STORYMIRROR

anuradha nazeer

Inspirational

4  

anuradha nazeer

Inspirational

கடவுள் கண்ணன்.

கடவுள் கண்ணன்.

3 mins
207

பள்ளிக்கூடத்தில்  கேரம் விளையாடிக் கொண்டிருந்தார் அந்தச் சிறுமி.    பெயர் ஜெயலட்சுமி.அப்போது தேங்கியிருந்த தண்ணீரில் ஒரு காகிதம் கிடப்பதை எடுத்துப் பார்த்து அதைப் படிக்க ஆரம்பித்தார். புத்தகம் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ள அந்தச் சிறுமி அந்தக் காகிதத்தை எடுத்துப் படித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 


மதுரையிலே தான்யா என்கிற மாணவி பரீட்சை எழுதி, நாசா விண்வெளி மையத்துக்குப் போய் வந்த செய்தி அதில் இடம்பெற்றிருந்தது. அந்தச் செய்தியின் இறுதியில் அந்தப் பரிட்சை எழுதுகிற ஆன்லைன் லிங்கும் கொடுக்கப்பட்டிருந்தது. 


தானும் அதுபோல நாசா செல்ல வேண்டும் என்று விரும்பிய ஜெயலட்சுமியின் குடும்பம் எப்படிப்பட்டது தெரியுமா? மனநலம் பாதிக்கப்பட்ட தாய், தம்பி கோவிந்தராஜ் இவர்களைத் தவிக்கவிட்டு நான்காண்டுகளுக்கு முன்பே எங்கோ சென்றுவிட்ட அப்பா.. ஆதரவு ஏதும் இன்றி முந்திரிக்கொட்டை உடைத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு படித்தபடியே ஏழ்மையில் வாழ்ந்து வருகிறார் ஜெயலட்சுமி. 


அவருக்கு இருக்கும் ஒரே ஆதரவு அவரது சித்தப்பா கண்ணன். வீட்டுக்கு வந்ததும் தன் சித்தப்பா போனை வாங்கி அந்த வெப்சைட்டை தேடிப் பிடித்தார். பிறகென்ன ஒருவழியாக அதற்கான தேர்வை எழுதி முடித்தார்.


புதுக்கோட்டை ஆதனக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஜெயலெட்சுமி புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தமிழ் வழியில் படித்து வருபவர் தனியார் நிறுவனம் நடத்திய விண் அறிவியல் போட்டியில் ஆங்கிலத்தில் தேர்வு எழுதி வெற்றிபெற்று, அமெரிக்காவின் 'நாசா'வுக்குச் செல்ல இப்படியாகத் தேர்வு செய்யப்பட்டார்...


ஜெயலட்சுமியின் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக உள்ள சுமதி, துர்கா பரமேஸ்வரி இருவரும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி சம்பந்தமான செய்திகளைக் கத்தரித்து எடுத்து வந்து பள்ளியில் படிக்கச் சொல்லி அதைப் பழக்கமாகவே அவருடைய மாணவர்களிடையே வளர்த்துள்ளனர். அதுவும் ஜெயலட்சுமியின் விண்வெளி குறித்த ஆர்வத்துக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்துள்ளது.


பொதுவாக இணையவழித் தேர்வுகளை கணினியில் எழுதுவதுதான் சுலபமாக இருக்கும். ஆனால் ஜெயலட்சுமியோ செல்போனிலேயே எழுதி இருக்கிறார். ஊராட்சித் தலைவரான தன் சித்தப்பாவிற்கு ஊராட்சி நிர்வாகம் சம்பந்தமான செய்திகளை வாசித்துச் சொல்வதையும், அது சம்பந்தமான வேலைகளுக்காகவும் அவரது செல்போனை பயன்படுத்தி உதவி செய்ய ஆரம்பித்த ஜெயலட்சுமிக்கு அப்படிச் செய்யும்போது செல்போன் பயன்படுத்துவதிலும், இணையத்தைப் பயன்படுத்துவதிலும் அனுபவம் அதிகரிக்க அதன்மூலம் செல்போன் வழியாகவே பரிட்சை எழுதி தேர்வாகி இருக்கிறார் ஜெயலட்சுமி.


ஜெயலட்சுமி நாசா செல்லத் தேர்வாகியிருந்தாலும், அவர் சென்று திரும்பும் பயணச்செலவை அவரே ஏற்க வேண்டும் என ‘கோ ஃபார் குரு’ என்ற நாசாவுக்கு அவரை அனுப்பும் அந்தத் தனியார் நிறுவனம் தெரிவித்தது.2 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை ஏற்பாடு செய்ய வழிதெரியாமல் பள்ளியிலேயே மனமுடைந்து அழுதுள்ளார் ஜெயலட்சுமி. 


தங்களின் தோழிக்காக ‘பிரபாகரன் புரட்சி விதைகள்’ என்ற பெயரில் பட்டதாரி இளைஞர்களால் நடத்தப்படும் நற்பணிக்குழுவை அணுகியுள்ளனர் ஜெயலட்சுமியின் பள்ளித்தோழிகள். அந்தக் குழுவின் பிரான்ஸிஸ் எடிசன் ஜெயலட்சுமியைப் பற்றி முகநூலில் எழுதவே, ஜெயலட்சுமியின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக பொதுமக்களின் நன்கொடைகளால் தேவையான பணம் வந்து சேர்ந்துள்ளது. ஏன் கொஞ்ச காலத்தில் தேவைக்கும் அதிகமாகவே உதவிகள் கிடைத்துவிட்டது.


