இரண்டாயிரத்து இருபது
இரண்டாயிரத்து இருபது


ஆட்டம் பாட்டமென ஆரவாரமாய் ஆரம்பித்தது புத்தாண்டு..
ஓரிரு மாதங்களில் பரவயிருக்கும் பதற்றத்தை
எதிர்பாராமல்,
பாரெல்லாம் பெருங்கூட்டம் பட்டாசு வெடித்து கொண்டாட
இனிப்புகள் பகிர்ந்தபடி இனிதே துடங்கியது இரண்டாயிரத்து இருபது..
இமைக்கும் நேரத்தில் இரண்டு மாதங்கள் கழிந்திட
அரசல்புரசலாக கேட்ட அயல்நாட்டு வியாதி,
இனிதே இந்தியா வந்தடைய,
ஊரடங்கு என்றது அரசாங்கம்..
கண்ணாடி கட்டிடத்தில்,
கணினிமுன் வேலை செய்தவரெல்லாம்,
வீட்டிலிருந்தபடியே வேலை என்றவுடன், பரவசமாய் படை எடுத்தனர் சொந்த ஊர் நோக்கி..
பலகாலமாக நகர வாழ்க்கை பிரித்து வைத்திருந்த உறவுகளை சேர்த்து வைத்தது ஊரடங்கு..
புகையிலும் புழுதியிலும் மூடப்பட்டிருந்த சாலையெல்லாம் சற்று ஓய்வெடுக்க,
இயற்கை தன் அழகை மீட்டெடுத்துக் கொண்டது..
ஒன்றின் பின் ஒன்றாக ஊரடங்கு நீடிக்க
ஊர் சுற்ற முடியாமல் சலிப்பில் ஒரு கூட்டம், உயிர் வாழ வழி தேடி கலைப்பில் ஒரு கூட்டம்..
பணக்காரன் பரப்பிய தொற்றுக்கு பழக்கம் போல் வறியவனே முதல் பலி..
ரயிலிலும் பேருந்திலும் பழம் விற்று பசியாறியவன், பட்டினியை சமாளிக்க பாதை தேடுகிறான்..
அலுவலக வாசலில் தேநீர் விற்று வாழ்க்கை நடத்தியவன்,
அடுத்ததொரு வாய்ப்புக்கு கண்ணீரோடு காத்திருக்கிறான்..
பாதையில் பாறை விழும்போது தான் அதை நகர்த்தும் சக்தியும் நம்மில் உதிக்கிறது..
ஒவ்வொரு முடிவும் மற்றுமொரு தொடக்கம் தானே..
வாழ்வில் முதல் முறை இழப்பிற்கு நன்றி சொல்கிறேன்..
நன்றி 2020!