ஏமாற்றமே
ஏமாற்றமே
அன்று காலை பள்ளி சென்றதும் ஸ்டாப் ரூமில் கை பையை வைத்துவிட்டு கைநாட்டு வைக்க ஆஃபீஸ் சென்றார். என்னடா ஸ்டாப் ரூம், கைநாட்டும் முரணா இருக்கேன்னு பாக்குறீங்களா? இப்போதான் பயோமெட்ரிக் வைக்ககனுமே அத சொன்னேன்.
திரும்பி வரும்பொழுது ஒரு மாணவி அவர் கை பையை திறந்து கொண்டிருந்தாள். அவரை பார்த்ததும் " பை திறந்து கிடந்தது டீச்சர் அதான் மூடி வச்சேன்" என்று சொல்லும்போதே வியர்த்து கொட்டியது அவளுக்கு. நான் பையை திறந்து வைக்கவில்லை என்று தெளிவாக நினைவிருந்தது.
வெகநாட்களாக ஆசிரியர்களின் பணம் காணாமல் போய்க்கொண்டிருந்தது. யார் என கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்பொழுதும் சந்தேகம்தான் ,உடனே முடிவு செய்துவிட கூடாது என அவளை கூப்பிட்டு "சொல்லுமா நீ தான் இவ்வளவு நாளா பணம் எடுத்தியா" என அமைதியாக கேட்டார். அவள் இல்லை என சொல்ல "அப்படி என்றால் சரி , சிசிடிவி கேமரா புதுசா வச்சுருக்கோம்ல அத வச்சு கண்டுபிடிச்சுரலாம் ,யாரு திருடினார்களோ அவர்களுக்கு தான் பிரச்சினை" என கூறினார்.
உடனே அவள் "அப்படி எல்லாம் செய்ய வேண்டாம் டீச்சர் நான்தான் எடுத்தேன், தெரியாம செஞ்சுட்டேன் ,மன்னிச்சுருங்க டீச்சர் " என கெஞ்சினாள்.
அவளின் தாய் வேறு ஒரு ஊரில் இருக்கிறார், இவள் இங்கு படிக்கிறாள், எனவே என்னதான் தவறு என்றாலும் அவளை அடிக்க மனம் வரவில்லை. சரி போ இனி எப்பொழுதும் இந்த தவறை செய்யாதே என கூறி அனுப்பிவிட்டார்.
அன்று உணவு இடைவேலை முடிந்ததும், வகுப்பறைக்கு சென்ற ஆசிரியருக்கு பேரதிர்ச்சி.
அந்த மாணவியை காணவில்லை , அவள் பை மட்டும் உள்ளது. "ஐயோ நா என்ன சொன்னேன், கடுமையாக திட்ட கூட இல்லையே, எங்க போனானு தெரியலயே" என பதற்றத்தோடு தலைமை ஆசிரியரிடம் நடந்ததைக் கூறினார்.அவரோ பயப்பட வேண்டாம் வந்துவிடுவாள் என கூறிவிட்டார்.
ஆனாலும் அந்த ஆசிரியருக்கு பதற்றமும் பயமுமாக இருந்தது, "அவள் வீட்டில் சொல்லிவிடுவேன் என பயந்து எதும் செஞ்சுகிட்டா என்ன பன்றது", "அவ அம்மா வேற கூட இல்லையே", " நான் அவளிடம் எதுவும் கேட்காமல் அவள் பெற்றோரை வரசொல்லி பேசியிருக்கலாமோ?" என தனக்குள்ளே கேள்வி கணைகளை தொடுத்துக்கொண்டிருந்தார்.
நேரம் ஆக ஆக பயம் கூடியது, அவள் வீட்டில் சென்று பார்த்து வர அவள் பக்கத்து வீட்டிலிருந்து வரும் மாணவனை அனுப்பினார். அவள் அங்கும் இல்லை. மேலும் காத்திருக்காமல் அவரே பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் தேட ஆரம்பித்தார், எங்கும் இல்லை.
பள்ளி நேரமும் முடிந்துவிட, அவள் பை எடுக்க வருவாள் என்ற நம்பிக்கையும் போனது. அனைத்து ஆசிரியர்களும் ஆளுக்கு ஒருபுறம் தேடினர். அந்த ஆசிரியர் போய்கொண்டிருந்த வழியில் சீருடையுடன் யாரோ தூரத்தில் தெரிய, வேகமாக சென்று வண்டியை நிறுத்திவிட்டு பார்த்தார், அவள்தான் அந்த காணாமல் போன மாணவி.மத்திய சிறைச்சாலையை தன் மனக்கண்ணால் பார்த்துவிட்டு வந்த
அந்த ஆசிரியருக்கு அப்பொழுது தான் உயிர் வந்ததுபோல் இருந்தது . , பெருமூச்சு விட்டார்!
அந்த மாணவியிடம் "இங்க எங்க போய்கிட்டு இருக்க? உன்ன எங்கலாம் தேடுறது" என கேட்க, எங்க அம்மா வர சொன்னாங்க டீச்சர் அதான் போரேன்னு சொன்னாள். அதன்பின் எதுவும் கேட்கவில்லை ,அவளை வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டில் விட சென்றார். பாதி வழியில் தலைமை ஆசிரியர் வர, "நா வீட்ல விட்டுகிறேன் டீச்சர்" என கூட்டி சென்று வீட்டில் விட்டார்.
இது போன்ற நிகழ்வுகளால் , யாரையும் கண்டித்து நல்வழிபடுத்தும் எண்ணம் இனி எந்த ஆசிரியருக்கும் வராது...
மாணவர்களிடம் நல்லவற்றை எடுத்து கூறினாள் அதை ஏற்றுக்கொண்டு தம்மை திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வளர வேண்டும்...
அதற்கு ஆசிரியர் மட்டுமல்ல பெற்றோரும், சமூகமும் சேர்ந்து படிப்பினை வழங்கினால் மட்டுமே, நல்ல மாற்றம் வரும். அதுவரை ஏமாற்றமே!!!