பம்பாய் மிட்டாய்
பம்பாய் மிட்டாய்
கடிகாரம் வேணும் தாத்தா
மோதிரம் வேணும் தாத்தா
குரல்கேட்டு எட்டிப்பார்த்தேன் ஜன்னல் வழியே !
தெருவோர நாய்க்குரைப்பு
அழுக்குப்படிந்த சட்டை
பார்த்துப் பழகிய முகம்
பசியால் மெலிந்த தேகம்
சட்டெனப் பார்த்ததும்
மூழ்கினேன் முந்நாள் நினைவலைகளில்
மேலிருக்கும் பாப்பா கைத்தட்ட
சிறார்கள் புடைசூழ
செங்கோல் ஏந்திய
இராஜாவைப்போல் வருவார் என் மிட்டாய்த் தாத்தா !
மனிதர்களைப்போல பல வண்ணங்களில்
கேட்டதைச் செய்ய முடியும் பக்குவத்தில்
வாயில் திகட்டாத சுவையில்
சர்க்கரைப்பாகில்
செய்திருப்பாரோ !
இல்லை வெல்லப்பாகில் செய்திருப்பாரோ !
நாவில் சட்டெனக் கரையாத பம்பாய்மிட்டாயை நான் மறவேனா !
ட்ரிங் …... ட்ரிங் …...
அடித்தது மணி ஸ்மார்ட் கடிகாரத்திலிருந்து
சுகர் மாத்திரையை நினைவூட்ட !
திரும்பியது மனவோட்டம் நிகழ்காலத்திற்கு
ஆயிரம் ரோலெக்ஸ் என் கைக்கு ஏங்கிக்கொண்டிருக்க
விரைந்தேன் மின்னலாய் பொறியாளன் வேலைக்கு
மிட்டாய் தாத்தாவைப் பார்த்தபடி
மெலிந்தது தேகம் மட்டுமல்ல வியாபாரமும்தான்
அயல்நாட்டு மிட்டாய்களால் !
குறிப்பு :
ரோலெக்ஸ் நிறுவனப் பொறியாளனின் எண்ணப் பிரதிபலிப்பு
பம்பாய்மிட்டாயைப் பார்த்தவுடன் !
படித்தமைக்கு நன்றி !
சிறு குறு உள்ளூர் வியாபாரிகளை ஆதரிப்போம் !