STORYMIRROR

anuradha nazeer

Inspirational

3  

anuradha nazeer

Inspirational

நண்பனுக்கு சர்ப்ரைஸ்

நண்பனுக்கு சர்ப்ரைஸ்

2 mins
12.1K

45 நாள்கள்.. 4.50 லட்ச ரூபாய்!' - வறுமையில் வாடிய நண்பனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வாட்ஸ்அப் குழு

உடல் நலக்குறைவான மகன் மற்றும் மகளுடன் வீடின்றி தவித்து வந்த நண்பனுக்கு சக நண்பர்கள் குழுவாக இணைந்து 45 நாளில் புது வீடு ஒன்றை கட்டிக்கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள சேலக்குன்னா பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சிவகுமார். தன் மனைவி ஷைஜா, மனவளர்ச்சி குன்றிய 18 வயது மகன் மற்றும் உடல்நலம் பாதித்த மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

நோய்வாய்ப்பட்டுள்ள மகன் மற்றும் மகளை தன் மனைவி பார்த்துக்கொள்வதால் சிவக்குமாரின் தினக்கூலியை மட்டும் நம்பியே குடும்பம் ஓடியது. இந்த நிலையில், சமீபத்தில் இவர்கள் குடியிருந்த வீடும் உடைந்து சேதமடைந்தது. பெரும் சிரமத்திற்கு மத்தியில் அந்த வீட்டில் வசித்து வந்தனர்.

நோய்வாய்ப்பட்ட இரண்டு குழந்தைகள், வேலைக்குச் செல்லமுடியாத மனைவி, சேதமடைந்த வீடு என நெருக்கடியில் தவிக்கும் சிவக்குமாரைப் பார்த்து சக நண்பர்கள் வேதனையில் துடித்தனர்.

தங்களால் இயன்ற உதவியாக நண்பனுக்கு வீடு கட்டித்தர முடிவு செய்தனர். வாட்ஸ்அப் குழு ஒன்றினை உருவாக்கி அதில் சக நண்பர்களை இணைத்து நண்பன் சிவக்குமாரின் நிலையை எடுத்துக்கூறி நிதி உதவி பெற்று 45 நாளில் அழகான ஒரு வீட்டைக்கட்டி நண்பன் கையில் சாவியை ஒப்படைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.


இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து சிவகுமாரின் நண்பரான சதீஷ் நம்மிடம் பேசுகையில், ``எங்கள் நண்பர்கள் தமிழகம் மட்டும் அல்லாது கேரளா மற்றும் கர்நாடகாவிலும் பணியில் உள்ளனர். 69 நண்பர்கள் இணைந்த வாட்ஸ்அப் குழு மூலம் இணைந்து நிதியைத் திரட்டினோம். வெளியில் சில நண்பர்களும் உதவினர். 4.50 லட்ச ரூபாய் பணம் கிடைத்தது.


லாக்டெளன் காலத்தில் வீடுகட்டும் வேலையைத் தொடங்கினோம். பணம் வழங்க முடியாத நண்பர்கள் தங்கள் உடல் உழைப்பை நல்கினர். வீடு கட்டிக்கொடுக்கிறோம் என்ற பெயரில் ஏனோதானோ என்று இல்லாமல் மிக நேர்த்தியாகப் பணிகள் நடைபெற்றன.

3 அறைகள், ஒரு சமையலறை, கழிவறை என அனைத்து வசதிகளுடனும் 45 நாளில் அழகான இந்த வீட்டைக் கட்டிமுடித்தோம். மனவளர்ச்சி குன்றிய சிறுவன் கீழே விழாமல் இருக்க வீட்டிற்கு முன்பு இரும்பு தடுப்பு முதற்கொண்டு மழைநீர் சேகரிப்பு என அனைத்தையும் கச்சிதமாக அமைத்துக் கொடுத்தோம். மொத்தம் 4.50 லட்சம் ரூபாய் செலவானது. பூஜையை முடித்து நண்பனின் கையில் சாவியை ஒப்படைத்தோம். அந்தத் தருணத்தை மறக்க முடியாது.

அன்று இரவுதான் நண்பர்கள் நாங்கள் அனைவரும் நிம்மதியாக உறங்கினோம். இந்தக் கொரோனா பேரிடர் சமயத்திலும் நண்பனின் துயர்துடைக்க கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றியைத் தவிர்த்து வேறென்ன சொல்ல?" என்றார் இயல்பாக.

நண்பர்களின் உதவியைக் கவனித்த சேலக்குன்னா பகுதி மக்கள், ``சிவக்குமாருக்கு எந்த உதவியும் கிடையாது. பெற்றோரும் இல்லை. மிகவும் நெருக்கடியில் வாழ்ந்துவந்தார். அவர் குடும்பத்திற்கு நண்பர்கள் மூலம் இந்த உதவி கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது" என்றனர்.

இதுகுறித்து சிவகுமார், ஷைஜா தம்பதி, ``எங்கள் நண்பர்களை அவ்வளவு உயர்வாகப் பார்க்கிறேன். இவர்கள் எங்களுக்கு செய்துள்ள இந்த உதவிக்கு காலத்திற்கும் நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளோம்" என்றனர் நெகிழ்ச்சியான குரலில்.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational