anuradha nazeer

Inspirational

4.8  

anuradha nazeer

Inspirational

ஸ்மைலி சூப்பர் கிங்

ஸ்மைலி சூப்பர் கிங்

12 mins
23.2K


காட்டு மரம் மாதிரி இருக்கணும்!’ - காயங்களை உதறி எழுந்த ஸ்மைலி சூப்பர் கிங் பாலாஜியின் கதை!

டிரஸ்ஸிங் ரூம் பயங்கர ரவுசா இருக்கும். ஹர்பஜன் பண்றது பயங்கர ரணகளமா இருக்கும். செமையா மிமிக்ரி பண்ணுவார். மேனேஜர், கோச், ப்ளேயர்ஸ்னு எல்லார் மாதிரியும் பேசுவார். போன் பண்ணி மிரட்டுவார்.’


விவசாயம் மாதிரி நாங்களும் வெளியேதான் பொழப்பு நடத்தியாகணும். வீட்டுக்குள்ள என்ன பண்ண முடியும். வெளியுலகத்தை, கிரிக்கெட்டை ரொம்பவே மிஸ் பண்றேன்"

எல்.பாலாஜி

`அதுபோல், காயங்களால் தான் தொடவேண்டிய உயரத்தைத் தொடமுடியாமல் போன ஒருவர், லட்சுமிபதி பாலாஜி. வயிற்றில் பெரிய பிரச்னை, முதுகில் காயம், வருடக்கணக்கில் ஓய்வு என காயத்தோடு பெரும் போராட்டம் நடத்தியவர் அவர். தன் புரொஃபஷனல் கரியர் முழுவதுமே காயங்களால் அவதிப்பட்டுக்கொண்டே இருந்தவர். காயங்கள் இல்லாமல் இருந்திருந்தால் உலகின் நம்பர் 1 பௌலராக வந்திருப்பார் என்று சொல்லவில்லை. `நான் ஒன்றும் ஸ்டார் பிளேயர் இல்லை’ என்று அவரே சொல்கிறார்! ஆனால், நிச்சயம் இந்தியாவின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பார். தமிழகம் உருவாக்கிய மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பெயர் எடுத்திருப்பார். சில உலகக் கோப்பைகளில் பங்கெடுத்திருப்பார். உலகக் கோப்பை மெடலும் வென்றிருப்பார். மிடில் ஓவர்களில் வெகுநாள்கள் ஹர்பஜனை மட்டுமே நம்பியிருந்த இந்திய கேப்டன்களுக்கு பலவருடங்கள் துருப்புச் சீட்டாய் இருந்திருப்பார்!

ஏதோவொரு தடங்களால் தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும்போது பலரும் அதிலேயே மூழ்கிப்போவார்கள். அதை ஒவ்வோர் இடத்திலும் காரணமாக முன்னிறுத்துவார்கள். பாலாஜி… முற்றிலும் மாறுபட்டவர். தான் இதுவரை அடைந்த உயரத்தை நினைத்து பெருமைகொள்கிறார். அந்தப் பயணத்தை, அந்த அனுபவத்தை அரவணைத்துக்கொண்டிருக்கிறார். தவறியவற்றை நினைத்து வருந்தாமல், கிடைத்த வாய்ப்பைக் கொண்டாடுகிறார். அவ்வளவு பாசிட்டிவிட்டி. அவ்வளவு தெளிவு. அவரது தெளிவு, ஒவ்வொரு பதிலிலும் தெரிகிறது. `நான் ஒண்ணும் ஸ்டார் பிளேயர் இல்லை’, `கஷ்டம்தான். ஆனா, வறுமை இல்லை’ என்று உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கிறார். ஆச்சர்யம் அளிக்கிறார். இந்த லாக்டௌன் நேரத்தில், தன் நாஸ்டால்ஜியாக்களைக் கிளறி விகடனுக்கு அவர் கொடுத்த பிரத்யேக பேட்டி!


``இந்தக் கடினமான சூழ்நிலையில் என்ன செஞ்சுட்டு இருக்கீங்க? ஐபிஎல் நடந்துட்டு இருக்கவேண்டிய நேரம்... கிரிக்கெட்டை எவ்வளவு மிஸ் பண்றீங்க?"


``ஒரு மாசமா வீட்லயேதான் இருக்கோம். வீட்டுக்குள்ளேயே இருக்கிறது ரொம்ப சவாலாதான் இருக்கு. வெளியில இருந்து பழகிட்டோம்ல. மனசளவுல இது ரொம்பப் பெரிய சவால். விளையாட்டுத் துறைல இருக்கிறவங்களுக்கு வெளியிலதான் சவால்கள் இருக்கும். எப்போமே வீட்டை மிஸ் பண்ணுவோம். ஒரு வருஷத்துல மிஞ்சிப்போனா 50-60 நாள்தான் குடும்பத்தோட இருப்போம். இப்ப அப்படியே தலைகீழா இருக்கு. போராடிக்காம இருக்க புதுசா நிறைய விஷயங்கள் பண்றோம். பையனை நிறைய வித்யாசமான விஷயங்கள்ல ஈடுபடுத்துறோம். இப்போதைய சூழ்நிலையில வீட்லயே இருக்கிறதுதான் நல்லது. நம்மளோட அஜாக்கரதையால மத்தவங்க பாதிக்கப்படாம இருக்கணும்ல. அதேசமயம், கண்டிப்பா கிரிக்கெட்டை மிஸ் பண்றேங்கறத மறுக்க முடியாது. அதுதான் நம்மளோட தினசரி வாழ்க்கை. 25-30 வருஷமா முழுக்க முழுக்க கிரவுண்ட், பிராக்டீஸ்னு வெளியவே இருந்து பழகிட்டோம். எங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம்லாம் கிடையாது பாருங்க (சிரிக்கிறார்). விவசாயம் மாதிரி நாங்களும் வெளியதான் பொழப்பு நடத்தியாகணும். வீட்டுக்குள்ள என்ன பண்ண முடியும். வெளியுலகத்தை, கிரிக்கெட்டை ரொம்பவே மிஸ் பண்றேன்."


