ஓடை
ஓடை
ஓடை ஆட உள்ளம் தூண்டுதே!-கல்லில்
உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்
(ஓடை ஆட....)
பாட இந்த ஓடை எந்தப்
பள்ளி சென்று பயின்ற தோடி!
ஏடு போதா இதன்கவிக் கார்
ஈடு செய்யப் போரா ரோடி!
(ஓடை ஆட....)
நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி
நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக் கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்
குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி
(ஓடை ஆட....)
நெஞ்சில் ஈரம் இல்லார் நாண
நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச்
செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்
சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்
(ஓடை ஆட....)
-வாணிதாசன்
