சேவை
சேவை


உயிர் காக்கும் மருத்துவர்களுக்கே மயானத்தில் இடம் தர மறுக்கும் அளவுக்கு கரோனா வைரஸ் தன் கோரமுகத்தைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி வைத்திருக்கிறது. உலகமே கரோனாவைக் கண்டு அஞ்சி வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த செ.பாஸ்கர் தினமும் தூய்மைப் பணியாளர்களை நோக்கிச் செல்கிறார். அவர்களுக்கு இவர் செய்யும் சேவை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது.
ஒவ்வொரு நாளும் மாலையில் புதுவையின் வெவ்வேறு இடங்களுக்குச் செல்கிறார் பாஸ்கர். அங்கு பணி முடிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை அமரவைத்து அவர்களின் பாதங்களுக்கு பாத அழுத்த சிகிச்சை மேற்கொள்கிறார். அரோமா மூலிகை எண்ணெய் தடவி கால்களை நீவி விடுகிறார்.
பாதங்களில் அவர் கொடுக்கும் அழுத்தம் உடலின் அத்தனை பாகங்களையும் தட்டி எழுப்புகிறது. சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பணியாளர்கள் தங்களை மறந்து அப்படியே உறங்குகிறார்கள். சிகிச்சை முடிந்து எழும்போது, “என் காலே லேசானது மாதிரி இருக்குங்க, உடம்பு அப்படியே புதுசா ஆனது மாதிரி இருக்குங்க” என்று கை கூப்பி நன்றி சொல்கிறார்கள்.