STORYMIRROR

Kothandaraman Srinivas

Classics

4  

Kothandaraman Srinivas

Classics

ஆண்டவனுக்கு தெரியும்!

ஆண்டவனுக்கு தெரியும்!

2 mins
150

பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார்.

அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது.

கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதித் தான் அவள் கேட்டாள். ஆனால் கேட்டது அந்த மாயாவியிடமாயிற்றே ? அவன் சும்மா விடுவானா?

அந்த பெண்ணிடம் அவள் அதிர்சியடையும் விதம், ஒரு கோணிப்பையை கொடுத்து, “நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் இதை தூக்கி கொண்டு வா. அது போதும். நம் கண்களை தவிர வேறு யார் கண்ணிற்கும் இந்த கோணிப்பை தெரியாது!” என்கிறார்.


வேறு எதையோ எதிர்பார்த்த அந்த பெண்ணிற்கு கடும் அதிர்ச்சி. கிருஷ்ணர் இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டை தருவார் என்று அப்பெண் எதிர்பார்க்கவில்லை.

அவருடனே தூக்கி கொண்டு நடக்கும் அளவிற்கு அதனுள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க அந்த பெண்ணிற்கு ஆசை. ஆனால் கட்டுக்களை அவிழ்த்து பார்க்க முடியாதபடி மிகவும் பலமாக அது கட்டப்பட்டிருந்தது.

எனவே தாம் அதற்குள் என்ன இருக்ிறது என்று பார்க்க பகவான் விரும்பவில்லை என்று தெரிந்துகொள்கிறாள் அந்த பெண். திறந்து பார்க்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு கடவுளின் கட்டளைப்படி அதை தூக்கி சுமந்து அவர் செல்லுமிடங்கள் எல்லாம் செல்கிறாள்.

நேரம் செல்ல செல்ல, ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் அந்த மூட்டையை தூக்க முடியவில்லை.


“கிருஷ்ணா உன் கட்டளையை எதிர்பார்த்து உனக்கு பணி செய்ய வந்தேன். நீ என்னடாவென்றால் சுமக்க முடியாத ஒரு அழுக்கு மூட்டையை என்னிடம் தந்து விட்டாயே… கருணை கடலுக்கு இது அடுக்குமா??” என்று கோபித்துகொள்கிறாள்.

“உன் பலவீனத்தில் என் பலம் அடங்கியிருக்கிறது. கவலைப்படாதே உன் பக்கம் நானிருக்கிறேன். தைரியமாக நான் கூறும் வரை சுமந்துவா” என்கிறார் கிருஷ்ணர்.

மேலும் சில காலம் சென்றது.

சில இடங்களில் அவளால் தூக்க முடியாத போது கிருஷ்ணரும் தானும் தன் பங்கிற்கு ஒரு கை பிடித்து தூக்கி அந்த சுமையை பகிர்ந்து கொண்டார்.


ஒரு நாள் அவர்கள் போய் சேரவேண்டிய இடம் வந்தது.

“போதும் நீ சுமந்தது. அந்த மூட்டையை இறக்கி வை!!” என்று கிருஷ்ணர் கட்டளையிட, அந்த மூட்டையை பகவானின் முன் கீழே வைக்கிறாள் அந்த பெண்.

“மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா?” என்று பகவான் புன்முறுவல் செய்தபடி கேட்க, அந்த பெண் அதற்காகவே காத்திருந்த அந்த பெண் “சீக்கிரம் கிருஷ்ணா” என்கிறாள் உரக்க.

கிருஷ்ணர் தனது புல்லாங்குழலை அசைக்க முடிச்சுக்கள் தானே அவிழ்ந்து மூட்டை தானே பிரிந்து கொள்கிறது. முதலில் கண்ணில் தெரிவது வைக்கோல் தான். ஆனால் வைக்கோல்களுக்கிடையே அரிய மாணிக்கங்களும் வைர வைடூரியங்களும், பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன. தேவலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் மட்டுமே தரக்கூடிய பொக்கிஷம் அது!!


“இத்தனை காலம் பொறுமையுடன் நீ காத்திருந்தமைக்காக உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள்!!”

அந்த பெண்ணுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சி இன்ப அதிர்ச்சியாகி கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

“கிருஷ்ணா……. என்னை மன்னித்துவிடு” என்று அவர் காலில் விழுகிறாள்.

“அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இந்த பாவி இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தை புரிந்துகொண்டு நான் இருந்திருந்தால் இந்த பொக்கிஷத்தின் பாரம் எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ புகார் செய்திருக்கவோ மாட்டேனே…” என்று அவள் உருக கிருஷ்ணர் தனக்கே உரிய சிரிப்பை உதிர்க்கிறார்.


ஒவ்வொரு சுமையும் அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் உங்கள் கைகளில் தான் அது உள்ளது. பார்க்கும் பார்வை தான் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது

நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும். அந்தஅளவு சுமை மட்டுமே கடவுள் தருவார்

எனவே அவனை நம்புங்கள் முழுமையாக.


Rate this content
Log in

Similar tamil story from Classics