வெண் மேகத்தின் வெள்ளிக் கோடுகள்
வெண் மேகத்தின் வெள்ளிக் கோடுகள்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் சரித்திரமாக அமைந்தது. இக்கதையின் நாயகி நானே! என் பெயர் பிரியா. இக்கதை என் பள்ளிப் பருவத்தில் தொடங்கி எவ்வாறு வாழ்வின் திருப்புமுனையை அடைந்தேன் என்பதே.
பள்ளியின் பெயர் நடராஜர் கூடம். என் பள்ளிப் பருவம் அனைவருடையது போல சுவை மிக்கதாக தான் அமைந்தது. அன்பான நண்பர்கள், அரவணைப்பான ஆசிரியர்கள் என காலம் கடப்பதையே மறந்து செயல்படுவோம். என் பள்ளி ஒரு அழகிய வனம் பூச்செண்டுகளையும் மரங்களையும் வளர்க்கும் நற்குணங்களை மிக்கவர்கள் அதிகம். இயற்கையை காப்பதில் மட்டுமல்ல மனிதநேயம் கொண்டவர்கள்.
இன்றும் மறக்கமுடியாத நாட்கள் என்றால், பத்தாம் வகுப்பு படித்த காலம் தான். மன நிறைவோடு மகிழ்ச்சியாக படித்து பொதுத்தேர்வில் 460 மதிப்பெண் எடுத்தேன்.
அதன் பிறகு என்ன, அனைவரும் ஒரே கேள்வி தான், அடுத்த நிலையில் இருக்கிறாய் என்ன செய்ய போகிறாய்?என்று கேள்விக்கு மேல் கேள்வி தான்.
எந்த ஒரு குறிக்கோளூம் இல்லாததால் பெற்றோரின் அறிவுரைப் படி உயிரியல் பிரிவைச் சேர்ந்தேன். இதற்காகவே அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தேன்.
முதன் முதலில் சேர்க்கைகாக வந்த பொழுது தான் பள்ளியை சுற்றிப் பார்த்தோம். சிறு வயதில் பல முறை அங்கு கீழ் வீட்டு நண்பர்களுடன் சென்றிருக்கிறேன்.ஆனால் முதன் முறையாக சுற்றிப் பார்த்தது அப்போது தான்.
அன்று அந்த இடங்களில் நான் எங்கள் அழகிய நாட்கள் எவ்வாறு கழிந்தது என்று யோசித்து சிரித்துக் கொண்டிருந்தேன். 6ஆம் வகுப்பு படிக்கும் போது அப்பா வாங்கிக் கொடுத்த மிதிவண்டியை பல முறை கீழே போட்டு அம்மாவிடம் அடி வாங்கி விடக்கூடாது என்று ஓடி இருக்கிறேன்.
நண்பர்களுடன் பூப்பந்து விளையாடும் இடத்தில் இருவர் இருவராக பிரிந்து விளையாடி விட்டு, தின்பண்டங்களை அடித்து பிடித்து சாப்பிட்டு விட்டு 4 முதல் 6 மணி வரை மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வந்த நினைவுகளோ நினைவுகள், என்று எண்ணப் பூங்கொத்துடன் நடந்து சென்றேன்.
அங்கும் நல்ல முறையில் சில வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை கற்றுக் கொண்டேன். அங்கு தான் வாழ்க்கை என்றால் படிப்பு மட்டுமல்ல என்று புரிந்து நடக்கத் தொடங்கினேன். நல்ல முறையில் கல்வியறிவையும் வாழ்க்கை நெறியையும் கற்றுக் கொடுத்த உயர்உள்ளம் கொண்ட ஆசிரியர்களுக்கு இக்கதை சமர்ப்பணம்.
பின் பண்ணிரெண்டாம் வகுப்பிலும் விடாமுயற்சியைக் கொண்டு ஆசிரியர்களின் ஆசிர்வாதத்துடன் 490 மதிப்பெண் எடுத்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பெற்றோர், ஆசிரியர்கள் அனைவரும் சக மாணவர்களையும் என்னையும் பாராட்டினார்கள்.
பண்ணிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே எனக்கு வழக்கறிஞர் ஆவதில் நாட்டம் இருந்ததால் அதனையே படிக்கலாம் என்று நினைத்தேன். அம்மாவிற்கும் உறவினர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. என்னை விட அவர்கள் மிகவும் ஆர்வம் செலுத்தினர். ஆனால் இதனைப் பற்றி அப்பா விசாரித்து பார்த்ததில் ஒரு பெண் பிள்ளை அங்கு சென்று படிப்பது என்பது சரியாக இருக்காது என பல நண்பர்கள் கூறியதால் அவரும் மனதிற்கு ஒப்பு வராமல் வேண்டாம் என்றார்.
ஆனால் நானோ அனைவரும் ஒப்புக் கொண்டதால் அதில் சேர்வதற்கான படிப்பை முக்கால் பகுதி முடித்துவிட்டேன். பின்னர் தந்தை இவ்வாறு முடிவு எடுத்ததும் என்னால் அதனைக் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது. பெண் பிள்ளைகள் என்றால் என்ன? இருபாலரும் சமம் தானே என்றும் ஆபத்து என்பது நம்மைத் தாண்டி வரப் போவதில்லை என்றும் போராடினேன் இருப்பினும் அப்பா ஒப்புக் கொள்ளவில்லை.
