anuradha nazeer

Inspirational

4.8  

anuradha nazeer

Inspirational

தடுப்பு நடவடிக்கை

தடுப்பு நடவடிக்கை

4 mins
23K


தடுப்பு நடவடிக்கைகளை கையாளும் வழிகளை சரியாய் செய்யுங்கள் !


சென்னை: ஊரடங்கு பிறப்பித்தும், சமூக பரவலாக மாறுகிறதோ என, மக்கள் அலறும் அளவுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'பாதிப்பின் விபரீதத்தை உணர்ந்து, தடுப்பு நடவடிக்கைகளையும், அவற்றை கையாளும் முறைகளையும் மாற்றினால், கொரோனா தொற்றை, நிச்சயம் நம்மால் வெல்ல முடியும்' என, தமிழக அரசுக்கு, மருத்துவ வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.


கொரோனாவின் கொடூரம் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1,600ஐ தாண்டி விட்டது; உயிரிழந்தோர் எண்ணிக்கை, 18 ஆகிவிட்டது. ஊரடங்கால் பாதிப்பு குறையும் என, எதிர்பார்த்த நிலையில், தொற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.


வெளிநாடுகளுக்கு சென்று வந்தோர், அவர்களின் தொடர்பில் இருந்தோர் மட்டுமின்றி, சிகிச்சை அளித்த டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், பத்திரிகை, ஊடகத் துறையினரும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதோ என, மக்கள் பீதியடைந்துள்ளனர். பாதிப்பின் வேகத்தை பார்த்து, அரசும் திணறி வருகிறது.இதற்கு, ஊரடங்கை முறையாக கடைப்பிடிக்காதது, முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


மக்களை வெளியில் வர விடாமல் தடுப்பதில், அரசு ஆரம்பத்தில் காட்டிய வேகம், அடுத்தடுத்த வாரங்களில் குறைந்து விட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது; இஷ்டம் போல் வாகனங்களில் உலா வருகின்றனர். சில இடங்களில், நெரிசல் ஏற்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. வீட்டுக்குள் முடங்கிய மக்கள் வெளியில் வர, 'ரேஷன் கடைகளில் இலவசம் தருகிறோம்; நிவாரண நிதி தருகிறோம்' என, அரசே வழி வகுத்துக் கொடுத்தது. பாதிப்பின் தன்மையை உணர்ந்து, உதவிக்கு வருவோரை மக்கள் முண்டியடிக்கின்றனர்.


விபரீதத்தின் தன்மையை, மக்களுக்கு இன்னும் ஆழமாக, அரசு புரிய வைக்கவில்லை என்பது தான் உண்மை. பாதிப்புள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளையும், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தவில்லை. பரிசோதனைகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தமிழக அரசு, ஆய்வுக் கூட்டங்களில் கவனம் செலுத்துவதோடு மட்டும் நின்று விடாமல், தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.தடுப்பு நடவடிக்கைகளை கையாளும் முறையையும், அணுகுமுறையையும் மாற்றினால், கொரோனாவை தமிழகம் எளிதில் வெல்லலாம் என, தமிழக அரசுக்கு, மருத்துவ வல்லுனர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.

பரிந்துரைகள் என்ன?


* பரிசோதனை பதிவுகள், முடிவுகள் அறிவிப்புகளில் குளறுபடி உள்ளது. 'தினமும், 1,000 பேரின் மாதிரி எடுத்து பரிசோதித்ததில், இத்தனை பேருக்கு பாதிப்பு' என, கூறுகின்றனர். மாதிரி எடுத்த அன்றே பரிசோதனை முடிவுகள் வருவதில்லை. பரிசோதனை மையத்திற்கு சென்று, திரும்ப வர, மூன்று, நான்கு நாட்கள் வரை ஆகும். இதனால், அன்றாடம் அறிவிப்புக்கும் முடிவுகளை வைத்து, தொற்று பாதிப்பு குறைந்தது, கூடுகிறது என, கணிக்க முடியாது. எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட்ட மாதிரி முடிவுகள் இது என்பதை, தெளிவாக விவரிக்க வேண்டும்.


* கூட்டம் கூட்டமாக நிற்க வைத்து, ஒரே நாளில், 200, 300 பேருக்கு மாதிரி எடுப்பது, சரியான நடைமுறை அல்ல. யாராவது ஒருவருக்கு தொற்று இருந்தால், அவை மற்றவர்களுக்கும் பரவக்கூடும். இதனால், பல்வேறு மையங்களுக்கு பிரித்து அனுப்பி, உரிய இடைவெளி விட்டு நிற்க வைத்து, பரிசோதனை செய்ய வேண்டும்.


