திருக்குறள் 102. நாணுடைமை - மு .வா உரையுடன்
திருக்குறள் 102. நாணுடைமை - மு .வா உரையுடன்
1011. கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
மு.வரதராசனார் உரை:
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
1012. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
மு.வரதராசனார் உரை:
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.
1013. ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.
மு.வரதராசனார் உரை:
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
1014. அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.
மு.வரதராசனார் உரை:
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.
1015. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
மு.வரதராசனார் உரை:
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.
