anuradha nazeer

Inspirational

4.8  

anuradha nazeer

Inspirational

பிரெய்ன் தம்பதியினர்

பிரெய்ன் தம்பதியினர்

7 mins
23.2K


தனது கருத்தாற்றலாலும், பேச்சாற்றலாலும் தமிழ்ச்சமூகத்தின் அடையாளமாக மாறிய பெருந்தகைக்கு 1968ல் குரலில் கரகரப்புக் கூடுகிறது. செருமி இருமுகையில் இரத்தம் வருகிறது. 


செப்டம்பர் மாதம் நியூயார்க் ஸ்லோன் புற்றுநோய் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு பறக்கின்றார் முன்னாள் முதல்வர் அண்ணா அவர்கள்.


1984இல் அறுபத்தியாறு இருக்கைகளையும் கழற்றி முழு மருத்துவமனையாகவே மாற்றப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவமனைக்கு, செயலிழந்த சிறுநீரகமும், மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவால் பக்கவாதத்துடன் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள்.


பரமக்குடிக்கு பொதுக்கூட்டத்துக்கு வந்து திரும்பும் போது கொடிக்கொம்பு ஆடு ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்து ஓட தனது வாகனம் விபத்துக்கு உள்ளாகிறது. அப்பொழுது கண்ணில் ஏற்பட்ட காயத்தால் பல ஆண்டுகளாக குணமாகாமல் இருந்த பிரச்சனையை அமெரிக்காவின் ஜான்ஹாபின்சன் மருத்துவமனையில் சிகிச்சை செய்து சரிபடுத்திக் கொண்டார் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள்.


2017 செப்டம்பரில் ஒரு நாள் மாலை சர்க்கரை அளவுக்கதிகமாகி இரத்தம் செப்சிஸ் நிலை ஏற்பட்டு மயங்கி விழுந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா. அவருக்கு சிகிச்சை செய்ய லண்டனில் இருந்து பறந்துவந்தவர் ரிச்சர்ட் பியூலே. 


இப்படி முதல்வர்களுக்கும், திரைப்பட நட்சத்திரங்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் உயர்ந்த சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் அது வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளால் தான் செய்ய முடியும் என்றுதான் நாம் அறிந்துவைத்துள்ளோம். 


ஆனால் இந்த வரலாற்றை மாற்றி இருக்கின்றது கொரோனா.


 அரசின் பொது மருத்துவமனை ஒன்று 


உலகின் மிக உயர்ந்த மருத்துவ சேவை கொடுக்கும் இங்கிலாந்து நாட்டின் NHS நிறுவனம் உள்ள பகுதியில் இருந்து வந்த இருவர், கொரோனா தொற்றுக்காக எதேச்சையாக அரசு மருத்துவமனையில் அனுமதிகப்படுகின்றார்கள். 


உலகமே வியந்து பார்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தும் கொரோனாவை வென்று ஊருக்கும் திரும்ப தயாராகியுள்ளனர். 


அவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரெய்ன் லாக்வுட் தம்பதியினர். 


அந்த அரசு மருத்துவமனை கேரளத்தின் எர்ணாகுளம் மருத்துவமனை. அப்படி மிகச்சிறப்பான சிகிச்சை தந்தது கேரள அரசின் மருத்துவர்கள்.


சுற்றுலாவை முடித்து ஊர் திரும்ப கொச்சின் விமான நிலையத்துக்கு வந்த போதுதான் தனக்கு ஏற்பட்ட கொரோனா பற்றி அறிகின்றார் பிரெய்ன். 


லண்டனுக்கும் செல்ல முடியாமல் “இந்தியாவில் எப்படி சிகிச்சை இருக்குமோ?” என பதறி, அனுமதிக்கப்பட்ட அவருக்கு கேரள அரசும் மருத்துவர்களும் கொடுத்த சிகிச்சையில் விக்கித்து நிற்கின்றனர் பிரெய்ன் தம்பதியினர். 


இங்கிலாந்தில் தங்கள் பிரதமரே ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 8000 க்கு மேலே மரணத்தை பெற்ற இங்கிலாந்தில், உலகின் தலைசிறந்த NHS கையைப் பிசைந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இங்கே கேரள மண்ணின் சின்னஞ்சிறு அரசு மருத்துவமனையில், மிகச் சிறப்பான சிகிச்சையில் நோயை வென்றிருக்கின்றனர் இந்த தம்பதியினர்.


