ஆசிரியர்களின் பாசச் செயல்
ஆசிரியர்களின் பாசச் செயல்


பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர்களின் பாசச் செயல்... நெகிழ்ந்த மாணவர்களின் பெற்றோர்கள்!
பெற்றோர்கள் எங்கள் பிள்ளைகளுக்கான அறிவுப் பசியைத் தீர்த்த நீங்கள் இப்போது எங்கள் வயிற்றுப் பசியையும் போக்கியுள்ளீர்கள் என நெகிழ்ந்துள்ளனர்.
மன்னார்குடி அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் தனது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவிப் பொருள்களை வழங்கியுள்ளார். பாடம் மட்டுமல்ல தங்களின் நிலையறிந்து தானாக உதவி செய்த அவரின் பாசச் செயலை எண்ணி பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தனர்.
பெற்றோருக்கு உதவிப் பொருள் கள் வழங்கல்
மன்னார்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஜெயவிலாஸ் நடுநிலைப் பள்ளி 134 ஆண்டுகள் கடந்த பழைமையான பாரம்பர்யம் மிக்க பள்ளி. இந்தப் பள்ளியில் படித்த ஏராளமானவர்கள் இன்று நல்ல நிலையில் பொறுப்புமிக்கப் பதவிகளில் உள்ளனர்.
இந்தப் பள்ளியில் பெரும்பாலும் விவசாய மற்றும் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள் படித்து வருகின்றனர். ஏழ்மை நிலையைக் கொண்ட சுமார் 110 மாணவ - மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு அன்றாடம் வேலை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்கையை நடத்தி வந்த பல குடும்பங்களைக் கேள்விக்குறியாக்கியது.
பெற்றோர்கள்
வீட்டிலேயே முடங்கிப் போனதில் மூன்று வேளை முழுமையாகச் சாப்பிட முடியாத நிலைக்குப் பல குடும்பங்கள் தள்ளப்பட்டன. இந்த நிலையில் ஜெயவிலாஸ் பள்ளியின் தலைமையாசிரியரான கல்யாணராமன் தனது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு போன் செய்து பேசியுள்ளார். இதில் அவர்கள் கடும் சிரமத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 சக ஆசிரியர்களுடன் இணைந்து தங்களால் முடிந்த உதவியைச் செய்ய நினைத்தார்.
இதற்காக ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிதியைக் கொடுத்தனர். இதையடுத்து ரூ.1 லட்சம் மதிப்பில் அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்களை வாங்கி பள்ளிக்குக் கொண்டு வந்தனர். இதை ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் வகையில் தனித் தனி பையில் வைத்தனர். இதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களின் பெற்றோர்களையும் பள்ளிக்கு வரழவைத்துக் கொடுத்தனர். இதைப் பெற்றுக்கொண்ட சில பெற்றோர்கள், `எங்கள் பிள்ளைகளுக்கான அறிவுப் பசியைத் தீர்த்த நீங்கள் இப்போது எங்கள் வயிற்றுப் பசியையும் போக்கியுள்ளீர்கள்" என நெகிழ்ந்துள்ளனர். தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களின் செயல் பலராலும் பாராட்டுகளைப் பெற்றது.
தலைமையாசிரியர் கல்யாணராமன்
இது குறித்து தலைமையாசிரியர் கல்யாணராமனிடம் பேசினோம், ``கொரோனாவால் பாதிக்கபட்ட மக்களுக்குப் பலரும் தாமாக முன் வந்து உதவி வருகின்றனர். இந்த நிலையில் எங்கள் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவ நினைத்து தலா ரூ.1,000 மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருள்கள், தின்பண்டங்கள், முகக்கவசம் உள்ளிட்ட பொருள்களைக் கொடுத்து சிறிய அளவிலான உதவியைச் செய்தோம். வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறினோம். எங்களின் இந்தச் செயல் பொற்றோர்களுக்கு மகிழ்வைத் தந்தது. பல ஆண்டுகளாக இங்கு படிக்கும் மாணவர்களின் குடும்பத்திற்கு உதவியது எங்களுக்குப் பெரும் மன நிறைவைத் தந்தது" என்றார்.