``150 கோடிப் பேர் இருக்குற நாட்டோட 90 வருஷ கிரிக்கெட் வரலாற்றுல ஒரு 200-300 பேர்தான் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடியிருப்பாங்க. அதுல நாமும் ஒருத்தர்ங்கிறதே ரொம்பப் பெரிய விஷயம்."

உங்க கிரிக்கெட் வாழ்க்கையில மறக்க முடியாத தருணம்னா எதைச் சொல்வீங்க?


``சர்வதேச கிரிக்கெட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்த தருணங்கள்தான் மறக்கவே முடியாதது. எந்த வலியையும் உணராம கிரிக்கெட்டே உலகம்னு வாழ்ந்த காலம் அது. தண்ணி, ஜூஸ், சாப்பாடுனு எதுவுமே இல்லாம கிரிக்கெட் கிரிக்கெட்னு ஓடிட்டு இருந்தேன். கிரிக்கெட் பத்தி அப்ப நிறைய ஆசைகள் இருந்துச்சு. ஆனா, கையில பைசா இல்ல. பஸ்ல போக வர நிறைய செலவாகும். ஒரு ஜூஸ் குடிக்கலாம்னு நினைச்சாக்கூட முடியாது. அதை வாங்க நம்ம கையில காசு இருக்காது. ஒரு லெமன் ஜூஸ் வாங்கக்கூடக் காசு இல்லாம இருந்த நிலமை அது. ரொம்ப வறுமைனுலாம் சொல்லமாட்டேன். ஆனா, கிரிக்கெட்டுக்காக பெருசா எதும் செலவு பண்ண முடியாது. படிப்புதான் முக்கியமா இருந்துச்சு. கிரிக்கெட்லாம் எக்ஸ்ட்ரா கரிகுலர்தான். அதுக்காக காசுலாம் தரமாட்டாங்க. ஆனா, அதையெல்லாம் ரொம்ப போட்டு அலட்டிக்கிட்டது கிடையாது. அந்த மாதிரியான காலகட்டம்தானே நம்ம என்னவா ஆகப்போறோம்னு முடிவு பண்ணும். அதான் அந்தக் காலகட்டத்ததை எப்பவுமே மறக்க முடியாது. இன்னைக்கு ரொம்ப நல்ல நிலைமைல இருக்கோம். சொகுசான வாழ்க்கை இருக்கு. ரொம்பவே சொகுசா இருக்கேன்னுதான் சொல்லணும். அந்த இடத்துல இருந்து இங்க வந்திருக்கேன்னா நிச்சயமா கடவுள் என் மேல ரொம்ப கருணை காட்டிருக்கார்னுதான் சொல்லணும். 150 கோடிப் பேர் இருக்குற நாட்டோட 90 வருஷ கிரிக்கெட் வரலாற்றுல ஒரு 200-300 பேர்தான் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடியிருப்பாங்க. அதுல நாமும் ஒருத்தர்ங்கிறதே ரொம்பப் பெரிய விஷயம். அதுக்குக் காரணம், அன்னிக்கு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு கிரிக்கெட்டே கதினு கிடந்ததுதான். நாளைக்கு என்ன ஆகும்னு கவலைப்படாம, கிரிக்கெட்டுக்காக நிறைய தியாகங்கள் செஞ்ச அந்த நாள்களை என்னால எப்போமே மறக்க முடியாது."


``இந்திய அணிக்குத் தேர்வான அந்த தருணம் எப்படி இருந்துச்சு?''


``அதுதான் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய அங்கீகாரம். அப்போலாம் நம்மளைக் கொண்டாடி அனுப்பிவைப்பாங்க. நம்ம விளையாடிய லோக்கல் டீம்லலாம் பாராட்டு விழா வெச்சு வழியனுப்புவாங்க. இப்போலாம் அப்படி இல்ல. எல்லாம் ஈசியா நடந்திருது. அந்த நியூஸ் நமக்குத் தெரியிறதே பெரிய விஷயமா இருக்கும். இப்போ ஆன்லைன்ல டக்குனு தெரிஞ்சிடுது. அப்போலாம் எங்கெங்கயோ போய் நியூஸ் வரும். வேற லெவல்ல இருக்கும். இன்னொண்ணு, நான் ஏற்கெனவே சொன்ன அந்த Ratio. அத்தனை கோடிப் பேர்ல நாம ஒருத்தர் செலக்ட் ஆகியிருக்கோம் அப்டினு நினைச்சப்ப அவ்ளோ வியப்பா இருந்துச்சு. நாம போஸ்டர்ல, புக்ல போட்டோ வெச்சிட்டு சுத்துனவங்ககூட டிரஸ்ஸிங் ரூம் ஷேர் பண்ண அந்த முதல் நாள் ரொம்ப எமோஷனலா இருந்துச்சு. நம்ம நேஷனல் டீம் ஜெர்சி போட்டுகிட்டு முதல் முறையா கிரவுண்ட்ல களமிறங்கதெல்லாம் வார்த்தைல சொல்ல முடியாத ஒரு விஷயம். இமயத்தத் தொடுற மாதிரி ஃபீல்! அது ஒரேயொரு முறைதான் கிடைக்கும்."