‘கடவுளின் நாடு

———————

பிரெய்ன் லாக்வுட் கேரள பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “மார்ச் 15இல் தொற்று உறுதியாகிறது. எச்ஐவிக்கு உரிய ஆண்ட்டிவைரல் மருந்தை கொடுத்தார்கள். 


சில தினங்களில் வெண்டிலேட்டரில் இணைக்கப்பட்டு செயற்கை சுவாசம் தரப்பட்டது. நாங்கள் பதறி நாடு திரும்புவது இயலாதோ என கலக்கத்துடன் இருந்தோம். 


என்னைப் பிழைக்க வைத்து இப்போது பேச வைத்திருப்பது, கேரள அரசின் படு வேகமான உலகத்தரமான சிகிச்சையும், கூடவே சற்றும் சளைக்காத மருத்துவப்பணியும், எல்லாவற்றிற்கும் மேலாக கேரளாவிற்கே உரிய நகைச்சுவையுடன் கூடிய செவிலியர்களின் அன்பும், அவ்வளவு சிக்கலில் கூட என் மனம் தளராது சிகிச்சையில் முன்னேற வைத்தது. 


எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எங்கள் நாட்டு உயர் மருத்துவமனைக்கு எந்த அளவிலும் குறைஇல்லாதது. உண்மையிலேயே கடவுளின் நாடு தான் கேரளா” எனச் சொல்கிறார். 


மலையும் தட்பவெப்பமும் தாண்டி அறிவும் ஆளுமையும் கேரளத்தை கடவுளாக பார்க்க வைத்திருக்கின்றது பிரெய்ன் தம்பதியருக்கு. 


மருத்துவம் அறிவு சார்ந்தது மட்டுமல்ல; மருந்து சார்ந்தது மட்டுமல்ல; முழுமையாய் நிர்வாகமும் அரசின் பொறுப்புணர்வும் சார்ந்தது. 


நிபா வைரஸ் தாக்கத்தில், ஒரு செவிலியரின் உயிரைக் கொடுத்து, வைரஸ் தொற்றை வென்றதிலேயே உலகை உற்றுக் கவனிக்க வைத்தவர்கள் கேரளத்தார். இப்போது கொரோனாவிலும் அப்படித்தான். 


இங்கே மரு. ஜேக்கப்புடன் இங்கிலாந்து நோயரை சிகிச்சை செய்ய அந்த மருத்துவருக்கு, வலப்பக்கமும் இடப்பக்கமும் பினராயி விஜயனும் ஷைலஜா டீச்சரும் ஏதோ ஒரு வடிவில் நிற்கின்றனர். 


அதுதான் கேரளம் மிகச்சிறப்பாக இந்நோயைக் கையாள்வதில் முன்னணியில் நிற்பதற்குக் காரணம்.


‘முதலில் நிற்பவன்’


மார்ச்11 இல் கொரோனா உலக பேரிடர் தொற்று; ‘pandemic’ அதான் உலகக் கொள்கை நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கின்றது. ஆனால் மார்ச் 7 ஆம்தேதியே கேரளம் விழித்துக்கொண்டு மருத்துவ வழிகாட்டுதலுடன் தயாராகி விட்டது. 


வான்வழி, கடல்வழி, தரைவழி எல்லைகளில் சோதனைகள் துவங்கப்பட்டன. ஏராளமான தம் மக்கள் வெளிநாட்டில் பணிபுரிவதை அறிந்து “முதலில் வெளி நாட்டில் இருந்து இந்த நோய் வரக்கூடாது; சமூகத்தில் பரவிடக் கூடாது” என்பதில் பினராயி விஜயன் எடுத்த முயற்சிகள் உலகையே உற்றுப்பார்க்க வைத்தது. 


மிக குறைந்த நாட்களிலேயே தனித் தனி கோவிட் மருத்துவமனைகளை, வார்டுகளை உருவாக்கியதில், இந்தியாவையே வியக்க வைத்தவர் கேரள மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர். 


முதலில் நிற்பவனும் முதன்மையாய் முன்னெடுப்பவனும்தான் முதல்வன். பினராயி விஜயன் அந்த சொல்லுக்கு பொருள் சேர்த்திருக்கின்றார். 


