விமானத்தில் விவசாயி
விமானத்தில் விவசாயி


வெளி மாநில தொழிலாளிகளை விமானத்தில் சொந்த ஊர் அனுப்பிய விவசாயி
புதுடில்லி: டில்லி விவசாயி ஒருவர், தன்னிடம் பணிபுரிந்த 10 வெளி மாநில தொழிலாளிகளை, விமானத்தில் டிக்கெட் எடுத்து சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்தார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. வெளி மாநில தொழிலாளிகள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தும், சைக்கிளிலும் பயணம் செய்தனர். மத்திய அரசு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்த பின், பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், டில்லியை சேர்ந்த பப்பன் கெக்லாட் என்ற பண்ணை விவசாயி, காளான் விவசாயம் செய்து வந்தார். அவரது பண்ணையில், பீகாரை சேர்ந்த 10 பேர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கால் தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்பிய அவர்களுக்கு விமானத்தில் டிக்கெட் எடுத்து கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். கெக்லாட் விமான டிக்கெட்டுக்காக சுமார் 68 ஆயிரம் ரூபாய் செலவிட்டதுடன், தொழிலாளர்களின் செலவுக்காக தலா ரூ.3 ஆயிரமும் கொடுத்து அனுப்பி உள்ளார்.விமானத்தில் பயணிப்பது குறித்து வெளி மாநில தொழிலாளிகள் கூறுகையில், இதுகுறித்து நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை. எங்கள் முதலாளி இதை செய்து கொடுத்துள்ளார். நாங்கள் நடந்தோ, சைக்கிளிலோ, பஸ்சிலோ அல்லது ரயிலிலோ செல்லவில்லை. விமானத்தில் பயணிக்கிறோம். இதை எங்களால் நம்பவே முடியவில்லை. எங்களை நாங்களே கிள்ளி பார்த்து கொண்டோம். இவ்வாறு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
விவசாயி கெக்லாட்டின் சகோதரர் கூறுகையில், 'முதலில் ரயிலில் அனுப்ப தான் முடிவு செய்தோம். ஆனால், டிக்கெட் கிடைக்காததால், விமானத்தில் அனுப்ப முடிவு செய்தோம். இவர்கள் 20 ஆண்டுகள் எங்களுடன் பணியாற்றிவர்கள். அவர்கள் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம். அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம்' என்றார்.