லாசர். மார்த்தா, மரியா
லாசர். மார்த்தா, மரியா


இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான நபர் லாசர், மார்த்தா, மரியா என்பவர்களுடைய சகோதரன். இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பெத்தானியாவிலுள்ள இவர்களுடைய இல்லத்தில் இயேசு வருகை புரிவது வழக்கமாக இருந்தது.
அந்த இலாசர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டார். இயேசுவோ வேறு ஒரு இடத்தில் இருந்தார். இயேசுவிடம் தகவல் சொல்லி அவரை அழைத்து வர ஒருவர் அனுப்பப்பட்டார். ஆனால் இயேசுவோ வரவில்லை. இலாசர் இறந்து விட்டார். சகோதரிகளின் கதறலுடன், அவரை கல்லறைக் குகையில் அடக்கம் செய்தாயிற்று.
இயேசு திரும்பி லாசரின் வீட்டுக்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது. “நீர் இருந்திருந்தால் எங்கள் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என சகோதரிகள் புலம்பினர். இயேசு கண்ணீர் விட்டார். இறந்து போயிருந்த நண்பனுக்கு உயிர்கொடுக்க விரும்பினார்.
கல்லறையின் கல் புரட்டப்பட்டது. இயேசு இலாசரை அழைத்தார். அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களாகியிருந்த இலாசர் உயிருடன் எழும்பி வந்தார். கூட்டம் திகைத்தது. இந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவியது. பெத்தானியாவும், எருசலேமும் பக்கம் பக்கம் இருக்கக் கூடிய நகரங்கள். சுமார் இரண்டு மைல் தொலைவில் இருந்த எருசலேமில் இந்த செய்தி பரவியதும் யூதர்கள் பலர் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்.
இயேசுவை கொன்றே தீரவேண்டுமென மதவாதிகள் முடிவுகட்ட, இந்த நிகழ்வு ஒரு காரணமாய் அமைந்தது. பின் இயேசு சிலுவையில் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின் அந்த குடும்பம் என்ன ஆனது ? இலாசர் என்ன ஆனார் என்பதைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தில் இல்லை.
ஆனால், ஆதித் திருச்சபைக் குறிப்பேடுகளில் அவர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அதில் இரண்டு விதமான நிகழ்வுகளைக் காணலாம். ஒன்றில், இலாசரும் அவரது சகோதரிகளும் யூதேயாவை விட்டு சைப்ரஸ் பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
கிடியோன் என்கின்ற நகரில் நற்செய்தியை அவர்கள் அறிவித்தார்கள். இது கிமு 13ம் நூற்றாண்டு முதல், கிபி 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை உயிர்ப்புடன் இருந்த ஒரு பகுதி. இலாசரையும் கொல்ல வேண்டுமென மதவாதிகள் தீவிரமாய் களமிறங்கியது தான் இவர்களுடைய இந்த இடம் பெயர்தலுக்குக் காரணம்.
“இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச் செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால், தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். ஏனெனில், இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்” என்கிறது யோவான் 12 : 9-11 வரையுள்ள வசனங்கள்.
சைப்ரஸ் பகுதிக்கு வந்த இலாசர், அங்கே கிடியோன் நகரின் முதல் ஆயராக இவர் திருநிலைப்படுத்தப்பட்டு முப்பது ஆண்டுகள் நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார். இயேசுவின் தாய் மரியாவும், இயேசுவின் சீடர்களும் அவரை ஊக்கப்படுத்தினர். பின்னர் கிபி 63ல் இயற்கை மரணத்தை எய்தினார். இவரது கல்லறையின் மேல் புனித இலாசர் பெயரில் ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. “சர்ச் ஆஃப் செயிண்ட் லாசரஸ்” இன்றும் சைப்ரஸ் நாட்டில் லார்னாகா பகுதியில் இருக்கிறது.
இன்னொரு கதையில், இலாசரஸும் அவரது சகோதரிகளும், புனித மேக்சிமினும் மார்ஷெலி பகுதிக்குச் செல்கின்றனர். அங்கே நற்செய்தி அறிவிக்கிறார்கள். அங்கே இலாசர் திருச்சபைத் தலைவராகிறார். நீரோவின் காலத்தில் நிகழ்ந்த படுகொலைக்குத் தப்புகிறார், ஆனால் தொடர்ந்து வந்த தொமிதியன் மன்னனின் ஆட்சியில் படுகொலை செய்யப்படுகிறார். கிபி 890ல் லார்னாகாவில், “கிறிஸ்துவின் தோழரான இலாசர்” எனும் பெயருடன் அவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.
இலாசர், பாரம்பரியக் கிறிஸ்தவ அமைப்புகளால், “புனித இலாசர்” என்றும், “நான்கு நாட்களின் இலாசர்” எனவும் அழைக்கப்படுகிறார். நான்கு நாட்கள் இவர் மரணத்துக்குள் இருந்ததால் நான்கு நாட்களின் இலாசர் என்று அழைக்கப்படுகிறார். இஸ்லாமிய புனித நூலிலும் இலாசரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுவது வியப்பு. அங்கு இலாசர் அல் அஸீர் என குறிப்பிடப்படுகிறார்.
நான்கு நாட்கள் இலாசர் இருளுலகில் ஆத்துமாக்கள் படுகின்ற அவஸ்தையைக் கண்டதாகவும், அதனால் தனது வாழ்நாள் முழுவதும் சிரிக்காமல் அவர்களுக்காக செபித்து வந்ததாகவும் ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. வாழ்வு என்பது நிலையற்றது என்பதை முழுதும் புரிந்தவராக அவரது வாழ்க்கை இருந்தது. ஒரு முறை ஒருவர் ஒரு மண் பானையைத் திருடிக் கொண்டு போன போது, “மண்ணே மண்ணைத் திருடுகிறது” என அவர் சொன்னதாக ஒரு பிரபல சொல்லாடல் உண்டு.
இலாசரின் வாழ்க்கைக் கதையில் புனைவும் உண்மையும் கலந்தே பேசப்பட்டு வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், இலாசரும் அவரது சகோதரிகளும் இயேசுவின் மரணத்துக்குப் பின்பும் அவரைப் பின்பற்றி நடந்த செய்திகள் நமக்கும் வலிமை ஊட்டுகின்றன.