குடும்பம், சமுதாய நிலைனு எத்தனையோ தடங்கள்கள் முன்னாடி நிக்கும். அதெல்லாம் கிரிக்கெட்ல இருந்து அவங்கள விலக்கி விட்டிடும். அதையெல்லாம் தாண்டி காட்டு மரம் மாதிரி, கிடைக்கிற கேப்லலாம் வளர்ந்து வர்றவங்களால மட்டும்தான் டீமுக்குள்ள ஆடமுடியும்.

எல்.பாலாஜி

இங்க எத்தனை மாவட்டங்கள் இருக்கு, எத்தனை கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள்… அதுல எத்தனை லட்சம் பேர் கிரிக்கெட் கனவோட விளையாடிட்டு இருக்காங்க. அதுல ஒருத்தரா வர்றது அவ்ளோ ஈசி இல்ல. இங்க நிறைய பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறதல்ல.

முதல் முறை நேஷனல் கேப் வாங்குறது ரொம்ப எமோஷனலான தருணம். உங்களுக்கு யார் கொடுத்தாங்க? நீங்க யாருக்கெல்லாம் கொடுத்திருக்கீங்க?


கேப் கொடுத்துட்டு பேசுற அந்த வழக்கம்லாம் அப்ப இல்ல. இப்பதான் அது டிரெண்ட்ல இருக்கு. டெஸ்ட் மேட்ச் கேப் வாங்குறதுன்னா கொஞ்சம் எமோஷனலா இருக்கும். நான் முதல்லயே ஒண்டேல ஆடிட்டேன். டெஸ்ட் அதுக்கப்றம்தான். ஆகாஷ் சோப்ராவும் நானும் ஒரே டைம்ல அறிமுகம் ஆனோம். அப்றம் யுவ்ராஜ் உள்ள வந்தார். எங்க டைம்ல அப்படி எமோஷனால பேசுறதுலாம் இல்ல. யாருக்கும் அப்படி ஸ்பீச்லாம் கிடைக்கல. நான் தமிழ்நாடு டீமுக்கு அறிமுகமான பிளேயர்ஸ்க்குக் கொடுத்திருக்கேன். நாம இந்தியாவுக்கு ஆடுறதப் பத்தித்தான் பேசுறோம். தமிழ்நாட்டுக்கு ஆடுறது மட்டும் சாதாரண விஷயம் கிடையாது. அதுவே ரொம்பப் பெரிய சாதனைதான். ஸ்டேட், ஜோன், இந்தியா ஏ அப்டினு ரொம்பப் பெரிய டிராவல் அது. அதோட தொடக்கமே ரொம்ப கஷ்டமான ஒண்ணுதான். இங்க எத்தனை மாவட்டங்கள் இருக்கு, எத்தனை கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள்… அதுல எத்தனை லட்சம் பேர் கிரிக்கெட் கனவோட விளையாடிட்டு இருக்காங்க. அதுல ஒருத்தரா வர்றது அவ்ளோ ஈசி இல்ல. இங்க நிறைய பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறதில்ல. நல்ல திறமையான ஆளுங்க நிறைய பேரு இருக்காங்க. ஆனா, அவங்களோட சூழ்நிலை அவங்களை வேற பாதையில பயணிக்க வெச்சிடும். குடும்பம், சமுதாய நிலைனு எத்தனையோ தடங்கள்கள் முன்னாடி நிக்கும். அதெல்லாம் கிரிக்கெட்ல இருந்து அவங்கள விலக்கி விட்டுடும். அதையெல்லாம் தாண்டி காட்டு மரம் மாதிரி, கிடைக்கிற கேப்லலாம் வளர்ந்து வர்றவங்களால மட்டும்தான் டீமுக்குள்ள ஆடமுடியும். ஒரு மாநில அணிக்காக ஆடுறதுமே அவ்ளோ பெரிய சவால். இங்க எதுவுமே ஈசியில்ல."


நீங்க சொன்ன மாதிரி நம்ம நாட்ல தொழில்முறையா விளையாட்டைத் தேர்வு பண்ற இடத்துல நிறைய பேரு பின்வாங்கிடுறாங்க. குடும்பம், வேலை, வாழ்வாதாரம்னு பல விஷயங்கள் அவங்களைப் பின்வாங்க வெச்சிடுது. நீங்க எப்படி அவ்ளோ தீர்க்கமா இருந்தீங்க?


``நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி இங்க சூழ்நிலைகள்தான் நம்ம பயணத்தைத் தீர்மானிக்குது. ஒருகட்டத்துல நம்மளோட மிடில் கிளாஸ் மனநிலை, நம்மை ரொம்ப யோசிக்கவைக்கும். வாழ்க்கைல செட்டில் ஆகியிருக்கணும். பொருளாதார ரீதியா, சமூக ரீதியா நல்ல நிலமையில இருக்கணும். நம்மோட முடிவுகள், நம்மோட வாழ்க்கை, நம்மளைச் சார்ந்து இருக்கிறவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறதா இருக்கணும். அதனாலதான் பலரும் ஒரு நல்ல வேலை கிடைக்கும்போது கிரிக்கெட்டை விட்டுட்டு அதைக் கையில் எடுத்துடுறாங்க. அதை நாம தப்பு சொல்லவே முடியாது. பிராக்டிகலா அதுதான் உண்மை. ஒவ்வொருத்தரோட லட்சியமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒரு சிலர் ரொம்ப தீர்க்கமா லட்சியத்தைப் பிடிச்சிருப்பாங்க. ஒருசிலருக்கு முன்னாடி இருந்த அந்தப் பசி இல்லாம போயிடும். பொறுப்புகள் அந்தப் பசியைக் குறைச்சிடும். அப்படியிருக்கும்போது ஓர் அரசு வேலையோ, வங்கிலையோ, ரெயில்வேஸ்லயோ ஒரு நல்ல வேலை கிடைக்கும்போது எடுக்கத்தான் செய்வாங்க. எனக்குமே அப்படி வேலை கிடைச்சிது. நல்லவேளை என்னை சுத்தியிருந்தவங்க அதை நோக்கி என்னைத் தள்ளலை. ஒருவேளை அவங்க எனக்கு நெருக்கடி கொடுத்திருந்தா என்னோட வாழ்க்கையுமே மாறியிருக்கும். ஆனா, என் குடும்பத்துல, என் லட்சியத்தை நோக்கிப் பயணிக்க ஆதரவு கொடுத்தாங்க. அப்ப முடிவு பண்ணதுதான். `மிகப்பெரிய அடி வைக்கிறோம். இதுக்கு மேல நம்மலால திரும்பிப்போக முடியாது’ங்கிறதை நல்லா புரிஞ்சிகிட்டேன். சாதிச்சே ஆகணும் அப்டின்றதை மனசுல நல்லா ஏத்திக்கிட்டேன். வெறித்தனமா ஓடினேன்."

பாகிஸ்தானைக் கட்டிப்போட்ட ஸ்மைலிங் அசாஸின்

சேவாக்கின் முச்சதம், டிராவிட்டின் இரட்டைச் சதம், இர்ஃபானின் அசத்தல் பர்ஃபாமன்ஸ் என 2004 பாகிஸ்தான் டூரில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தன. ஆனால், அதையெல்லாம்விட என் மனதில் நிற்பது பாலாஜிதான். அந்தச் சமயத்தில் இம்ரான் கானைவிட அவர்தான் பாகிஸ்தானில் ஃபேமஸாக இருந்தார்

ஆஷிஷ் நெஹ்ரா

பாகிஸ்தானில் இந்தியா ஆடிய வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரைப் பற்றி சமீபத்தில் இப்படிக் கூறியிருந்தார் நெஹ்ரா. ஒருவகையில் அவர் சொல்வது உண்மைதான். ஒருகட்டத்தில், பாகிஸ்தான் ரசிகர் கூட்டமே அவர் பெயர் சொல்லி கரகோஷங்கள் எழுப்பியது. ஒருநாள் போட்டிகளில் தன் அதிரடி பேட்டிங்கால் தனக்கான ரசிகர் மன்றத்தை உருவாக்கிக்கொண்டார் பாலாஜி. ராவல்பிண்டி ஒருநாள் போட்டியில் 330 ரன்களை சேஸ் செய்து, இந்திய அணி தடுமாறியபோது கடைசி கட்டத்தில் வந்து 3 பௌண்டரிகள் அடித்து மிரட்டினார். லாகூரில் அக்தரின் வேகத்தைப் பொருட்படுத்தாமல் அசத்தலாக சிக்ஸர் அடித்தது, அடுத்த பந்தையும் அடிக்க நினைத்தபோது பேட் உடைந்தது… நிச்சயம் பாகிஸ்தான் ரசிகர்கள் அவற்றை மறக்கமாட்டார்கள்.

ஆனால், அந்தக் குட்டிக் குட்டிக் கேமியோக்களை மட்டும் பிரதானப்படுத்தி அவரது அந்தத் தொடரை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. 1-2 என இந்தியா தொடரை இழக்கும் நிலையில் இருந்தபோது, லாகூரில் நடந்த கடைசி 2 போட்டிகளிலும் 5 (2+3) விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பவர்ப்ளே, மிடில் ஓவர், டெத் என அனைத்து காலகட்டத்திலும் விக்கெட்டுகள் வீழ்த்திக் கொடுத்தார். அதைவிட, மிகமுக்கியமான 3-வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸிலேயே 4 பாகிஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்குத் தொடக்கம் அமைத்துக்கொடுத்தார்.


அந்தச் சுற்றுப்பயணத்தில் மொத்தம் 8 போட்டிகளில் (5 ஒருநாள், 3 டெஸ்ட்) ஆடியது இந்திய அணி. அதில் அந்த 8 போட்டிகளிலுமே ஆடியது 5 பே மட்டுமே. சச்சின், சேவாக், டிராவிட், யுவ்ராஜ் மற்றும் பாலாஜி! அப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரின் அத்தனை போட்டிகளிலும் ஆடிய ஒரே இந்திய பௌலர் அவர் மட்டும்தான். உலகக் கோப்பையில் ஆடிய நெஹ்ரா, அனுபவ அகர்கர், இளம் சென்சேஷன் இர்ஃபான் என வேகப்பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருந்தும், ஜஹீருக்கு அடுத்து கங்குலி, டிராவிட் இருவரின் இரண்டாவது சாய்ஸாக இருந்ததும் பாலாஜிதான்!


2004 பாகிஸ்தான் சுற்றுப்பயணம்… பாகிஸ்தான் ரசிகர்களே உங்களைக் கொண்டாடினாங்க. சமீபத்தில ஆஷிஷ் நெஹ்ராகூட நீங்கதான் அந்த டூரோட ஹீரோனு சொல்லிருந்தார். அந்தத் தொடரைப் பற்றி சொல்லுங்களேன்!


