என்ன உத்தேசம் கடவுளுக்கு?
என்ன உத்தேசம் கடவுளுக்கு?


ஆதி பகவன்
பிள்ளையார் சுழி போட்டுத் தான்
படைத்தலைத் தொடங்கி இருப்பாரோ..?
என்ன நோக்கம் இருந்திருக்கும் படைப்பதற்கு..
பிறக்க வேண்டும்
தவறு இழைக்க வேண்டும்
தண்டிக்கப் பட வேண்டும்
திருந்த வேண்டும்
பாவ மன்னிப்பு வழங்க வேண்டும்
வாழ்க்கை முடிந்து போக வேண்டும்
படைப்பின் பின்னணி தான் என்ன ?
சலித்துப் போகாதா இறைவனுக்கு?
நல்லவன் முதலில் துன்புறுவது
கெட்டவன் பின்னர் துன்புறுவது
இது தான்
நியாயத்தின் கொள்கையெனில்
எவனாய் இருந்தால் தான் என்ன?
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டினால்
தன் வினை எது என்று எப்படித் தெரியும்?
தியானம் தவம்
நேர்மை
உண்மை
கடின உழைப்பு
அன்பு
அடக்கம்
ஒழுக்கம்
கல்வி
கொடை
இரக்கம்
பொறுமை
எதிலும் பிசகி விடக் கூடாது
பொறாமை
புறம் கூறல்
தீவினை
கொடுமை
நன்றி மறத்தல்
துன்பம் இழைத்தல்
எதுவும் நினைத்து விடவும் கூடாது
ஓய்வறியா வேலைச் சுமைகள் கடவுளுக்கு..
எங்கே குறித்திருப்பார்
என்னவென்று குறிக்கப்பட்டிருக்கும்
எந்த தெரு
யாருடைய மகன்
எந்த ஊர்
எந்த மாவட்டம்
எந்த மாநிலம்
எந்த நாடு
எல்லாமே குறிப்பிடப்பட்டிருக்குமா?
இதை கண்காணிக்கவென குழுக்கள்
அமைத்திருப்பாரா கடவுள்?
இந்த இந்த வயதினருக்கு
இந்த நாளில் மதிப்பீடு
என்று திட்டம் ஏதேனும் உண்டா?
படைப்பிலும் அழிப்பிலும் தவறு நடந்தால்
திருத்தம் என்னவென்று இருக்கும் ?
வலிகளின் அளப்பீடு எப்படி?
தீர்ப்பின் நடுநிலைமை பற்றிய விளக்கம் என்ன?
சாகா வரம் கொண்ட தேவர்களுக்கு
அமுதம் தருகிறாய்..
உனக்குத் தோன்றினால்
கடவுள் அவதாரம் உருவெடுக்கும்..
என்னவென்று திரும்புவதற்குள்
ஒரு இயற்கைச் சீற்றம்..
மழை, புயல், வறட்சி
அனைத்தும் உன் கைகளில்..
இவையெல்லாம் பிசகில்லாமல்
நடக்கிறதா என்று யார் கேட்பார்கள் உன்னை?
இந்த நிமிடம் இந்த கேள்விகளை எனக்குள்
எழச் செய்யும் பரம்பொருள்
கொடைக்கானல் குறிஞ்சிப் பூக்களின்
அடுத்த மலர்ச்சியின் அளவுகளை
இப்போதே தீர்மானிப்பாரா ?
எத்தனைக் கேள்விகள்?
எத்தனை சிக்கலான வழிமுறைகள்?
எல்லாவற்றுக்கும் உன்னையே அழைத்து
பழக்கப்பட்டதால்
இதையும் உன்னிடமே கேட்கலாம்
" அடக் கடவுளே! நீ படைப்புத் தொழிலை
தொடங்காமல் இருந்திருந்தால்
உலகம் அமைதியாகவே நிலைத்து இருக்குமே!!
எதற்கு படைத்தாய் மனிதர்களை? "