ஊரடங்கு
ஊரடங்கு


20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த காற்றுமாசு: நாசா
வாஷிங்டன்: ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், வட இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்றுமாசு குறைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அனைத்து போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் இயக்கம் உள்ளிட்டவை முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால், காற்று மாசு குறைந்துள்ளதாக சமீபத்திய சில ஆய்வுகள் தெரிவித்தன. அந்த வகையில், அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் தகவல்களின்படி, இந்த ஆண்டு வட இந்தியாவில் காற்று மாசுபாடு, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நாசாவின் செயற்கைக்கோள் சென்சார்கள் மூலமாக ஏரோசல் அளவி
ன் மதிப்பீடுகள் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளது. 2016-19ம் ஆண்டில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் வரைபடங்களுடன் ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் ஏரோசல் ஆப்டிக்கல் ஆழத்தை காட்டுகிறது. ஏரோசோல் ஆப்டிகல் ஆழம் என்பது வளிமண்டலத்தின் வழியாக பயணிக்கும்போது ஒளி எவ்வாறு உறிஞ்சப்படுகிறது அல்லது வான்வழி துகள்களால் பிரதிபலிக்கப்படுகிறது என்பதற்கான ஒரு நடவடிக்கையாகும்.
இது குறித்து நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மையத்தின் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் (யு.எஸ்.ஆர்.ஏ) விஞ்ஞானி பவன் குப்தா கூறுகையில், ‛‛ஊரடங்கின் போது பல இடங்களில் வளிமண்டல அமைப்பில் மாற்றங்களைக் காண்போம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த ஆண்டு இந்தோ-கங்கை சமவெளியில் இவ்வளவு குறைவான காற்று மாசை நான் பார்த்ததில்லை. ஊரடங்கின் முதல் வாரத்தில் ஏரோசல் குறைவதை நாங்கள் கண்டோம்,'' என்றார்.