறை பணி, யாரெல்லாம் என்னோடு வருகிறீர்கள்" என்று உழைப்பாளிகளை பார்த்து கேட்டார் ஜென் துறவி. சிலர் எழுந்து நாங்கள் உங்களோடு வருகிறோம் அய்யா என்றனர் . அதற்குள் விடிந்தும் விட்டிருந்தது. 


 மெல்ல கதிரவனின் ஒளி கீற்று எட்டி பார்க்க, அதுவரை பனி படர்ந்து மங்கலாய் இருந்த பாதை ஒன்றில் வெளிச்சம் பரவிய கிழக்கு திசை நோக்கி புறப்பட்டனர் ஜென் துறவியும் மற்றும் சிலரும், அந்த ஆலமரத்தின் உண்மையை உலகிற்கு பறைசாற்ற.


Rate this content
Log in

More tamil story from Tamizhan Dravidan

Similar tamil story from Abstract