அரபு நாடுகளில் கேம்ப் குடியிருப்புகளில் அடிப்படை வேலையில் இருக்கும் தம் குடியினருக்கு அங்குள்ள “பிரவாசி” அமைப்பு மூலம் அரபின் கூட்டமைப்பில், ஒவ்வொரு ஊரிலும், ஒரு தொடர்பை ஏற்படுத்தி, இங்கிருந்து டெலி மெடிசின் (tele medicine) ஆலோசனை தருகின்றது கேரள அரசு. 


கேரளத்து மலைமுகட்டின் மூலைகளில் இருக்கும் தம் சகாக்களுக்கும் தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை வசதியைச் செய்து கொடுத்து, இந்தியாவில் முதன் முதலாக கோவிட் கால ஆன்லைன் மருத்துவ ஆலோசனையை துவக்கி செவ்வனே நடத்தி வருகின்றது கேரளம். 


பசித்தவர் எல்லோருக்கும் உணவளிக்க அரசு அதிகாரிகள் ஓடிக்கொண்டிருக்க, அட! நாம் உண்டால் போதுமா, சாலையில் திரியும் நாய்க்கும், வானில் வட்டமிட வலுவின்றி வாடும் பறவையின் பசிக்கும் சோறூட்டுகிறது பினராயி அரசு! 


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை சேர நாடு நடத்திக் காட்டுகிறது.


ஆயுர்வேத சித்த மரபுகளைப் பற்றி நின்று...


நவீனத்தின் உச்சங்களை மலையாளக் கரையோரத்தில் கொணர்ந்ததன் கூடவே, தன் நாட்டின் ஆயுர்வேத சித்த மரபு மருந்துகளை எப்படிக் கையாள வேண்டும்? எந்த எந்த நிலையில் எந்த எந்த ஆயுர்வேத மருந்துகள் சித்த மருந்துகள் கோவிட் க்கு பயனாகும் என நாட்டிலிலேயே முதலாவதாக வழிகாட்டு ஆணையை வெளியிட்டது கேரளம். 


ஏராளமான சித்த மருந்துகளை, தமிழ் மரபுகளைக் கொண்டுள்ள சித்த மருத்துவத்தை, “கோவிட்டுக்கு எப்படி பயன்படுத்தலாம்?” என இன்னும் தமிழக அரசின் நலவாழ்வுத்துறை அரசு ஆணையாக அறிவித்தபாடில்லை. ஆனால் கேரள அரசு எப்போதோ அறிவித்துவிட்டது. (அகத்தியன் மருந்தரைத்த கல்லெடுத்து அடிவயிற்றில் இடித்துக்கொள்ள வேண்டியதுதான் நாம்.)


நாளும் ஊடக சந்திப்பு


தினசரி மாலை ஆறு மணிக்கு ஊடகங்களை சந்திக்கிறார் கேரள முதல்வர். தினமும் கொரோனா தொற்றுக்காக ஊடகங்களை சந்திக்கும் முதல்வராக அவர் மட்டுமே இருக்கிறார். 


அவரின் ஊடக சந்திப்பு நிகழ்வுகள் முழுவதும் இணையத்தில் காணக்கிடைக்கிறது. அவற்றை வரிசையாகப்பார்த்தால் கொரோனா தடுப்பை கேரள அரசு எதிர்கொண்ட விதத்தையும் அதன் பரிமாண வளர்ச்சியையும் பார்க்க முடியும்.


கொரோனா தொற்றின் முதல் நோயாளியை சந்தித்த மாநிலம் அது. இந்தியாவில் அதற்கான எந்த முன்மாதிரியும் இல்லாத போது தானே முன்மாதிரியை உருவாக்குகிறது. 


நோய் தொற்றினை அனைத்து முயற்சியும் செய்து கட்டுப்படுத்துகிறது. ஆனாலும் ஆபத்து முடிந்து போய்விடவில்லை. 


இதற்கிடையில் இந்தியாவின் வேறுசில மாநிலங்களில் நோய்தொற்று பரவ ஆரம்பிக்கிறது, அப்பொழுதும் மத்திய அரசு இதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அமெரிக்க அதிபர் வருகைக்கான ஏற்பாட்டில் அவர்கள் முழுமையாய் மூழ்கிக்கிடந்தார்கள். 


அதுமட்டுமல்ல, தென்னிந்திய வரைபடத்தையே அவர்கள் அதிகம் ரசிப்பதில்லை. அதிலும் கேரளத்தை முற்றிலும் விரும்புவதில்லை. இந்த நோய் தொற்று கேரளம் மற்றும் தென்னிந்தியாவை மையப்படுத்தியது என்ற மனநிலையே அவர்களில் பலருக்கும் இருந்ததைப் பார்க்கமுடிந்தது.


