மன்வந்த்ரம் part4
மன்வந்த்ரம் part4


பக்திக்கு மெச்சிய அன்னை ஸிம்ஹ வாஹினியாக காட்சி தந்தாள். அன்னையை பல ஸ்தோத்ரங்கள் சொல்லி நமஸ்கரித்தான். (தேவீ! திவ்யமாயும், வேத ப்ரசித்தமாகவும், லோகச்க்ஷேமகரமாயும் இருக்கும் உன் ஸ்வரூபம் என்னால் பார்க்கப்பட்டது. தேவர்கள் வணங்கக் கூடியதும் மோட்க்ஷத்தைத் தரக்கூடியதுமான உன் பாத கமலத்தை நமஸ்கரிக்கிறேன். பூமியில் உன் ஸ்வரூபத்தை யார் அறிவார்?
நான் என்ன பாக்யம் செய்தேன். தீனனாகிய என்னிடத்தில் உன் தயையைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. சம்பு, நாராயணன், ப்ரம்மன், இந்திரன், சூரியன், சந்த்ரன் போன்றவர்களே உன் மகிமை அறியமாட்டார்கள். அப்படியிருக்க குண ஹீனனான மானிடன் எப்படி அறிவான்? உன்னை சங்கரர் மட்டுமே அறிவார். நீ ஸத்வ குண ஸம்பன்னையாக பாற்கடலில் உதித்த லக்ஷ்மியாக, ரஜோகுண சரஸ்வதியாக, தமோகுண துர்கையாகவும் இருக்கின்றாய். இதனால் த்ரிகுணையாக எவரும் உன்னை அறிவார்கள். எவராலும் அறியக் கூடாத நிர்குணையும் நீயே! சகுணை என்பார்க்கு நிர்குணையாகவும், நிர்குணை என்பார்க்கு சகுணையாகவும் இருக்கிறாய். அதனால் உன்னை யாரும் அறியமுடியவில்லை.
பக்தி உள்ளோருக்கு அனுக்ரஹம் செய்பவளல்லவா நீ! உன்னால் படைக்கப்பட்ட ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவரும் ஆனந்தம் அடையவில்லை. அதனால் உன் பாதகமலத்தை அடிக்கடி நமஸ்கரிக்கிறார்கள். அம்மா! சகல தேவர்களுக்கும் தேவனான விஷ்ணு உன் பாத்தில் விழுகிறார். நீயே லக்ஷ்மி என்றால் அப்படி உன் பாதத்தில் விழுவாரா? அதனால் நீ அவரை ஆளுகின்ற சக்தி அல்லவா? திவ்ய அலங்காரமும், சாந்தமும் உடையவளே! அதனால் தான் அவர் மார்பகத்தை கட்டிலாக்கி மின்னல் போல் வாசம் செய்கிறாயா? நீ அவரை விட்டு விலகினால் சக்தியாகிய உன் அனுக்ரஹம் இல்லாதவராக மாட்டாரா? ப்ரம்மா, தேவகணங்கள் அனைத்தும் உன்னால் உண்டாக்கப் பட்டவையே. நீ சாமர்த்யசாலி.
உன் சக்தியை நான் என்னவென்று சொல்வது? புருஷர்கள் எல்லாம் உன்னால் ஸ்ருஷ்டிக்கப் பட்டவர்களே. அதனால் உன்னை வணங்குகிறார்கள். நீ புருஷரூபம் இல்லாதவளாயுமில்லை, புருஷனாயும் இல்லை. தேவீ! நீ ஆணோ பெண்ணோ, ஸகுணையோ, நிர்குணையோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நீ எவ்விதமானவள் என அறியும் புத்தியும் எனக்கு இல்லை. எந்த விதமாயும் இல்லாத உன்னை நான் பக்தி பாவத்தோடு த்யானிக்கிறேன். உன்னிடம் ஸ்திரமான பக்தியை வேண்டுகிறேன். என்னுடைய மரணகாலத்தில் எனக்கு உன் பக்தியைத் தர வேண்டும் என்று ஸ்தோத்திரம் செய்து வேண்டிணான்). தேவியின் பாத கமலத்தைச் சரண் அடைந்தான். உண்மை பக்தனுக்கு அன்னை ஸாயுஜ்ய பதவி தந்தாள். முனிவர்களுக்கும் கிடைத்தற்கரிய நாசமில்லாத பதவியை அடைந்தான்.