உற்சாகத்துடன் ஊர்க்காவல் படை வீரர்
உற்சாகத்துடன் ஊர்க்காவல் படை வீரர்


வீட்டு வாடகை வாங்கல; 3 வேளையும் உணவு' - பீகார் தொழிலாளர்களை நெகிழ வைத்த ஊர்க்காவல் படை வீரர்
சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஊர்காவல் படையில் பணியாற்றும் ரஞ்சித்குமார், பீகார் தொழிலாளர்களுக்கு ஊரடங்கு சமயத்தில் மூன்று வேளை உணவளித்ததோடு வீட்டு வாடகையும் வசூலிக்கவில்லை.
சென்னை திருவான்மியூர், பாரதிநகர், எல்.பி.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (27). எம்.ஏ படித்து வரும் இவர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றிவருகிறார். இவர், 2 வீடுகளை பீகார் தொழிலாளர்களுக்கு வாடகைக்குக் கொடுத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், ரஞ்சித்குமார் வீட்டில் தங்கியிருந்த 10 பீகார் மாநில தொழிலாளர்களுக்கும் வேலையில்லாமல் போய்விட்டது. ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன் 5 தொழிலாளர்கள், தங்களின் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.
ஊரடங்கு காரணமாக 5 தொழிலாளர்களால் ஊருக்குச் செல்ல முடியவில்லை. வேலை இழந்தவர்களிடம் வாடகை வசூலிக்க வேண்டாம் என வீட்டின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்று வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்கவில்லை. ஆனால், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால் வேறுவழியின்றி வாடகை கொடுக்கும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டனர். ஊரடங்கையொட்டி தன்னுடைய வீட்டில் குடியிருந்த பீகார் தொழிலாளர்களிடம் வாடகை வசூலிக்காமல் அவர்களுக்குத் தேவையான உணவை மூன்று நேரமும் கொடுத்து உதவியுள்ளார் ஊர்க்காவல் படை வீரர் ரஞ்சித்குமார்.
இதுகுறித்து ரஞ்சித்குமாரிடம் பேசினோம். ``என்னுடைய சொந்த ஊர் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள ஜமீன்புதூர். அப்பா நடராஜன், காவல்துறையில் பணியாற்றியவர். அப்பா இறந்துவிட்டார். நானும் அம்மா கன்னியம்மாளும் திருவான்மியூரில் குடியிருந்துவருகிறோம். 2 வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளோம். அதில் ஒரு வீட்டிற்கு 3,500 ரூபாயும் இன்னொரு வீட்டிற்கு 4,000 ரூபாயும் மாத வாடகைக்கு கொடுத்துள்ளோம். 10 பீகார் தொழிலாளர்கள் குடியிருந்தனர்.
ஊரடங்கால் வேலையை இழந்த பீகார் தொழிலாளர்களிடமிருந்து வாடகை வசூலிக்கவில்லை. அப்போதுதான் வருமானம் இல்லாமல் அவர்கள் சாப்பிட வழியில்லாமல் சிரமப்படுவது தெரிந்தது. உடனே அம்மாதான் அனைவருக்கும் மூன்று வேளை உணவு சமைத்துக் கொடுத்தார். இந்தச் சமயத்தில் என்னுடைய சகோதரர் ஒருவரின் திருமணத்துக்காக நானும் அம்மாவும் செல்ல வேண்டியிருந்தது. அதனால் பீகார் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டுச் சென்றேன்.
மயிலாப்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் குமாரவேல் மற்றும் ரைட்டர் குழந்தைவேல் ஆகியோரிடம் பீகார் தொழிலாளர்களை சிறப்பு ரயில் மூலம் ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்யும்படி கூறினேன். காவலர்களின் உதவியால் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் 2 தடவை ஊருக்குச் செல்வது ரத்தானது. அப்போதெல்லாம் பைக்கில்தான் அவர்களை ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தேன். 26-ம் தேதி அவர்கள் அனைவரும் ரயில் மூலம் சொந்த ஊருக்குச் சென்றனர். அப்போது, செலவுக்கு 7,500 ரூபாயும் ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்களையும் கொடுத்தேன். அதோடு என்னுடைய டிரஸ்களையும் கொடுத்து அனுப்பினேன்.
ரயிலில் புறப்பட்டுச் செல்லும்போது அவர்கள் அழுதுவிட்டனர். ஊருக்குச் சென்றபிறகு வீடியோ காலில் என்னிடம் பேசினார்கள். ஊரடங்கு முடிந்த பிறகு, சென்னைக்கு வருவதாகக் கூறினர். எனக்கு ஊர்க்காவல் படையில் கிடைக்கும் சம்பளத்தில் இதுபோன்ற உதவிகளைச் செய்ய முடியாது. நான் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்திவருகிறேன்.
மேலும், கிராமத்தில் விவசாயம் மூலம் கிடைக்கும் அரிசி, பருப்பு வகைகளைக் கொண்டுதான் பீகார் தொழிலாளர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்தேன். குரூப் 1 ஆபீஸர் அல்லது ஐ.பி.எஸ்ஸாக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். அதற்கான தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்" என்றார் உற்சாகத்துடன்.