அந்த சீரியஸ் ஆரம்பிக்கிற மூணு மூன்றரை மாசம் முன்னாடி ஆஸ்திரேலியா போயிருந்தோம். புரொஃபஷனலா ஒரு நல்ல பர்ஃபார்மன்ஸ் கொடுத்தேன். சந்தோஷமா இருந்துச்சு. அடுத்த 20 நாள்ல பாகிஸ்தான் கிளம்பிட்டோம். பெருசா டைம் கிடைக்கல. 19 வருஷம் கழிச்சு அதுதான் முதல் பாகிஸ்தான் டூர்னு நினைக்கிறேன். ரொம்ப வருஷம் கழிச்சு நடக்குற பைலேடரல் சீரிஸ்ங்கிறதால ரொம்ப ரொம்ப ஆர்வமா இருந்தேன். ஷார்ஜா கப், சஹாரா கப், ஆசியா கப், வேர்ல்ட் கப் மாதிரி தொடர்கள்ல மட்டும்தான் அதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிட்டு இருந்துச்சு. அந்தப் போட்டிகளெல்லாம் என் வாழ்க்கைல ரொம்பப் பெரிய தாக்கம் ஏற்படுத்தினது. கிரிக்கெட் பார்க்கத் தொடங்கிய நாள்கள்ல இந்தப் போட்டிகள், அதுமேல இருந்த எதிர்பார்ப்பு, எனக்குள்ள ஆழமா பதிஞ்சிருக்கு. அப்துல் கலாம் சார் சொன்ன மாதிரி, நம்மளோட கனவுகள் கண்டிப்பா நடக்கும். என் மனசுல ஆழமாப் பதிந்த விஷயத்தோட ஒரு அங்கமா நானும் மாறினேன்னு நினைக்கிறேன். நான் வியந்து பார்த்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில நானும் இருந்தது நினைச்சாலே சிலிர்க்கும்.


அதேசமயம் அந்தத் தொடர்ல நடந்ததெல்லாம் எதுவும் நம்ம கையில இல்லைனு நினைக்கிறேன். சில விஷயங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டு நடக்கும். நமக்கு ஏன் நடக்குதுனு புரியாது. அந்த மாதிரிதான் அந்தத் தொடரும். எனக்கு ஏன் அவ்ளோ அதரவு இருந்துச்சுனு உண்மையாவே எனக்குப் புரியல. அந்த ரசிகர்களோட ஆரவாரம்லாம் அவ்ளோ ஆச்சர்யமா இருந்துச்சு. ஏன்னா, நான் ஒண்ணும் அவ்ளோ பாப்புலரான கிரிக்கெட்டர் கிடையாது. ஒருவேளை என்னோட பௌலிங் ஸ்டைல் காரணமா இருந்திருக்கலாம். எந்த நெருக்கடியுமே இல்லாம அந்த நாள்களை அனுபவிச்சேன். தோனி, கோலி, சச்சின், கபில்தேவ்னு எப்பவுமே ஒருசில வீரர்கள்தான் லைம்லைட்ல இருப்பாங்க. அந்த ஒருசிலரைத் தவிர மத்தவங்களெல்லாம் contributing players. அவங்களோட பங்களிப்பும் இருக்கணும். ஆனா, சச்சின், தோனி மேல இருக்கிற நெருக்கடி இருக்காது. எந்த நெருக்கடியும் இல்லாம ரொம்ப அனுபவிச்ச தொடர் அது. அந்த டைம்ல அவ்ளோ ஆதரவு கிடைச்சது மணிரத்னம் படங்கள் மாதிரி லேட் ரியாக்ஷனா இருக்கும்னு நினைக்கிறேன்!"


சச்சின், கங்குலி, டிராவிட் மாதிரியான ஜாம்பவான்களோட டிரஸ்ஸிங் ரூம் ஷேர் பண்ணிய அந்த அனுபவம்..!


``அதெல்லாம் உண்மையிலேயே மிகப்பெரிய கனவு. சுத்தமா நம்பவே முடியாத விஷயங்கள் அதெல்லாம். நீங்க ரோல் மாடலா நினைச்சவங்ககூட விளையாடுறதெல்லாம் எப்படி நினைச்சுப் பார்க்க முடியும். IAS செலக்ஷன் மாதிரி இந்திய அணிக்குத் தேர்வாகுறதும் ரொம்ப கஷ்டமான விஷயம்தான். தேர்வாகி உள்ள போயிடலாம்னாலும், நம்மளோட இடத்தைத் தக்க வெச்சிக்கிறது அதைவிடக் கடினம். நான் ஒரு 3, 4 வருஷம் அவங்ககூட விளையாடியிருக்கேன்றது எனக்கே ஆச்சர்யமாதான் இருக்கு. ஒரு தலைமுறையவே இன்ஸ்பையர் பண்றதுலாம் சாதாரண விஷயம் இல்ல. அவங்களைப் பத்தி நினைச்சாலே அவ்ளோ பிரமிப்பா இருக்கும். ஆனா, நான் அவங்ககூட விளையாடிருக்கேன்! சின்ன வயசுல இருந்து நம்மகூட எத்தனையோ பேர் கிரிக்கெட் விளையாடியிருக்காங்க. அதுல நமக்கு மட்டும் இதெல்லாம் நடக்குதேனு நினைச்சு நினைச்சு ஆச்சர்யப்பட்டுட்டே இருப்பேன்."