* பரிசோதனையின் போதே, அவர்களின் முகவரி, மொபைல் போன் எண் மட்டுமின்றி, அவர்களுடனான தொடர்புகள், எங்கெங்கு சென்று வந்தனர் என்பது உள்ளிட்ட முழு விபரங்களை பெற்று, அதன் பின் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானபின், அவரை தேடுவதும், அதன்பின், அவருடை தொடர்புகளை தேடுவதுமான நடைமுறை தான் தற்போது உள்ளது. அதற்குள், பலருக்கும் தொற்று பரவி விட வாய்ப்புள்ளது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்.


* தொற்று பாதிப்புள்ளவர் வீட்டில் உள்ளோர், நெருங்கிய தொடர்பில் உள்ளோர் என்று தேடி, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களில் யாருக்கேனும் தொற்று பரவி இருந்தால், சுற்றியுள்ள வீடுகள், தெருக்கள் என, பரிசோதனைக்கு செல்லும் நிலை உள்ளது. அவ்வாறு இல்லாமல், ஒருவருக்கு தொற்று வந்து விட்டால், அந்த பகுதி முழுவதும் பரிசோதனையை தீவிரப்படுத்தினால், கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க முடியும்.



* இது தவிர, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், தீவிர கவனம் தேவை. அவர்கள் பொறுப்பின்றி, வெளியில் வரும் நிலை கூடாது ஊரடங்கில் குளறுபடி.


ஊரடங்கில் குளறுபடி


* ஊரடங்கை அறிவித்த அரசு, அவற்றை நடைமுறைப்படுத்துவதில், பல்வேறு குளறுபடிகளை செய்து விட்டது. சாலைகளில் வாகனங்கள் அணிவகுப்பதும், கடைகளில், மார்க்கெட்டுகளில், மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பதும் தொடர்கிறது. பாதி பேர் வரை, முக கவசம் அணிவதில்லை. இந்த நடைமுறையை முற்றிலும் தடுக்க வேண்டும். இதற்காக அரசும், காவல் துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.


* கேரளாவில், முகமூடி அணியாமல் வந்தால், அவர்களை ஆம்புலன்ஸ்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு, நெருக்கடி தருகின்றனர். அதுபோன்ற நெருக்கடி தமிழகத்தில் தேவை.


* ஆந்திராவில் உள்ளது போல், வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை கொடுக்கலாம். சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., - தோட்டக்கலைத் துறை செயல்படுத்தும், 'வீடு தேடி வரும் காய்கறி, மளிகை பொருட்கள் திட்டத்தை' இன்னும் விரிவுபடுத்த வேண்டும். பாரம்பரிய மருத்துவம்.


பாரம்பரிய மருத்துவம்


* தற்போதைய, சிகிச்சை முறைகளில் மிகவும் சிறப்பாகவே அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கவும், தொற்று பாதிப்பு வேகமாக குறையவும், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும். சீனா மற்றும் நம் அண்டை மாநிலமான கேரளாவில், கொரோனா தடுப்புக்கு, அலோபதியுடன் கூடிய பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறை கை கொடுத்துள்ளது.


* டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறை பரிந்துரைத்தது போல, கபசுர குடிநீர் உள்ளிட்ட, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைக்கும் மருத்துவ முறைகளை, அரசு ஏற்று, உடனடியாக நடைமுறைப்படுத்துவது நல்லது.


* இதற்காக,தற்காலிகமாக சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவர்களை பணியில் சேர்த்து, போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு நடைமுறைளை பின்பற்றினால், கொரோனாவை வெகு விரைவில் கட்டுப்படுத்த முடியும் என, மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இனி, மக்களின் நல்வாழ்வு தமிழக அரசின் கையில்!


வீட்டில் இருந்தாலும் அடிக்கடி கை கழுவுங்கள்!


கொரோனா பாதிப்பு துவங்கியும், அரசு கொடுத்த எச்சரிக்கை காரணமாக, பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்தனர். அடிக்கடி கைகளை கழுவினர். கை கழுவ வேண்டும் என்ற எண்ணம், சிறுவர்கள் மத்தியிலும் ஏற்பட்டது. ஆனால், சில நாட்களில் கைகழுவும் பழக்கம் சற்று குறைந்து விட்டதாகவே தெரிகிறது. 'நாம் வீட்டில் தானே இருக்கிறோம்' என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். வீட்டில் இருந்தாலும், கதவைத் திறக்கிறோம்; வீடு தேடி வரும் பொருட்களை வாங்குகிறோம். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர், குடியிருப்பின் பொதுவான பால்கனி பகுதியில் உலவுவோம். எனவே, தினமும் ஐந்து, ஆறு முறையாவது, கைகளை மிகவும் சுத்தமாக சோப்பால் கழுவ வேண்டும். கை கழுவும் பழக்கத்தை, ஒரு போதும் விடக் கூடாது; அலட்சியம் காட்டினால், கொரோனா நம்மை வென்று விடும் என்பதே உண்மை.



Rate this content
Log in

Similar tamil story from Inspirational