அந்த நேரத்தில்தான், 'கிராமாலயா' என்ற ஒரு தொண்டு நிறுவனம் ஜெயலெட்சுமிக்கு உதவ முன்வந்தது. "உங்கள் தேவையைச் சொல்லுங்கள்..." என்று ஜெயலெட்சுமியிடம் தொண்டு நிறுவனத்தினர் கேட்டனர். அதற்கு ஜெயலெட்சுமி, "அமெரிக்கா செல்லத் தேவையான பண உதவி கிடைத்துவிட்டது" என்று கூறியுள்ளார்.


"சரி, வேறு என்ன உதவி வேண்டும்?" என்று தொண்டு நிறுவனத்தினர் கேட்ட கேள்விக்கு ஜெயலெட்சுமி வைத்த கோரிக்கை, இன்று அவர் கிராமத்தையே முன்மாதிரி ஆக்கியுள்ளது. அம்மக்களின், குறிப்பாக அந்த ஊர்ப் பெண்களின் பல ஆண்டு அவஸ்தைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.


அப்படி என்ன கேட்டார் ஜெயலெட்சுமி?


"எனக்கு என்று எந்தத் தேவையும் இல்லை. ஆனால், எங்கள் கிராமத்திற்கு நிறைய தேவைகள் உள்ளன. முக்கியமாக, கழிப்பறைகள் இல்லாமல் பெண் பிள்ளைகள் ரொம்பவே சிரமப்படுகிறோம். உங்களால் அதற்கு உதவ முடியுமா?" - ஜெயலெட்சுமியின் இந்த வேண்டுகோளிலிருந்து ஆரம்பமானது, ஒரு நல் முயற்சி.


ஜெயலெட்சுமியின் கிராமமான ஆதனக்கோட்டையை முழுவதும் ஆய்வு மேற்கொண்ட `கிராமாலயா' தொண்டு நிறுவனம், அங்கு கழிப்பறை வசதி இல்லாத 125 வீடுகளுக்கு 125 குளியலறையுடன் கூடிய கழிப்பறைகள் கட்டிக்கொடுத்துள்ளனர். 


"நான் `நாசா' போவதற்கான உதவிகள் செய்றதுக்காகத்தான், `கிராமாலயா' தொண்டு நிறுவன நிறுவனர் தாமோதரன் சார் என்கிட்ட பேசினார். அந்த நேரத்தில எனக்குப் பல நல்ல உள்ளங்கள்கிட்டயிருந்தும் நிறைய உதவிகள் கிடைச்சிருந்தது.


`வேற என்ன உனக்குத் தேவை இருக்கும்மா?'னு கேட்டாரு. அவர் அப்படிக் கேட்ட நிமிஷம், எங்க ஊருல நானும், என் வயசுப் பிள்ளைகளும், ஊருல இருக்க எல்லா பெண்களும் கழிப்பறை இல்லாததால திறந்தவெளியைப் பயன்படுத்திவந்த அவஸ்தைகள் எல்லாம்தான் சட்டுனு நினைவுக்கு வந்துச்சு.


"அதை அவர்கிட்ட சொல்லி, "எங்க ஊர்ல, கழிப்பறை வசதி இல்லாதவங்களுக்கு அதைக் கட்டிக் கொடுக்க முடியுமா சார்?"னு கேட்டேன். உடனே சார் மலர்ந்துபோய்,"ஏற்படுத்திக்கொடுத்திட்டா போச்சு..."னு சொன்னார்.


"நம்பவே முடியல... அடுத்த சில நாள்கள்லேயே `கிராமாலயா'விலிருந்து எங்க ஊருக்கு ஆள்கள் வந்தாங்க. சர்வே எடுத்தாங்க. சிமென்ட், செங்கல்னு வந்து இறங்கிச்சு. சுவர் எழும்புச்சு. கொஞ்ச நாள்ல கழிப்பறை தயாராகிடுச்சு. எனக்கு மட்டுமல்ல... எங்க கிராமத்துக்கே ஆச்சர்யம் விலகல. இப்போ, 'கிராமாலயா' குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருக்கேன்"என்கிறார் மாணவி ஜெயலட்சுமி.


நாசாவிற்கு போகும் ஜெயலட்சுமி பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டு இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தொலைப்பேசியில் அழைத்துப் பேசியுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு அழைத்துச் செல்வதாக மயில்சாமி அண்ணாதுரை அப்போது அவரிடம் கூறியிருக்கிறார்.


மே மாதம் நாசா விண்வெளி மையத்தைப் பார்வையிடச் செல்லும் ஜெயலட்சுமி அங்கு நடக்கும் ஒரு தேர்வை எழுத இருக்கிறார். அந்த தேர்வில் வெற்றி பெற்றால் அவருக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் (7 லட்ச ரூபாய்) பரிசாகக் கிடைக்கும். அந்த தேர்வுக்காகத் தயாராகி வருகிறார் ஜெயலட்சுமி!


Rate this content
Log in

Similar tamil story from Inspirational