anuradha nazeer

Inspirational

4.5  

anuradha nazeer

Inspirational

வேறு எந்தத் தாய்க்கும்

வேறு எந்தத் தாய்க்கும்

2 mins
11.8K


எனக்கு நீதியும் நிம்மதியும் வேண்டும்!'- மகன்கள் மீது புகார் கொடுத்த 72 வயதுத் தாய்

`நான் இருந்த வீட்டிலிருந்து என்னை வெளியேற்றிவிட்டு அதன் ஒரு பகுதியில் டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு விட்டதுடன் பார் நடத்தியும் வருகின்றனர். குடியிருந்த வீட்டில் சாராயக் கடை நடத்துவது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை’

தஞ்சாவூரில் தாய் ஒருவர், தான் குடியிருந்த வீட்டை விட்டு எனது மகன்கள் என்னை வெளியேற்றியதுடன், வீட்டின் ஒரு பகுதியை டாஸ்மாக் கடைக்கு வாடகைக்குக் கொடுத்ததுடன், பாரும் நடத்தி வருகிறார்கள். மேலும், சொத்துக்காகத் தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் தனது மகன்கள் மீதே கலெக்டரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து செல்லம்மாள் கூறியதாவது, ``தஞ்சாவூர் பூக்காரத்தெருவில் வசித்து வந்தேன். என் கணவர் சுப்பையன், ஆர்.டி.ஓ அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்தவர். அவர் இறந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு 3 பெண், 3 ஆண் என 6 பிள்ளைகள். இதில் செந்தில்குமார் என்ற ஒரு மகனைத் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன.


எனது பெயரில் ரூ.14 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதை 6 பிள்ளைகளுக்கும் சமமாமப் பிரித்துக் கொடுக்க நினைத்தேன். ஆனால், இதற்கு எனது மகன்களான கதிரேசன் மற்றும் மணிகண்டன் ஆகிய இரண்டுபேரும் ஒப்புக் கொள்ளாததுடன் சொத்து முழுவதையும் அவர்களே அபகரித்துக்கொள்ள வேண்டும் என நினைத்தனர். எழுதப் படிக்கத் தெரியாத என்னை ஏமாற்றி அவர்கள் பெயரில் செட்டில்மென்ட் எழுதிக்கொண்டனர்.


இதைப் பின்னர் அறிந்த நான், அதை ரத்து செய்து விட்டேன். அதிலிருந்து இரண்டு பேரும், அவர்கள் மனைவியுடன் சேர்ந்து கொண்டு என்னைக் கொடுமைப்படுத்தி வந்தனர். நான் இருந்த வீட்டிலிருந்து என்னை வெளியேற்றிவிட்டு, அதன் ஒரு பகுதியில் டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு விட்டதுடன் பார் நடத்தியும் வருகின்றனர். குடியிருந்த வீட்டில் சாராயக் கடை நடத்துவது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. சரி நம்ம பிள்ளைகள் தானே என அதனையும் பொறுத்துக் கொண்டேன்.

இந்தநிலையில் என்னிடமிருந்த சொத்துக்களுக்கான ஒரிஜினல் பத்திரங்களை அவர்கள் வைத்துள்ளனர். சமமாகப் பிரித்துக்கொடுப்பதற்காக பத்திரங்களைக் கேட்டு வந்த என்னை, கொரோனா ஊரடங்கு என்றும் நினைக்காமல் ஒரு தாய் என்றும் பாராமல் கதிரேசனும் மணிகண்டனும் தாக்கினர். கொலை செய்யும் நோக்கத்துடன் பெல்டால் எனது கழுத்தை நெறித்தனர். `அம்மாவை ஒண்ணும் செய்யாதீங்க’ என எனது நடு மகன் செந்தில்குமார் கையெடுத்துக் கும்பிட்டான். இதையடுத்து வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டனர்.


அதன் பிறகு ஏற்கெனவே கணவனை இழந்து பொருளாதார ரீதியாகக் கஷ்டபட்டு வரும் மகளான சரஸ்வதி வீட்டில் தங்கியிருக்கிறேன். எந்தத் தாயும் தன் பிள்ளைகளைப் பிரித்துப் பார்க்கமாட்டாள். நானும் அப்படித்தான் இருக்க நினைக்கிறேன். என்னுடைய கடைசிக் காலத்தை, நான் வாழ்ந்த வீட்டில் வாழ நினைக்கிறேன். அத்துடன் நான் உயிருடன் இருக்கும்போதே சொத்தை ஆறு பிள்ளைகளுக்குப் பிரித்துத் தர நினைக்கிறேன். என்னை இரண்டு மகன்களும் கொலை செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். சில வருடங்களாக நான் அனுபவிக்காத கஷ்டங்களே இல்லை.

எனக்கு நீதி வேண்டும் வாழ்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் எனக்கு நிம்மதி வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவிடம் மனு கொத்துள்ளேன். மேலும், மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. எனக்கு வந்த நிலை வேறு எந்தத் தாய்க்கும் வரக் கூடாது’’ என்றார் வேதனையுடன்.



Rate this content
Log in

Similar tamil story from Inspirational