Exclusive FREE session on RIG VEDA for you, Register now!
Exclusive FREE session on RIG VEDA for you, Register now!

anuradha nazeer

Classics


4.7  

anuradha nazeer

Classics


ராம் ராயர்

ராம் ராயர்

2 mins 175 2 mins 175

விஜயநகரப் பேரரசை, ராம் ராயர் என்ற மன்னன் ஆட்சி செய்த காலம்.

ஒரு முறை, படை-பரிவாரங்களுடன் பண்டரிபுரம் கோயிலுக்குச் சென்றார் ராம் ராயர்.

அங்கு, அழகே உருவான ஸ்ரீபாண்டுரங்கனைக் கண்ட மன்னர் பேரானந்தம் அடைந்தார்.

‘இவ்வளவு அழகு பொருந்திய விக்கிரகம் தலைநகரில் இருப்பதே சிறப்பு!’ என்று எண்ணியவர், ஸ்ரீபாண்டுரங்கனின் விக்கிரகத்தை தலைநகர் ‘ஹம்பி’க்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டார்.


பண்டரிபுரம் மக்கள் செய்வதறியாது பரிதவித்தனர்.

பாண்டுரங்கனின் திருவிளையாடல் விரைவில், ஹம்பியில் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டு ஸ்ரீபாண்டுரங்கனின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டது.

இந்த நிலையில் ஒரு நாள் இரவு, மன்னரின் கனவில் பாண்டுரங்கன் தோன்றினார்.

”ராம் ராயா… உனது அதீத பக்தி என்னை மகிழ்விக்கிறது. அதே நேரம்… அனுதினமும் என்னை ஆராதிக்கும் பண்டரிபுரம் மக்களின் வழிபாடுகள் பாதிக்கப்படும் என்பதை நீ மறந்து விட்டாய்! போகட்டும்…

உனக்கு ஒரு நிபந்தனை. எனக்கோ, என் அடியவர்களுக்கோ நீ தீங்கிழைக்க நேர்ந்தால், அந்தக் கணமே நான் இங்கிருந்து சென்று விடுவேன்!” என்று கூறி மறைந்தார்.


ராம் ராயரின் காலத்தில் பண்டரிபுரத்தில் வாழ்ந்த மகான் பானுதாசர்.

ஸ்ரீபாண்டுரங்கன் விக்கிரகம் ஹம்பிக்கு எடுத்துச் செல்லப்பட்ட விஷயத்தை இவரிடம் கூறி வருந்தினர் பண்டரிபுர மக்கள். அவர்களை ஆறுதல்படுத்திய பானுதாசர், சற்று நேரம் கண்மூடி தியானித்தார். பிறகு கண் விழித்தவர், ”வெகு விரைவில், நல்ல தீர்வு கிடைக்கும். பாண்டு ரங்கன் அருள்புரிவான்!” என்று கூறி அனுப்பினார்.

உடனடியாக பண்டரிபுரத்தில் இருந்து கிளம்பிய பானுதாசர், ஹம்பியை அடைந்தார். அங்கிருந்த இறை வனைத் தரிசித்தவர்,

”விட்டலா… பண்டரிபுரத்தை விட்டு வந்து விட்டாயே! அங்குள்ள மக்கள் மனம் வெம்பிக் கதறுகிறார்களே… அவர்களின் கண்ணீரைத் துடைக்க மாட்டாயா?!” என்று உள்ளம் உருகப் பிரார்த் தித்தார்.


அவர் முன் தோன்றிய பாண்டுரங்கன், ”வருந்தாதே பானுதாசா! இந்த ரத்தின மாலையை அணிந்து கொண்டு இங்கேயே இரு. வழி தானாகப் பிறக்கும்!” என்று ஒரு ரத்தின மாலையைக் கொடுத்து விட்டு மறைந்தார்.

மறு நாள், துங்கபத்திரா நதிக்குச் சென்று நீராடிக் கொண்டிருந்தார் பானுதாசர். அப்போது அங்கு வந்த காவலர்கள், அவரைக் கைது செய்தனர்!

”என்ன விஷயம்? ஏன் என்னைக் கைது செய்கிறீர்கள்?” எனக் கேட்டார் பானுதாசர்.

”அதிகம் பேசாதே! திருட்டுக் குற்றத்துக்காக உன்னைக் கைது செய்கிறோம்!” என்றனர் காவலர்கள்.

