திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
சமண சமயத்திலிருந்து திருநாவுக்கரசர் மீண்டும் சைவ சமயம் சார்ந்ததை அறிந்த பல்லவ மன்னன், சமண குருமார்களின் ஏவலால் திருநாவுக்கரசரை அழைத்து வரச்செய்தான். சமணர்களின் தூண்டுதலினால் அரசன் அவரைக் கொல்வதற்காக நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) இட்டான். அதில் அவர் பிழைத்தது கண்டு சமணர்கள் அவர்க்கு நஞ்சு கலந்த சோற்றை ஊட்டினர். அதுவும் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவரை எப்படியாவது கொன்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தால் பட்டத்து யானையை ஏவினர். அதுவும் அவரைக் கொல்லாமல், வணங்கி அகன்றது. எப்படியேனும் கொன்றுவிடவேண்டும் என்று கருதித் திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் வீசினர். அச்சமயத்தில் திருநாவுக்கரசர் 'சொற்றுணை வேதியன்' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடியருளினார். ஈசன் அருளால் அக்கல் கடலில் தெப்பம்போல் மிதந்து அவரைக் கரைசேர்த்தது.