மிகவும் கடினமான காலமாக இருந்தது அந்நாட்கள். இவ்வாறெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை அதனால் துன்பம் அதிகமானது.இருப்பினும் நம்பிக்கையை இழக்காமல் இருந்தேன். பின்னர் ஒருநாள் தந்தையின் நெருங்கிய நண்பர் ஒருவர் தன் மகளை ஒரு அறிமுகமில்லாத உணவு சம்பந்தப்பட்ட பிரிவில் சேர்த்திருப்பதாக கூறினார்.
ஆகையால் தந்தையும் அதனைப் பற்றி விசாரித்து அங்கு சேர்த்துவிடுவதற்காக பேசினார் என்னிடம் வேறு வழியில்லாமல் நானும் வந்துப் பார்க்க முடிவு செய்தேன். கல்லூரி மதுரையில் இருப்பதால் காலை உணவை முடித்து விட்டுப் புறப்பட்டோம்.
பாட்டியும் தாத்தாவும் உடன் வருவதால் பேருந்து பயணத்தை விடுத்து மகிழுந்தில் செல்ல முடிவு செய்தார்கள் பெற்றோர். மகிழுந்தில் பாட்டுக்குப் பாட்டு விளையாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் வந்தோம்.
போட்டியில் தோல்வியைச் சந்திப்பவர் ஒரு மாதத்திற்கு தினமும் கசாயம் குடிக்க வேண்டும் என்று ஒப்புதலிட்டோம். போட்டியும் சுவாரஸ்யமான நிலையில் தான் சென்றது. இறுதியில் தாத்தா தான் தோல்வியடைந்தார். தினமும் கசாயமும் குடித்தார். அதிலும் ஒரு நல்லது நடந்தது அவருக்கு இருக்கும் பாதி நோய்கள் தீர்ந்தது.
இடையில் ஓட்டுனருக்கும், தாத்தா பாட்டிக்கும் தேனீரும், எனக்கும் என் அம்மா, அக்காவிற்கு பழச்சாறும் வாங்கித் தந்தார் அப்பா. அதனைக் குடித்துவிட்டு மறுபடியும் பயணத்தைத் தொடங்கினோம்.
ஆரம்பத்தில் விருப்பம் இல்லாமல் தான் சென்றேன். ஆனால் கல்லூரியின் வெளித்தோற்றம் என்னையே அறியாமல் பார்க்கச் செய்தது.வாயிலில் விளக்குகளும், தேவி சரஸ்வதியின் படமும் மிக அழகாக பிரம்மாண்டமாக இருந்தது.
முகப்பில் நின்ற பேராசிரியை சோனா அவர்கள் பொன் முகத்துடன் என்னிடம் பேசிக்கொண்டே வந்தார். செல்லும் வழியெங்கும் பூக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் காட்சிக் கொடுத்தது. அது என்னை வரவேற்பது போல காட்சியளித்து. அப்போது நான் எதிர்பார்த்ததை விட பெரிய கல்விப் பரிசு கிடைக்கும் என்று தோன்றியது. இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அதன் பின் முதல்வரிடம் அழைத்துச் சென்றார் பேராசிரியை. அவர் என்னைப் பற்றி விசாரித்தார். பின் எவரின் மூலம் இங்கு சேர்ந்தாய்? என்றார். நானும் நடந்ததை கூறினேன். அவரும் நிச்சயம் இங்கிருந்து செல்லும்போது நல்ல நிலைக்கு தான் செல்வாய் என்றார். பின்னர் தேவையான விவரங்களைக் கேட்டு என்னைச் சேர்த்துக் கொண்டார்.
விடுதியில் தான் சேர்ந்து படித்தேன். சில நாட்கள் கழித்து கல்லூரி ஆரம்பமானது.
இங்கு இருக்கும் சில ஆசிரியர்களின் உரை கேட்டு இந்தப் பிரிவினைச் சேர்ந்த செய்திகளை திரட்ட ஆரம்பித்தேன்.
அப்போது தான் இந்த கல்லூரியின் வரலாறையும் மேம்பாடுகளையும் பற்றித் தெரிந்துக் கொண்டேன்.நாட்களும் கலிந்தது,
என் கனவைப் பற்றிய சிந்தனைகள் குறைந்து இதில் நாட்டம் காட்டத் தொடங்கினேன்.
விடுதியிலும் நண்பர்களின் உதவியோடு கற்பித்தல் முறையை நன்றாக செய்து வந்தேன்.
ஒருநாள் புதிதாக ஆங்கில ஆசிரியை சேர்ந்தார். அவரின் அழகு உள்ளத்தின் அழகையும் வெளிக்கொணர்ந்தது. அவர் பெயர் சைரந்தரி. அவரிடம் இருந்து பல வகையான ஆதரவுகளையும் அறிவையும் பெற்றேன். எனது கதைப் படிக்கும் திறன் கண்டு மகிழ்ச்சி அடைந்து உன் கருத்துக்களை செயலிகள் மூலம் வெளிப்படுத்த அறிவுறுத்தினார்.
நானும் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து திறனை மேம்படுத்திக் கொண்டு இருக்கிறேன். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் இன்று கதைகள் எழுதிக் கொண்டுள்ளேன். இப்போது தோன்றுகிறது.
அன்று நான் விரும்பிய பிரிவில் சேர்ந்திருந்தால் கூட இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. பலவகையான சுவைமிக்க வேதனைகளைக் கடந்தாலும் இன்று எதிர்ப்பாரத நல்ல நிலையில் உள்ளேன்.
"Every cloud has a silver lining, but I had a platinum lining". 😊 மேகத்தின் வெள்ளிக் கோடுகள்
