Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics Inspirational

4  

anuradha nazeer

Classics Inspirational

உலகிலேயே அழகான நடராஜர்

உலகிலேயே அழகான நடராஜர்

5 mins
180


உலகிலேயே அழகான நடராஜர் 

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.


அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.



பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.


சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.



சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. 


இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.



மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது.



திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.



படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.



 இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.



உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.



ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.



அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.

“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.


கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!


உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறினான் அரசன்.



அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.



இது ஆறாவது சிலை.

ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.



மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.

உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.



 இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.

“அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.


ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.


சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.

“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.

அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொன்னான்.


மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றான்.


“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?


கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று பதட்டத்தோடு சொல்ல.


“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்” என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..



சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.


ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.



அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.

கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.



உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!



வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.

ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.



குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.



நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.



ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான்.



”உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.


சிற்பி இல்லை என்று தலையாட்டினார், “என்ன சொல்ல வருகிறாய்?” மன்னன் மறுபடியும் சீறினான்.



”இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சொல்ல….

“இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான்.



”இல்லை அரசே .இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.


உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.



பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது! தரையை நனைத்தது.



மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.

இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.





எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.



வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.

கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் *திருநல்லம்*. இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.



ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.



உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.


சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!



 கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.



அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!



 தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.



தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.



இறைவி பெயர் தேகசௌந்தரி,

ஸ்தலமரம் அரசு,

தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.



கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும்.



குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்.


 எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள்!


கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்களேன்!


திருநல்லம் ஒரு முறையேனும் சென்று வாருங்கள். சிவ அழகில் சொக்கிப் போய் வருவது கண்கூடான உண்மை…


Rate this content
Log in

Similar tamil story from Classics