சான்றிதழ்
சான்றிதழ்


ஸ்கிப்பிங்கில் உலக சாதனை படைத்த தமிழக மாணவி!
விருதுநகரைச் சேர்ந்த நாகராஜன், மாரியம்மாள் தம்பதியின் மகள் ஜெ.நா. சகித்யா தரிணி (12). தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்துவரும் இவர் 15.48 நிமிடங்களில் 2020 முறை ஸ்கிப்பிங் (கயிறு மூலம் சுற்றுதல்) செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து ஸ்கிப்பிங்கில் பயிற்சி மேற்கொண்டுவரும் தரிணி, குறைந்த நேரத்தில் பல்வேறு வகையான ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை முயற்சி செய்வதற்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது பள்ளியில் யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத் தலைவர் பாபு பாலகிருஷ்ணன் மற்றும் ஃப்யூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் தலைவர் செல்வம் என்ற உமா முன்னிலையில் உலக சாதனைக்கான ஸ்கிப்பிங் முயிற்சியை சகித்யா தரிணி செய்துகாட்டினார்.
ஒரு அடி உயரமுள்ள நாற்காலி முதல் நான்கடி உயரமுள்ள நாற்காலிகளில் நின்றவாறு தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்தும் அதன் பின்னர் ஒரு காலை முன்னும் மற்றொரு காலைப் பின்னும் வைத்தவாறு பாக்ஸர், டக் ஸ்கிப்பிங்கும் 20 கயிறுகளைக் கொண்டு ஒரே நேரத்தில் சுற்றுதல் உள்ளிட்ட 50 வகையான ஸ்கிப்பிங்கை செய்துகாட்டி அசத்தினார். இவை அனைத்தையும் 15.48 நிமிடங்களில் 2020 முறை செய்துகாண்பித்தார் என்பது கூடுதல் சிறப்பு. இதற்கு முன்பு தனியாக ஒரு ஸ்கிப்பிங்கில் மட்டுமே உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
சகித்யா தரிணி 50 வகையான ஸ்கிப்பிங் மூலம் உலக சாதனை படைத்ததால் யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனமும், ஃப்யூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனமும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தது. மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுவரும் அம்மாணவி, தனது பள்ளி யோகா ஆசிரியர் இந்திரா மற்றும் பெற்றோர்கள் உறுதுணையாக இருந்து ஊக்கமளித்ததாகக் கூறுகிறார்.