உயிரிட்டவன்
உயிரிட்டவன்
தந்தை மக்கட்கு ஆற்றும் -
என எழுதத் தொடங்கினால்
வள்ளுவனே திணறிப் போவான்...
என் உயிர் துடிக்க ஆரம்பித்த
நிமிடமிருந்து - உன் உயிர்
அடங்கிய நிமிடம் வரை
எனக்காகத் துடித்த உயிர்...
எனக்காக சிலுவைகளை சுமந்த
அப்பனின் ஒவ்வொரு நினைவு தினத்திலும்
வெறும் குருத்தோலை மட்டும் சுமக்கிறேன்!
வலிகள் தாங்கி வழி கொடுத்தான்
உன் வழியைத் தான் பற்றி நடக்கிறேன் எப்போதும்..
ஆனால்
உன்னைச் சுட்ட தீ
என்னைச் சுடும் வரையில்
உன்னை இழந்த வெப்பம் தணியாது..
உன் கைப் பிடித்து பள்ளி செல்லும் போது
உன் சுமைகளை பற்றிய அறிவே இருந்ததில்லை..
அப்போதெல்லாம் நீ கூறிய அறிவுரைகள்
இப்போது தேவையான பொழுதுகளில்
காதில் கேட்டுக் கொண்டே இருக்கும்
அதிசயம் தான் புரியவில்லை
பதின் பருவ இள ரத்தம்
சீறும் போதெல்லாம்
பொறுமையை உபதேசித்தாய்..
p>
அப்போது அது
கோழைத்தனம் என்று சண்டையிட்டேன்
பூமி ஆளலாம் என்று
இப்போது தான் கற்றுக் கொள்கிறேன்..
தவறு செய்தால்
அதை கண்டிக்கும்
உன் மௌனத்தைப் போன்ற
சிறந்த திருத்தல் முறையை
இதுவரை நான்
கண்டதில்லை...
அப்பாவை பற்றிய
கவிதைகள் அழ வைக்கலாம்..
இழந்த அப்பாக்கள் பற்றிய
கவிதைகள்
சத்தியமாய் கதறலின்
வெளிப்பாடு தான்!
வாழ்க்கை பற்றிய கல்விக்கு
ஒவ்வொரு அப்பனும்
ஒரு பல்கலைக் கழகம் தான்..
தேர்ச்சி பெறா விட்டாலும்
நம்மை அடுத்த நிலைக்கு
கை பிடித்துச் செல்லும்
ஞானாசிரியன்!!
அப்பாவின் வெற்றிடத்தை
வார்த்தைகளால்
நிரப்பவே முடியாது தான்..
நிரம்பி வழியும்
வாழ்க்கையின் கோப்பையில்
இரு சொட்டு உப்பு நீர்
உயிரிட்டவனின்
நினைவாய் வழிந்து
கொண்டேயிருக்கும் எப்போதும்...!!