அவரை சொந்த ஊருக்கு ரயிலில் அனுப்பி
அவரை சொந்த ஊருக்கு ரயிலில் அனுப்பி
`எனக்கு குழந்தை பிறந்திருக்கு சார்!’ -நன்றி மறவாத தொழிலாளி; சென்னை-உ.பி ரயில் பயணத்தால் நெகிழ்ச்சி
ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளியும் அவரின் நிறைமாத கர்ப்பிணி மனைவியும் ரயிலில் பயணித்தபோது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பலர் வேலைவாய்ப்பை இழந்தனர். வருமானமின்றி தவித்த தொழிலாளர்களுக்காக தமிழக அரசு சிறப்பு முகாம்களை அமைத்து உணவுகளை வழங்கிவந்தது. இருப்பினும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முகாமில் போதிய வசதி இல்லை எனக்கூறி தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சமசரப் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், வருவாய்த் துறையினர், சிறப்பு ரயில் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துவருகின்றனர். ஆனாலும் சிலர் சைக்கிள் மற்றும் நடந்தே சொந்த ஊர்களுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்தனர். அதனால் யாரும் ஆபத்து பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்திவருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் தங்கியிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும்படி இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசனிடம் உதவி கோரினர். அம்பத்தூர் காவல் நிலையத்திலிருந்து இதுவரை ரயில் மூலம் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளளனர். அம்பத்தூரிலிருந்து பஸ் மூலம் ரயில் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொழிலாளர்கள், சிறப்பு ரயிலில் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் அம்பத்தூர் பகுதியில் தங்கியிருந்த விஜய் சங்கர், அவரின் மனைவி பிரபாகுமாரி ஆகியோர் கடந்த 26-ம் தேதி ரயில் மூலம் உத்தரப்பிரதேசத்துக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றனர். அவர்களுக்கான பயண ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் மற்றும் போலீஸார் செய்தனர். ஊருக்குச் செல்லும்போது பிரபாகுமாரி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ரயிலில் செல்லும்போது பிரபாகுமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரயிலிலேயே அவருக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. பின்னர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
குழந்தை பிறந்த தகவலை இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசனிடம் சொல்ல விரும்பியுள்ளார் விஜய்சங்கர். அதனால் விஜய்சங்கர், இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசனை போனில் தொடர்புகொண்டு, சார்... எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, நீங்கள் செய்த உதவிக்கு நன்றி என்று கூறியுள்ளார். அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் அம்பத்தூர் போலீஸார் விஜய் சங்கருக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அம்பத்தூர் போலீஸார் கூறுகையில், ``அம்பத்தூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் தங்கியிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்களை ரயில் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறோம். எத்தனையோ தொழிலாளர்களை அனுப்பி வைத்த நிலையில், நன்றி மறவாத விஜய்சங்கர், தனக்குக் குழந்தை பிறந்த தகவலை போனில் தெரிவித்தார். இவர், கடந்த சில ஆண்டுகளாக அம்பத்தூர் பகுதியில் வேலை பார்த்துவருகிறார். அவருக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மனைவியை அழைத்துக்கொண்டு அம்பத்தூரில் தங்கியிருந்தார். நிறைமாத கர்ப்பிணியுடன் விஜய்சங்கர், ஊரடங்கு சமயத்தில் சிரமப்பட்டார். அதனால்தான் அவரை சொந்த ஊருக்கு ரயிலில் குடும்பத்தினரோடு அனுப்பி வைத்தோம்" என்றனர்.