ஆசிரியராகிய நான்
ஆசிரியராகிய நான்


அதிகாலை எழுந்து பரபரப்பாய் வீட்டுவேலை முடித்து அவசரமாய் பள்ளி செல்லும் சராசரி தொடக்க வகுப்பு ஆசிரியை நான்.
காலை 8:40 மணிக்கு என் வகுப்பு குழந்தைகளின் வணக்கத்துடன் ஆரம்பித்து ஒவ்வொரு நொடியும் பரபரப்பாய் ஓடிக் கொண்டிருந்தது என் 14 வருட பள்ளி அனுபவம்.விடுமுறை நாள் எப்போது வரும் ஓய்வெடுக்க என எங்கும் உடல்.இன்று கொரோவினால் பல நாட்கள் விடுமுறை கிடைத்தும் ஏனோ ஏங்குகிறது மனம், எம் பள்ளியையும்,எம் வகுப்புக் குழந்தைகளையும் எண்ணி.
பாடம் கற்றுக் கொடுக்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் தினமும் வகுப்புக்குள் நுழையும் நான் பல பாடங்கள் கற்றுத் திரும்புவேன் வீட்டிற்கு.நான்காம் வகுப்புக் குழந்தைகளாயினும் அவர்களால் எனக்குக் கிடைத்த இனிமையான அனுபவங்கள் ஏராளம்.ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ரகம்.பாடம் தொடர்பான கேள்வி கேட்போர் ஒரு புறம்; காரணமே இல்லாமல் கேள்வி கேட்போர் ஒரு சிலர்;நகைச்சுவை ததும்பி பேசி சிரிக்க வைப்பார் ஒரு சிலர் .அவர்களுடன் பயணிக்காது இருக்கும் இந்த Lockdown நாட்கள் உண்மையாகவே Lock ஆன என் மனது Down ஆகி உள்ளது.
கொரோனோ எனும் கொடிய அரக்கன் வந்து எம் மனிதர்களை ஆட்டிப் படைத்திருக்க வேண்டாம்.வந்துவிட்டாய் வந்த வழியே திரும்பிச் செல்.எதுவாயினும் அளவோடு இருப்பதே நலம்.நீயானாலும் உன்னால் கிடைத்த ஓய்வானாலும்!அறத்தோடு நின்று அன்போடு வாழ எங்களுக்கு வழிவிட்டுச் செல்; எங்கள் பணியைத் தொடர.