கேரளத்தின் குரலை அன்று யாருமே கேட்கவில்லை


நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மத்திய அரசின் மதவெறிக் கொள்கைக்கு எதிரான போராட்டக்களமாக நாடாளுமன்ற வளாகம் இருந்தது. இந்நிலையில் மார்ச் முதல் வாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா பற்றி முதன் முறையாக அறிக்கையை மக்களவையில் சமர்ப்பித்தார். மிக ஆரம்பகட்ட அறிக்கை அது. 


அதன் மீது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நடத்திய விவாதம்தான் கோவிட்டை கோமியம் கட்டுப்படுத்தும் என்ற செய்தியை நாடெங்கும் கொண்டு போய்சேர்த்தது. 


அந்த விவாதத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் ஏ.எம்.ஆரிஃப் பேசினார். கேரளத்தின் செழிப்பான அனுபவத்தைச் சொல்லி, அதனை முன்மாதிரியாக எடுத்து செயல்படுங்கள் என்றார். 


தொடர்ந்து பேசிய ஆர் எஸ் பி கட்சியைச் சேர்ந்த பிரேமச்சந்திரன், தோழர் ஆரிஃபின் பேச்சினை அப்படியே வழிமொழிந்து பேசினார். கேரள மாதிரியை பின்பற்றுங்கள் என்றார். ஆனால் அதையெல்லாம் கேட்கிற நிலையில் அங்கு யாருமில்லை. 


தனக்கு கிடைத்த பொன்னான நேரத்தையெல்லாம் மத்திய அரசு வீணாக்கியபடியே இருந்தது. நாடாளுமன்றத்தில் கொரோனா பற்றி மூன்று முறை விவாதிக்கப்பட்ட போதும் எதிர்க்கட்சிகள் சொன்ன எதனையும் காதுகொடுத்து கேட்கவில்லை. 


ஐரோப்பிய முறைப்படி கைகுலுக்காதீர்கள், இந்து முறைப்படி வணக்கம் சொல்லுங்கள் என்று ரகு ராமகிருஷ்ண ராஜு நாடாளுமன்றத்தில் சொன்னது தான் ஆளுங்கட்சிக்கு அமிர்தமாய் இருந்தது. 


ராஜஸ்தானத்தைச் சேர்ந்த ஹனுமனா, இத்தாலியில் வைரஸ் வேகமாக பரவுவதை காங்கிரஸ் கட்சியோடு சேர்த்து பேசிய போது ஆளுங்கட்சியினர் மகிழ்ச்சியின் எல்லைக்கே போயினர். 


அப்பொழுது இந்தியாவின் எல்லா எல்லைகளையும் கடந்து கொரோனா வைரஸ் உள்ளே வந்திருந்தது.


வெளிநாட்டுப்பயணிகளை என்ன செய்வது? வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்களை என்ன செய்வது? சர்வதேச விமான போக்குவரத்தை எப்பொழுது வரை அனுமதிப்பது? சர்வதேச விமானநிலையங்களில் வந்து இறங்கும் பயணிகளை யார் சோதிப்பது? யார் தனிமைப்படுத்தி வைப்பது? அதற்கான பொறுப்பு மற்றும் கடமை யாரைச்சேர்ந்தது? மத்திய அரசும் மாநில அரசும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன? என்று இந்த நாட்டுக்கு தெளிவுபடுத்த எதையும் மத்திய அரசு செய்யவில்லை. 


இந்த கேள்விகளுக்கு பதில் கண்டறிவதுமட்டுமல்ல, இப்படியான கேள்விகளே முன்னிலை பெறாமல் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.

ஆண்டுக்கு பத்து லட்சம் சுற்றுலா பயணிகளை கையாள்கிற கேரளம், வெளிநாடுகளில் பணிபுரிகிற சுமார் 68 லட்சம் மலையாளிகளை கொண்டுள்ள மாநிலமான கேரளம் மத்திய அரசின் இத்தனை குளறுபடிக்கும் நடுவில் நிலமையை மிகச்சீறாக கையாண்டு கொண்டிருந்தது. 


சர்வதேச விமானநிலையத்தின் வாசற்கதவைத் தாண்டி தனது மாநிலத்தில் கால் பதிக்கும் ஒவ்வொரு பயணியையும் முறையாக பரிசோதித்து தேவையின் பொருட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.


