கூட்டுப் பிரார்த்தனை
கூட்டுப் பிரார்த்தனை


சித்ரா பௌர்ணமி அன்று அதிகாலையில் குளித்து முடித்துவிடுங்கள். முதல்நாளே, இல்லத்தை தூய்மையாக்கி, தண்ணீர் விட்டு, நன்றாகத் துடைத்துவிடுங்கள். அதேபோல், பூஜையறையில் உள்ள சுவாமி படங்களையும் துடைத்து வைத்திருங்கள். பிறகு, சுவாமி படங்களுக்கு, சந்தனம் குங்குமம் இடுங்கள். பூக்களால் அலங்கரியுங்கள்.
சித்ரா பெளர்ணமி நாளில், உங்கள் குலதெய்வத்தை வணங்குங்கள். அதேபோல், உங்களுக்கான இஷ்ட தெய்வத்தை, உகந்த மலர்களைக் கொண்டு அலங்கரியுங்கள்.
அடுத்து, வீட்டு தெய்வம் என்பார்கள். அதாவது, வீட்டில் எவரேனும் கடந்த தலைமுறைகளில், கன்னிப்பெண்ணாகவோ கர்ப்பிணியாகவோ இருந்து இறந்திருப்பார்கள். அவர்களின் படங்கள் இருந்தால், அந்தப் படங்களுக்கும் சந்தனம் குங்குமம் இடுங்கள். மலர்களால் அலங்கரியுங்கள்.
குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வம் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வதுதான்சித்ரா பெளர்ணமி நாளின் மிக முக்கியமான வழிபாடு. எனவே இந்தநாளில், மறக்காமல் விளக்கேற்றி, இந்தத் தெய்வங்களை வழிபடுங்கள். காலை வழிபாட்டின் போது, சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், எலுமிச்சை சாதம் என நைவேத்தியம் செய்யுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு நைவேத்தியப் பிரசாதத்தை வழங்குங்கள்.
அதேபோல், மாலையில் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். வீட்டு வாசலில் இரண்டு அகல்விளக்குகள் கொண்டு விளக்கேற்றுங்கள். மீண்டும், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வங்களுக்கு தீபதூப ஆராதனைகள் செய்யுங்கள். முடிந்தால், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.மாலை பூஜையில், பயறு வகைகள் கொண்டு சுண்டல் மற்றும் கேசரி, சர்க்கரைப் பொங்கல், அவல் பாயசம் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கும் வழங்குங்கள். அப்படியே வீட்டு வாசலில் இருந்தபடி, சந்திர தரிசனம் செய்யுங்கள். மனதார சந்திர பகவானிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
முக்கியமாக, சித்ரா பெளர்ணமியான நாளைய தினம் (7.5.2020) இயலாதவர்களுக்கு தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அன்னதானமாக வழங்குங்கள். வீட்டில் இதுவரை இருந்த தரித்திர நிலை மாறும். இல்லத்தில் இதுவரை இருந்த சண்டை சச்சரவெல்லாம் போய், சந்தோஷமும் குதூகலமும் குடிகொள்ளும். எனவே, முடிந்தவரை, தயிர்சாதம் அன்னதானம் செய்யுங்கள்!