பாலாஜி சின்ன வயசுல இருந்தே என்னோட நண்பர். கிட்டத்தட்ட 15-16 வருடங்கள் ஒண்ணா விளையாடியிருக்கோம். நிறைய பார்த்திருக்கோம். நிறைய ஷேர் பண்ணிருக்கோம். நிறைய அழுதிருக்கோம். என்னைப் பத்தி அவருக்கு எல்லாமே தெரியும். அவர்கிட்ட என்ன வேணா பேசலாம். கிரிக்கெட்ல அந்த மாதிரி எனக்கு இருக்க ஒரே நண்பர் அவர்தான். நிறைய காயங்கள், புறக்கணிப்புகளைப் பார்த்திருக்கார். ஆனா, எப்பவுமே போராடிட்டே இருந்திருக்கார்.

எஸ்.பத்ரிநாத்

அப்போ டீம்ல உங்களோட ரொம்ப நெருக்கமா இருந்தது யார்?


``ஒருத்தர்னு இல்ல. எல்லோருமே ரொம்ப நெருக்கமா பழகுனாங்க. நெஹ்ரா, ஜஹீர், யுவ்ராஜ்னு நாங்கலாம் ஒரே ஏஜ் குரூப் அப்டின்றதால நல்ல ஃப்ரெண்ட்ஷிப் ஏற்பட்டுச்சு. கும்பிளே சீனியர் பிளேயரா இருந்தாலும் ரொம்ப ஜாலியா பழகுவார். எல்லோருமே ரொம்ப ஜலியா இருப்போம். அதேசமயம் ரொம்ப உதவியாவும் இருப்பாங்க. எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லாம இருந்துச்சு. முன்ன சொன்ன மாதிரி, சச்சின் கங்குலி மாதிரி சீனியர்கள் மேலதான் அத்தனை லைம்லைட்டும் இருக்கும். அதனால எங்களுக்கு ஒரு சுதந்திரம் இருந்துச்சு. அதனால எல்லாராலும் சந்தோஷமா இருக்க முடிஞ்சது. நீங்க சொன்னீங்க, பாகிஸ்தான் டூர் பத்தி சொல்லும்போது நெஹ்ரா என்ன சொன்னார்னு. அப்ப பல சீனியர்கள் இருந்தாங்க. எத்தனையோ பேர் பட்டையைக் கிளப்பினாங்க. ஆனா, அவர் என்னைக் குறிப்பிட்டிருக்கார்னா அந்த நட்புதான். எங்களுக்குள்ள நட்பைத்தாண்டி மரியாதையும் இருந்துச்சு. எந்த வித்யாசமும் எங்களுக்குள்ள வெளிப்பட்டதே இல்ல."


அந்த டிரஸ்ஸிங் ரூம் எப்படி இருக்கும். அங்க நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் எதாவது பகிர்ந்துக்க முடியுமா?


``நிறைய இருக்கு. டிரஸ்ஸிங் ரூம் பயங்கர ரவுசா இருக்கும். ஹர்பஜன் பண்றது பயங்கர ரணகளமா இருக்கும். செமையா மிமிக்ரி பண்ணுவார். மேனேஜர், கோச், பிளேயர்ஸ்னு எல்லார் மாதிரியும் பேசுவார். போன் பண்ணி மிரட்டுவார். அப்போலாம், பிராக்டீஸ், மீட்டிங் பத்திலாம் ரூமுக்கு மெசேஜ் வரும். ஒருநாள் போன் பண்ணி, `ஏன் பிராக்டீஸ்கு வரலை’னு கோச் குரல்ல கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டார். எனக்கு பயமாயிடுச்சு. ரூமுக்கு வந்த மெசேஜை கிளீன் பண்றவங்க எடுத்துப் போட்டுட்டாங்களோனு நினைச்சு மிரண்டுட்டேன். அப்றம் பார்த்தாதான் தெரியுது அது ஹர்பஜன்னு. ஒருசில டைம் சச்சின் குரல்ல பேசி மேனேஜரைக் குழப்பி விட்டிருவார். ஒருமுறை மேனேஜர் சந்து போர்டே மாதிரி போன் பண்ணி ஃபிசியோவைக் குழப்பிவிட்டுட்டார். `நாளைக்கு பிராக்டீஸ் செஷனுக்கு வரும்போது சூட் & டை போட்டுட்டு வந்திடுங்க’னு போர்டே மாதிரியே சொல்லிட்டார். அவர் ஃபாரீனர். இது புரியாம அடுத்த நாள் அப்டியே வந்துட்டார். எல்லாரும் டிராக், டீ ஷர்ட்ல இருக்க, அவரு சூட்ல நின்னுட்டு இருந்தார். மேனேஜர் வந்து, `என்ன இது ஏதோ பார்டிக்குப் போற மாதிரி வந்திருக்கீங்க’னு கேட்டப்போதான் அவருக்கு என்ன நடந்திருக்குனே புரிஞ்சது. ஹர்பஜன், நெஹ்ரா, சேவாக்னு எல்லாம் பயங்கர அராத்து. நான் எல்லார் கூடவும் ரொம்ப சகஜமா பழகுவேன். ஒரு மாதிரி கூச்ச சுபாவம் இருக்கும். அவ்ளவா பேசமாட்டேன். ஆனா, எல்லா இடத்துலயும் இருப்பேன்."


ஐ..எல்… உங்க கரியர்ல ரொம்ப முக்கியமான ஓர் அங்கம் வகிச்சிருக்கு. அந்த வருஷம் நடந்த கம்பேக், அதுல ஐ.எல் ஏற்படுத்தன தாக்கம் பத்தி சொல்லுங்க!


