இந்த மாயை இல்லாதவர் யார்? part 2
இந்த மாயை இல்லாதவர் யார்? part 2
விஷ்ணுவின் பேச்சைக் கேட்ட அனைவரும் பக்தியுடன் தலை குனிந்து, ஒன்றாக தேவியைத் துதித்தார்கள். இருளை நீக்கும் காலை நேர செந்நிற ஒளி போல, தேவியும் உடனே அவர்கள் முன், தோன்றினாள். அந்த தேவி என்ன சொன்னாள்?
விஷ்ணு வசுதேவ புத்திரனாக யது குலத்தில் அம்சாவதாரம் செய்வார். அவரே துஷ்டர்களை சம்ஹாரம் செய்வார். அதற்கானச் சக்தியை நான் தகுந்த சமயத்தில் அவருக்குத் தருவேன். நானும் அம்சமாக கோகுலத்தில் யசோதையிடம் தோன்றுவேன். அனைத்து தேவ காரியத்தையும் முடித்து வைப்பேன் என்று சொன்னாள்.
தேவி மேலும் சொன்னாள் பூபார நாசத்தை விஷ்ணு நடத்துவார், துஷ்டர்களைச் சம்ஹாரம் செய்வார். இது உலகிற்கு நன்மை தரும். தேவர்களாகிய நீங்களும் உங்கள் பத்னிகளுடன் தோன்றி தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லி மறைந்தாள்.
அம்மா! என் மனதிலும் தீய சிந்தனைகள் பெருகி வருகின்றன. காம க்ரோதாதிகளும் நிறைந்திருக்கிறரர்கள். அதனால் தாங்கள் என் இதயத்தில் அவதரித்து இவைகளைச் சம்ஹாரம் செயுங்கள் என்று இதன் ஆசிரியர் வேண்டுகிறார். காளிந்தி நதிக்கரை ஓரத்தில் ஒரு மதுவனம் நம் இருந்தது. அதில் லவணன் என்னும் ஒரு அஸுரன் இருந்தான். அவன் தன் தவ வலிமைக் காரணமாக மஹரிஷிகளைத் துன்பப்படுத்தி வந்தான்.
லக்ஷ்மணனின் தம்பியான சத்ருக்னன், அந்த அஸுரனைக் கொன்று, அவ்வனத்திற்கு மதுராபுரி என்று பெயர் வைத்து, தன் இரு மகன்களிடம் ஒப்படைத்து விட்டு ஸ்வர்கம் சென்றான். சூரிய வம்சம் அழியும் நேரத்தில், யாதவர்கள் அங்கு குடி புகுந்தனர். யயாதி புத்திரனான சூரசேனன் அவர்களை ரட்க்ஷித்து வந்தான். அந்த சூர சேனனுக்கு வருணனின் சாபத்தால், காசிபர் மகனாகப் பிறந்தார்.
அவரே வஸுதேவர். இவர் தன் தந்தை இறந்த பிறகு, வைசிய விருத்தியில் ஜீவனம் செய்து வந்தார். அப்பொழுது உக்ரசேனன் மதுராவை ஆண்டு வந்தான். அவனுக்கு கம்ஸன் பிறந்தான். காசிபரின் மனைவியாகிய அதிதியும் வருண சாபத்தால் தேவகனுக்கு மகளாகப் பிறந்து தேவகீ என்று அழைக்கப்பட்டாள்.
துஷ்டர்களை அழிப்பதற்கு தேவ லோகத்தில் நடந்தவைகளைப் பார்த்தோம். இனி பூமியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறோம். பாற்கடலிலிருந்து திரும்பி வந்த தேவர்களும், ப்ரம்மனும் இனி நமக்குக் கவலை இல்லை. கிருஷ்ணன் பிறப்பார். நம் கவலை எல்லாம் தீர்ந்துவிடும் என்று நிம்மதியாக இருக்கின்றனர். பூமியில் மதுராபுரியில் வசுதேவர் தேவகிக்குக் கல்யாணம் நடக்கிறது.
தன் பிரிய சகோதரியைக் கணவன் வீட்டில் கொண்டுவிட வசுதேவர் தேவகியைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டுத் தானே தேரை ஓட்டிக் கொண்டு போகிறான். போகும் வழியில் அவனுக்கு அசரீரி கேட்கிறது. யார் பேசுகிறார்கள்? எங்கிருந்து பேசுகிறார்கள்? இது ஒன்றும் கம்ஸனுக்குப் புரியவில்லை.part 3 follows