ஆட்டம் கண்ட மத்திய ஆட்சியாளர்கள்

ஒருவாரங்கழித்து கனிகா கபூரின் நடன நிகழ்சியின் வழியே தான் கொரோனாவின் வலிமையை மத்திய ஆட்சியாளர்களால் உணரமுடிந்தது. 


முதல் நாள்வரை நாடாளுமன்ற கூட்டத்தொடரை தள்ளிவைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று முழங்கியவர்கள் ,ஒரே நாளில் அவையை முடித்துக்கொண்டார்கள். 


ஆட்டம் கண்டவர்களால் ஆட்டங்கண்டது கூட்டத்தொடர். ஒரே வாரத்தில் ஆள்வோருக்கு மொத்த ஞானமும் வந்து சேர்ந்தது. லட்சுமணக்கோடுகளை கீற ஆரம்பித்தார்கள். 


ஊரடங்கை நான்குமணி நேர அவகாசத்தில் அறிவித்தார்கள். தேசிய நெடுஞ்சாலைகளில் பல கிலோமீட்டர் தொலைவு நடந்தே கடந்த லட்சக்கணக்கான மக்களின் கால்கள் முழுக்க பிரதமர் இட்ட கீறல்கள் விரிசல் கண்டு பெருகின.


தேசத்தின் தலைநகர் அரைநூற்றாண்டுக்குப் பின் மாபெரும் இடப்பெயர்ச்சியை இரவு பகலாக சந்தித்துக்கொண்டிருந்தது. நிலமையை எப்படிகையாள்வது, மாநில அரசுகளுக்கு இதில் என்ன பொறுப்பு? மாநில அரசோடு எவ்வித கலந்துரையாடலும் நடத்தாமல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நேர்ந்த துன்பங்களைப்பற்றி உலக ஊடகங்கள் அலறத்துவங்கியவுடன். பிரதமர் கரம் குவித்து மன்னிப்புகேட்டார். 


அப்பொழுது நீங்கள் எங்களுக்கு ‘விருந்தினராய்’ வந்த தொழிலாளிகள் என கேரளத்தின் கரங்கள் அவர்களுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தது.


சற்றும் அலட்டிக் கொள்ளாமல்...


ஊரடங்கை எப்படி சந்திப்பது, என்ன செய்வது என மத்திய -மாநில அரசுகள் திக்குமுக்காடிக் கொண்டிந்த போது கேரளம் எந்த வகையிலும் அலட்டிக் கொள்ளவில்லை. 


ஏனென்றால் அதற்கு பல வாரங்களுக்கு முன்பிருந்தே இந்நிலை வரும் என கணித்து அதற்கான தயாரிப்புகளில் இறங்கியிருந்தது. தொற்று பரவுவதை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலம் கேரளம். 


அதற்கு இரண்டு முக்கிய காரணம். ஒன்று, இந்நோய் பற்றி கேரள சமூகத்துக்கு இருந்த புரிதல். அரசின் குரலுக்கு மக்களின் மனதில் இருக்கும் இடம். இது நோய் பற்றிய அரசின் நடவடிக்கைதானே தவிர, நோயினை வைத்து செய்யப்படும் அரசியல் அல்ல என்பதை அவர்கள் முழுமையும் உணர்ந்திருந்தனர். 


நூற்றாண்டு காணாத பெரு வெள்ளத்தை சந்தித்த போதும், ஜிகா, சார்ஸ் வைரஸ்கள் தாக்கிய போதும் தோள்கொடுத்து நின்ற தோழமையின் குரல் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். எனவே அனாவசியமாய் வீட்டை விட்டு வெளியில் வரும் முயற்சி அங்கு இல்லை.


இரண்டாவது காரணம், வேலைக்கு சென்றால் மட்டுமே வாழ்வு நடத்த முடியும் என்று இருக்கும் மக்களுக்கான அரசின் திட்டங்களும், நடவடிக்கைகளும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னுதாரணங்களை செய்து காட்டியது கேரள அரசு. 


அனைத்து பஞ்சாயத்திலும் சமுதாய உணவுக்கூடத்தை திறந்தது. 1000 சமுதாயக்கூடத்தை திறப்பது என திட்டமிட்டு ஏப்ரல் 3ஆம் தேதியோடு 1188 சமுதாயக்கூடங்களை திறந்து சிறப்பாக இயக்கிக் கொண்டிருக்கிறது. 