``நான் நல்லா என்னோட பீக்ல இருந்தப்போ முதுகெலும்புல பிரச்னை. ஆபரேஷன் பண்ண வேண்டிய அவசியம் ஏற்பட்டுச்சு. ரெண்டரை வருஷம் ஓய்வெடுக்க வேண்டியதா இருந்துச்சு. அந்தக் காலகட்டம் எல்லாத்தையும் மாத்திடும். ரொம்ப அரிதாதான் அதிலிருந்து மீண்டு வர முடியும். உடல் அதுக்கு ஒத்துழைக்கணும். அதிலிருந்து மீண்டு வந்தாலும், ஆரம்பத்துல தொடங்கின இடத்துல இருந்துதான் மறுபடியும் தொடங்கவேண்டியிருக்கும். ஐபிஎல் எனக்கு ஒரு பாலமா இருந்துச்சு. ஹாட்ரிக், 5 விக்கெட் ஹால்னு நிறைய விஷயங்கள் எனக்குச் சாதகமா அமைஞ்சுது."


ஐபிஎல் வரலாற்றின் முதல் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் பாலாஜி!

காயங்கள் தங்களின் லட்சியத்துக்குக் குறுக்கே நின்றாலும், பலர் அதைப் போட்டியிட்டு வென்றுகொண்டேதான் இருக்கிறார்கள். ரொனால்டோ நசாரியோ - இதற்குமே ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 1999-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் அவரால் கால்பந்து உலகில் கொடிநாட்ட முடியவில்லை. 2002-ல் அதிலிருந்து மீண்டு வந்தார். பிரேசில் ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை வெல்லக் காரணமாக இருந்தார். கோல்டன் பூட் விருதும் வென்றார். அதன்பிறகு ரியல் மாட்ரிட்டுக்குச் சென்று, மீண்டும் தன் கோல் வேட்டையைத் தொடர்ந்தார் அந்த ஜாம்பவான். இப்படி காயத்திலிருந்து மீண்டு சாதித்தவர்களின் கதைகள் இங்கு நிறையவே இருக்கிறது. வாழ்க்கையில் கம்பேக் கொடுத்தவர்களை விளையாட்டு உலகம் கொண்டாடிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த விபத்தை ஒருமுறை மட்டும் சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள்.


கம்பேக் கிங்

ஒன்றா ரெண்டா காயங்கள்..!

ஆனால், ஒருசிலரை அந்தக் காயம் விட்டுவைப்பதில்லை. தொடர்ந்து துறத்தும், தொடர்ந்து அச்சுறுத்தும், தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருக்கும். ஓரிரு முறை போராடி மீண்டு வந்தாலும் தொடர் காயங்களால் காணாமல் போனவர்கள் பலர். சச்சின், நடால் என ஒருசிலரால் மட்டுமே அதிலிருந்து மீண்டு வந்து மிரட்ட முடிந்திருக்கிறது. பாலாஜி, ஒவ்வொரு முறையும் மீண்டு வந்து போராடவே செய்தார். ஆனால், கடைசி வரை துரத்திக்கொண்டே இருக்கும் காயங்களை என்ன செய்ய முடியும்!


2002-ம் ஆண்டு அறிமுகமானவருக்கு முதல் போட்டியிலேயே மோசமான வரவேற்பை அளித்தார்கள் கரீபீய பேட்ஸ்மேன்கள். அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துதான் அடுத்த வாய்ப்பு. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை என வெளிநாட்டுப் பயணங்களிலேயே 3 ஆண்டுகள் கழிந்தன. பிரிஸ்பேன், நாட்டிங்ஹம், லாகூர் என சில ஸ்பெல்கள் மிகச் சிறப்பானவை. 2005-ல் காயம். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஓய்வு. சுமார் மூன்றரை ஆண்டுகள் கழித்து அணியில் இடம். மீண்டும் காயம். மீண்டும் ஓய்வு, மீண்டும் கம்பேக். இப்போதும் மூன்றரை ஆண்டுகள் கழித்து! ஆனால், வேறு ஃபார்மட்டில்.


ஐபிஎல் தொடரில் கன்சிஸ்டென்டாக பெர்ஃபார்ம் செய்தது, மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தது. 2012 டி-20 உலகக் கோப்பைக்கு முன் அணிக்குத் திரும்பினார் பாலாஜி. ஒரே போட்டியில் ஆடியவுடன் உலகக் கோப்பையில்! ஆனால், சர்வதேச அரங்கில் எந்தத் தடங்களுமின்றி தன் வித்தையைக் காட்டினார். 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகள். 3 முறை 3 விக்கெட் ஹால்! அந்தத் தொடரில் ஒரேயொரு போட்டியில் இந்தியா தோற்றது… அது அந்தத் தொடரில் பாலாஜி ஆடாத ஒரே போட்டி. பாலாஜி ஆடாததால் இந்தியா தோற்றது என்று சொல்லவில்லை. அணி வென்ற போட்டிகளில் அவரின் தாக்கம் எப்படியானது என்று சொல்லவருகிறேன். ஒரு உலகக் கோப்பையில் 9.77 என்ற சராசரியில், ஒவ்வொரு 8 பந்துக்கும் ஒரு விக்கெட் வீழ்த்தும் பௌலரை சாதாரணமாகப் பார்க்க முடியாது அல்லவா! இப்படியொரு அட்டகாசமான கம்பேக் மீண்டும் காயத்தால் காணாமல் போனது.

