அவதியுறும் ஆறுகள்..
அவதியுறும் ஆறுகள்..
கோடை வெயிலில்
மின்னுகிற வெள்ளை
மணற் படுகையை
புடவையாய் உடுத்தி..
ஒய்வாக படுத்திருந்து....
தன்னுடலின் உதிரமான
தண்ணீரை தாய்பாலாய்
உவந்தளிக்கும்
தாயின் மடியாகி
ஊற்றுகள் வாயிலாக
பல்லுயிர்களின்
தாகம் தீர்த்திடவும்
பசியைப் போக்கிடவும்...
கார் காலத்தின்
கருமுகில் கூட்டம்
கரந்த மழைநீர்
திரண்டு
கரைபுரளும்
வெள்ளமாகி
அழகிய அலைகளை
சேலையாய் அணிந்து
விடியல் கதிரொளியில்
பொன்னென மின்னி
உச்சி வேளையில்
வெள்ளி போல் ஒளிர்ந்து
ஆடி அசைந்து
நளினமாக நடந்து வந்து..
அரவணைக்கும்
அன்னையாகி
இருமருங்கும்
தனது தண்ணீரால்
பச்சைபசேலென
மனங்கவரும்
சோலைகட்கும்..
உணவளிக்கும்
வயல்வெளிகட்கும்
செழிப்பாக
படர்ந்திருக்க
வரமளித்தும்...
மனித நாகரிகத்தின்
பழம் பெரும்
தொட்டிலாக
மனித வாழ்க்கைக்கு
ஆதாரமாக ..
நீர் போக்குவரத்து
வழித்தடமாக
குளிக்குமிடமாக
மனித குலத்தின்
உயிரிடமாக
காலங்காலமாக
நில்லாமல் ஓடிய
நதி மகளிடமும்
கடந்த அரை
நூற்றாண்டில்
விதி விளையாடியது..
கரைகளைக் கடந்து
உள்ளே நுழைந்த
கரை வேட்டிகளும்..
அக்கறையில்லாத
அரசும், அதன்
அதிகாரிகளும்
அறத்தைக் கொன்று
கதற கதற அன்னையின்
மணற்துகில் உரித்து
அம்மணமாக்கிட..
வெள்ளை வேட்டிக்
கொள்ளைபர்களின்
கொடுமையால்
சிதைந்து போய்
மானங்காத்திட
வேலிக் கருவை
முட்சேலை கட்டி
அரைகுறை உடையில்
சாகும் தருவாயில்
முனுமுனுத்துக்
கிடக்கிறாள்...
பன்னெடுங்காலமாய்
பல்லுயிர்களின்
தாகம் தணித்து
பசியைப் போக்கிய
ஆற்றுத் தாய்
அரை குறை உயிரில்
சுருண்டு கிடக்க
அவள் தாகத்திற்கு
சாக்கடை நீர்
ஊற்றுகின்ற
சண்டாளர்களும்...
ஆலைகளின்
கழிவு நீரையும்
கலக்க விட்டு
கொலை செய்யும்
கொலைகாரர்களு
ம்
விலை கொடுத்து
குடிநீர் வாங்கும்
இழிநிலைக்கு வந்துங்கூட
தன்னிலை உணராநிலை
தொடர்ந்தால்..
வருகின்ற காலங்களில்
அவர்களது
தலைமுறைக்கு
விலை நீரும் கிடைக்காத
நிலையொன்று வருமென்று
சிறிதளவும் புரியாது..
தவறினை உணராது..
பணத்துக்காக மட்டுமே
அலைகின்ற இவர்களை
இவர்களின் வருங்கால
தலைமுறைகள்
ஒருபோதும் மறக்காது...
மன்னிக்காது...
என்பதனை
புரிந்தும் உணர்ந்து
ஆலைக் கழிவுகளை
ஆற்றில் கலப்பதற்கும்
ஆற்றினை தொடர்ந்து
பாழ்படுத்துவதற்கும்
முற்றுப்புள்ளி
வைப்பதென தெளிந்து
முடிவெடுத்து
மரணத்தின் வாயில்
அரைகுறை உயிரில்
அவதியுறும் ஆற்றை
காப்பாற்றிளாலன்றி
இவர்களது வருங்கால
சந்ததிகள் கருவில்
உருவாகி இப்புவியில்
பிறககும் வாய்ப்பே
இல்லாது போகும்..
ஒருவேளை பிறந்தாலும்
இவர்களின் எதிர்கால
தலைமுறையில்
நிகழும் மரணங்கள்
மலையளவு பணமிருந்தும்
நாவறண்டு, தணியாத
தாகத்திற்கு குடிப்பதற்கு
நீரின்றிதான்
நிச்சயமாக நிகழும்...
கடைசி வாய்ப்பாக
இதுவரையிலும் செய்த
பாவங்களுக்கு பரிகாரமாக
ஈட்டிய பொருளையும்
விலைமதிப்பற்ற
வாழ்வின் பொன்னான
நேரத்தையும் செலவிட்டு
பெரும் படையொன்று திரட்டி
ஆறுகளை மீட்டெடுத்து
தூய்மைப்படுத்தி
தொடர்ந்து பாதுகாப்பதென
முடிவெடுத்து முன்வந்து
முனைப்போடு செயற்பட்டு
களமிறங்கி
போராடியோ..
நீதிமன்ற படியேறி
வழக்காடியோ..
மக்களைத்திரட்டி
புரட்சி செய்தோ
ஏதோ ஒரு வழியில்
ஆறுகள் புத்துயிர் பெற்று
மீண்டெழுந்தால்
நிலமும் வளம்பெறும்..
உலகமே உயர்வுபெறும்
இரா பெரியசாமி...