இது போக குடும்பஸ்ரீ உணவகங்கள் மூலம் இலவச சாப்பாடும், 20 ரூபாய்க்கான சாப்பாடும் தரப்படுகிறது. 


இவை தவிர சுமார் இருபதாயிரம் கோடிக்கு நிவாரணத்திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளார் பினராயி.


அடக்கவும் இல்லை, ஏமாற்றவும் இல்லை


கிராமங்கள் நகரங்கள் என வெறிச்சோடிக்கிடக்கும் ஊரடங்கிற்கும், துளிநேரம் கூட ஓய்வின்றி வீடுகளுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் வாழ்வுக்கும் இடையில் வலிமைமிகுந்த பிணைப்பு இருக்கிறது. அதனைபுரிந்து கொண்டு அதற்கான வழிமுறைகளை உருவாக்கினால் மட்டுமே ஊரடங்கைமுழுமையாக செயல்படுத்த முடியும். 


அதைவிடுத்து கால்மடக்கி முட்டி போடவைப்பதாலும், கைகுவித்து மன்னிப்பு கேட்பதாலும் மனிதர்களை அடக்கவும் முடியாது, ஏமாற்றவும் முடியாது.

கேரள அரசு அடக்கவும் இல்லை, ஏமாற்றவுமில்லை. 


ஏனெனில் அது கேரள மக்களுக்கான அரசு.


பக்கத்து வீட்டைப்பார்த்தே போட்டியில் வளரும்கூட்டம் நாம். பக்கத்து மாநிலத்தைப் பற்றி இவ்வளவு பேசிவிட்டு நம் மாநில நிலமையை பேசாமல் விடுவது நல்லதல்ல. 


பொதுவாக சுகாதாரத்துறையில் இந்தியாவுக்கே முன்னோடியான பலவிசயங்களை செய்து காட்டியது தமிழகம். ஆனால் இன்றைய நிலை தலைகீழாக இருக்கிறது. 


கோவிட்-19 நோயாளிகளுக்கு 68 நாட்களுக்குப் பின் தான் மத்திய அரசு வழிகாட்டுகுறிப்பை வழங்குகிறது என்றால் அதன் பிறகே தான் வழிகாட்டுநெறிமுறைகளை வெளியிடுவது என்ற விசுவாசத்தோடு செயல் பட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. 


இங்கே நடந்து கொண்டிருக்கிற நல்ல விஷயங்கள், நமது மருத்துவத் துறையின் அமைப்புசார் கட்டமைப்பால் நடந்து கொண்டிருக்கிறது. 


மற்றபடி அரசின் தனித்த முயற்சி பரிதாபமாக இருக்கிறது.

“யார் தினசரி மருத்துவ அறிக்கையைச் சொல்வது? யார் ட்விட் செய்வது? அமைச்சரா? துறைச்செயலரா? தலைமைச்செயலாளரா? முதல்வரா?” என்பதில் இருந்தது இங்கே விவாதங்கள். 


“சோதனை கிட் வருகிறது; வந்து கொண்டிருக்கின்றது; இன்று வரும்; நாளை துவங்கலாம்” என நான்கு நாட்களாக அறிக்கைகள். “மாஸ்க் இருக்கிறது” என அரசின் அறிக்கை; “மாஸ்க் கிடைக்கவில்லை. நாங்களே சொந்தமாக வாங்குகிறோம்” என மருத்துவர்கள் குமுறல். 


செவிலியர்களை தங்கவைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று அரசு சொல்கிறது. ஆனால் செவிலியர்களோ எந்த ஏற்பாடும் செய்யவில்லை, எங்கள் சொந்த செலவில் தங்கியிருக்கிறோம் என்று மனு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 


நாங்கள் அரசு ஏற்பாடு செய்த இடத்தில் தான் தங்கியுள்ளோம். ஆனால் அதற்கு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி.


1188 சமுதாயக்கூடங்களை துவக்கி அனைவருக்கும் உணவூட்டுகிறது கேரளம். 


தமிழகத்தில் கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உணவுக்கான நிதி ஒதுக்கி முறையான ஏற்பாடு செய்யாமல் அங்கங்கு உணவகங்களில் சொல்லி இலவசமாகவும் ஸ்பான்சராகவும் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவமனை முதல்வர்கள்.


நல்லவேளை, திருவனந்தபுரத்துக்கு பதில் திருச்சிராப்பள்ளியில் வந்து சிக்கவில்லை பிரெய்ன் தம்பதியினர்!


Rate this content
Log in

Similar tamil story from Inspirational