இரண்டு முறை பெரிய ஓய்வுகள்… பௌலிங்கில், பௌலிங் ஆக்‌ஷனில் பல மாற்றங்கள்… அதையெல்லாம் விட வயதும் முப்பதைத் தொட்டுவிட்டது. ஒரு வேகப்பந்துவீச்சாளரால் எவ்வளவுதான் போராட முடியும்! பாலாஜியின் கரியருக்குக் காயங்கள் முடிவுரை எழுதின. ஆனால், தன் கிரிக்கெட் வாழ்க்கையின் முன்னுரைக்கும் முடிவுரைக்கும் இடையே பல பக்கங்களை எழுதிவிட்டார் அவர், தன் போராட்டத்தின் வாயிலாக!


ஒருமுறை காயத்திலிருந்து மீண்டு வர்றதே பெரிய விஷயம். ஆனா, நீங்க எப்படி ஒவ்வொரு முறையும் அதைக் கடந்து வந்தீங்க?


``இதெல்லாம் பண்ணா கம்பேக் கொடுக்கலாம் அப்டினு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நிறுத்தாம உழைச்சிட்டே இருக்கணும் அவ்ளோதான். நமக்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைல நம்ம பதிலைச் சொல்றதுக்கான வாய்ப்புகள் நிச்சயமா நமக்குக் கிடைக்கும். அப்போ நாம அந்த இடத்துல இருக்கணும். சில கஷ்டங்களால லட்சியத்தை விட்டுட்டுப் போயிடக் கூடாது. நான் பண்ணியது அதைத்தான். என் உடம்பை நான் புஷ் பண்ணிகிட்டே இருந்தேன். எப்போ ஆடுவோம்னு தெரியாது. ஆனா, அதுக்குத் தயாரா இருக்கணும்னு முழு உழைப்பையும் கொட்டிட்டே இருந்தேன். எதாவது நடக்கும்ன்ற நம்பிக்கைல முயற்சி பண்ணிட்டேதான் இருந்தேன். இந்தியன் டீமுக்கு கம்பேக் கொடுக்கறதுக்கு இணையானது ஸ்டேட் டீமுக்குக் கம்பேக் கொடுக்கறது. அந்த டைம்ல நான் தமிழ்நாடு டீமுக்கே ரொம்ப நாளா ஆடல. அதனால அதிகமாக உழைக்கவேண்டி இருந்துச்சு. நம்ம கரியர்ல முன்னுரை, முடிவுரைனு எதையும் நம்மாள தீர்மானிக்க முடியாது. முயற்சி மட்டும் பண்ணிட்டே இருக்கணும். நான் செஞ்சது அதுதான்.


தோனி, ரஜினி… ரெண்டு பேரையும் பத்தி யோசிங்க. பஸ் கண்டக்டர், டிக்கெட் செக்கர்னு ஒரே மாதிரி வேலைல இருந்தவங்க. ஆனா, இன்னைக்கு ரெண்டு பேருமே சூப்பர் ஸ்டாரா இருக்காங்க. எப்படி! வாய்ப்பு கிடைக்கறதுக்காக உழைக்கணும், அந்த வாய்ப்பு கிடைக்கிற வைக்கும் உழைக்கணும், அது வரும்போது அங்க இருக்கணும். அவ்ளோதான். `ஏன் இவ்ளோ கஷ்டப்படுற’ அப்டினு நிறைய பேரு சொல்வாங்க. அதையெல்லாம் காதுல கேட்டுக்கவே கூடாது. எங்காது அதைப் பத்தி யோசிச்சோம்னா முடிஞ்சிடும். எதையுமே சட்டை பண்ணிக்காம, சொறனையில்லாம முயற்சி பண்ணிகிட்டே இருக்கணும்."


ஒரு காயம் உடலில் ஏற்படுத்துற தாக்கத்தைவிட, மனசளவில ஏற்படுத்தும் தாக்கம்தான சவாலானது?


``உண்மைதான். விளையாட்டுல இருக்க யாருக்குமே, உடலில் ஏற்படுற வலி தவிர்க்க முடியாதது. காயங்களோ, ஆபரேஷன்களோ இங்கே பெரிய விஷயம் இல்லை. எத்தனை ஆபரேஷன் பண்றோம்றதுதான் விஷயம். சச்சினுக்கு ஒரு 10 ஆபரேஷன் நடந்திருக்கும். நெஹ்ராவுக்கு ஒரு 12 நடந்திருக்கும். பிரெட் லீ ஒரு 8 ஆபரேஷன் பாத்திருப்பாரு. ரொம்பக் குறைவான வீரர்கள்தான் அதிக ஆபரேஷன்கள் இல்லாம அவங்க கரியரைக் கடந்து வந்திருப்பாங்க. இப்ப தோனி, கபில்தேவ்லாம் நேச்சுரலாவே ஃபிட்டான பிளேயர்ஸ். அவங்கலாம் ஒண்ணு ரெண்டு சர்ஜரிதான் பண்ணிருப்பாங்க. எல்லோருக்கும் வலியைப் பொறுத்திக்கிற தன்மை வந்திடும். ஆனா, மனசளவுல தயாரா இல்லைனா நம்மள அதை அங்கயே தேங்கவச்சிடும். இந்த வைரஸ் மாதிரி. எல்லாமே நல்லா போய்ட்டு இருக்கும். யாரும் எதிர்பாராத நேரத்துல அது நம்மளை முடிக்கிடும். மொத்தமா லாக்டௌன் ஆன மாதிரி. எந்த மாற்று வழியும் இருக்காது. அதை சமாளிக்கிறதுதான் ரொம்பக் கஷ்டம்!"


Rate this content
Log in

Similar tamil story from Inspirational