”என்ன… நான் திருடினேனா?” _ பதைபதைத்தார் பானுதாசர்.


”நடிக்காதே! பாண்டுரங்கனின் ரத்தின மாலையைத் திருடியதுடன், அதை உன் கழுத்தில் வேறு அணிந்திருக்கிறாயே… என்ன தைரியம்?!” என்றவர்கள்,

பானுதாசரை இழுத்துச் சென்று மன்னரின் முன் நிறுத்தினர்.

”அடேய், திருடா! நீ பகவானை சேவிக்க வந்தாயா? இல்லை களவாட வந்தாயா?”- கோபம் பொங்கக் கேட்டார் மன்னர்.

”மன்னா… என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக் கிறீர்கள். நான் பகவான் பாண்டுரங்கனை பண்டரி புரம் அழைத்துச் செல்லவே வந்தேன்!” என்றார் பானுதாசர்.

இதை, மன்னர் ராம் ராயர் நம்பவில்லை!


”திருடனே… உனது பித்தலாட்டம் இனியும் செல்லுபடி ஆகாது!” என்றவர்,

காவலர்களை அழைத்து பானுதாசரை கழுவில் ஏற்றுமாறு உத்தரவிட்டார்.

அப்போது மந்திரி ஒருவர் குறுக்கிட்டு, ”அரசே! கண்ணால் காண்பதெல்லாம் உண்மையாகி விடாது. இவரைப் பார்த்தால் கள்வராகப் படவில்லை. எதையும் தீர விசாரித்து முடிவெடுக்க வேண்டும்!” என்றார்.

மந்திரியின் கூற்றை மன்னர் ஏற்கவில்லை. ”இவனைப் போன்றவ னுக்கு நீதி விசாரணை தேவையில்லை. இவன் குற்றவாளி என்பதற்கு, கழுத்தில் கிடக்கும் ரத்தின மாலையே ஆதாரம்.

அதைப் பறிமுதல் செய்து விட்டு, தண்டனையை நிறைவேற்றுங்கள்!” என்றார் கடுமையாக.


பகவான் தம்முடன் வருவதற்கான வேளை வந்து விட்டது என்பதை உணர்ந்த பானுதாசர் புன்னகைத்தபடி, காவலர் களுடன் கிளம்பினார்.

கொலை களத்தை நெருங்கியதும் கழுமரத்தை உற்று நோக்கினார் பானுதாசர்.

மறு கணம், அந்த அதிசயம் நிகழ்ந்தது. கழுமரத்தில் பாதிப் பகுதி… இலை- கிளை பரப்பி, பூத்துக் குலுங்கியது!

காவலர்கள் ஓடோடிச் சென்று மன்னரிடம் விஷயத்தைக் கூறினர். மன்னர் அதிர்ந்தார். கொலை களத்துக்கு விரைந்தார்.

அங்கு, பூத்துக் குலுங்கும் கழுமரத்தைக் கண்டவருக்கு தனது தவறு புரிந்தது.


பானுதாசரின் கால்களில் வேரற்ற மரம் போல் வீழ்ந்தார். ”மன்னியுங்கள்” என்று கதறினார்!

அவரை ஆதரவாகத் தூக்கி நிறுத்திய பானுதாசர், ”நம் எல்லோரையும் மன்னிக்க வல்லவர் பகவான் பாண்டுரங்கனே!” என்றபடி மன்னரை அழைத்துக் கொண்டு கோயிலுக்குக் கிளம்பினார்.

அனைவரும் ஆலயத்தை அடைந்தனர். அப்போது

ஓர் அசரீரி: ”மன்னா… பரம பக்தனான பானுதாசனை, கள்வன் என்று குற்றம் சாட்டியதால் நீ தவறிழைத்து விட்டாய்; எனது நிபந்தனையை மீறி விட்டாய். எனவே, இனி நான் இங்கிருக்கப் போவதில்லை.

எப்போதெல்லாம் என்னைத் தரிசிக்க விரும்புகிறாயோ அப்போது பண்டரிபுரம் வந்து என்னை வழிபடு!” என்றது.


அதன்படியே ஸ்ரீபாண்டுரங்கனின் விக்கிரகத்தை பானுதாசரிடம் ஒப்படைத்தான் மன்னன்.

பரம பக்தர் பானுதாசரின் முயற்சியால் மீண்டும் பண்டரிபுரத்தில் எழுந்தருளினார் பாண்டுரங்கன்.

சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Classics