மாயை இல்லாதவர் யார்?
மாயை இல்லாதவர் யார்?


துர் ஜனங்கள் கணக்கில்லாமல் பூமியில் அதிகமாக ஜனிக்க ஆரம்பித்ததும், பூமியின் பாரம் மிகவும் அதிகமாக ஆரம்பித்தது. பூமிதேவி ஸ்வர்க்கம் சென்று, இந்ராதி தேவர்களிடம் முறையிட்டும் பலன் இல்லை. அதனால் காமதேனுவுடனும் தேவர்களுடனும் பிரம்மாவிடம் சென்றாள். பூதேவியே! உன் பாரத்தைக் குறைப்பதற்கு நான் சக்தி உடையவன் அல்லன் என்று சொல்லி, பிரம்மா எல்லோரையும் பாற்கடலுக்கு அருகில் அழைத்துச் சென்றார்.அனைவருடனும் பாற்கடலுக்குச் சென்ற பிரம்மா, புருஷஸூக்த ஜபம் செய்தார். மனம் குளிர்ந்த விஷ்ணு அவர்கள் முன் தோன்றி, அனைவரையும் கைகூப்பி வரவேற்றார்.
அவர்கள் வந்த காரணத்தை அவரே அறிந்து கொண்டார். விஷ்ணு சொன்னார் "பூமியின் துக்கத்தை நானோ பிரம்மாவோ தீர்க்க முடியாது. அவரவர் கர்மத்தையும் விதியையும் மாற்ற யாராலும் முடியாது. அதனால் பூமியின் பாரத்தைக் குறைக்க என்னால் என்ன செய்ய முடியும்"? என்றார் .
தெய்வமானாலும் விதியை அனுபவித்துத் தான் ஆகவேண்டும். இது அவருடைய சொந்த அனுபவம். அவருக்கு வைகுண்டம் என்னும் ஒரு இடம் உண்டு. லக்ஷ்மி என்ற அழகிய பத்னியும் உண்டு. ஆனால் அவரால் அங்கு சுகமாக வாழ முடிந்ததா? அது தெய்வத்தால் தீர்மானம் செய்யப்படுகிறது. மீனாக, ஆமையாக, பன்றியாக அவதரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனித உடலும் சிங்கத்தின் தலையும் கூடிய நரசிம்ம அவதாரம் எடுத்தார்.
குதிரைத்தலையுடன் ஹயக்ரீவ அவதாரம் செய்தார். இதையெல்லாம் யாராவது விரும்புவார்களா? இதன் காரணங்களை தேவர்களும் அறிவார்கள். இப்படியிருக்க அவரால் எப்படி பூமியின் பாரத்தைக் குறைக்க முடியும்? விஷ்ணு தன் விதியை நொந்து கொள்கிறார். மச்ச, கூர்ம அவதார காலம் மிகவும் குறைவுதான். ஆனால் தசரத குமாரனாக, ராமனாக, அவதரித்த துக்கம் இன்று நினைத்தாலும் துக்கத்தையேத் தருகிறது.
சீதாவைப் பிரிந்த போது, லக்ஷ்மணன் மட்டுமே அருகில் உதவியாக இருந்தான். அதன் பிறகு உதவிக்கு வந்தது யார்? குரங்குகள் மட்டுமே! குரங்குகளின் உதவியால்தான் ராவணனை வதம் செய்ய முடிந்தது. கற்ப்புக்கரசியான சீதையை மீட்டு அயோத்தி வந்து, இழந்த ராஜ்ஜியம் மீண்டும் பெற்று, பட்டாபிஷேகமும் நடந்தது. ஏதோ ஒரு துஷ்டன் சீதையைப் பழிக்க, அதன் காரணமாக இன்றும் எல்லோரிடமும் பழிச்சொல் கேட்கிறேன் என்றார் ராமன். ராமனுக்கு மூன்று விதமான பட்டாபிஷேகம். 1. நஷ்டமான பட்டாபிஷேகம் 2. உண்மையான பட்டாபிஷேகம் 3. துஷ்கீர்த்தியால் பட்டாபிஷேகம். இப்படி மூன்று விதமான பட்டாபிஷேகம்.
தான் கர்ம பந்தத்திற்குக் கட்டுப்பட்டவன் இல்லை என்றால் இப்படித் துக்கம் வருமா? இந்த விஷ்ணு, இதைக் கேட்கும் தேவர்கள், பூமி எல்லோருமே கர்ம பந்தத்திற்குக் கட்டுப்பட்டவர்களே! எல்லோரும் மாயைக்கு அடிமையானவர்களே! இந்த மாயை இல்லாதவர் யார்? அது தேவிமட்டுமே! இந்த கர்மபந்த விடுதலை பெற ஒரே வழி தேவியைத் துதிப்பது தான். அதனால் பூமியின் துக்கம் தீர்க்க தேவியினால் மட்டுமே முடியும். விஷ்ணுவின் பேச்சைக் கேட்ட அனைவரும் பக்தியுடன் தலை குனிந்து, ஒன்றாக தேவியைத் துதித்தார்கள். இருளை நீக்கும் காலை நேர செந்நிற ஒளி போல, தேவியும் உடனே அவர்கள் முன், தோன்றினாள். அந்த தேவி என்ன சொன்னாள்?part 2 follows