தன்னார்வலர் சிவசண்முகம்
தன்னார்வலர் சிவசண்முகம்


மற்றவர்களுக்கு உதவ நினைக்கும் தன்னார்வலர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்து சில தன்னார்வலர்களிடம் பேசினோம்.
தன்னார்வலர் சிவசண்முகம்
``சாப்பாட்டுக்கே பல மக்கள் சிரமப்பட்டுட்டு இருக்காங்க. அரசு உதவிகள் செய்யலனு யாருமே சொல்லல. ஆனா, அரசு கொடுத்த அரிசி பருப்பு போதுமானதாக இல்லைனுதான் சொல்றாங்க" என்று பேசத் தொடங்கினார், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காருக்காவூரைச் சேர்ந்த தன்னார்வலர் சிவசண்முகம்.
``குழந்தைகளை வெச்சுகிட்டு ஒவ்வொருத்தரும் பாலுக்கும், சாப்பாட்டுக்கும் யாராவது உதவமாட்டாங்களானு காத்துக்கிடப்பதெல்லாம் ரொம்ப கொடுமையான விஷயம். இந்தச் சூழலில் அவங்களுக்கு உதவக்கூடிய தன்னார்வலர்களுக்கும் அரசு, கட்டுப்பாடு விதிச்சா அந்த மக்கள் என்னதான் பண்ணுவாங்க? அந்த மக்களோட கண்ணீரை நேரில் பார்த்த யாராலும் எனக்கென்ன, நான் பாதுகாப்பா இருந்தாபோதும், இந்தச் சமூகம் எப்படியும் போகுதுனு வீட்டில் இருக்கமாட்டாங்க. கொரோனா பத்தி எதுவுமே தெரியாத குழந்தைகிட்டபோயி பசியை அடக்கிக்கோனு சொல்ல முடியுமா சொல்லுங்க. அதான் காவல் துறையில் அனுமதி பெற்று தொடர்ந்து உதவிக்கிட்டு இருக்கேன். மனநலம் குன்றியவர்கள், வாழ்வாதாரம் இழந்த சலவைத் தொழிலாளி, டெய்லர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், சவரத் தொழிலாளிகளின் குடும்பங்கள், பூம்பூம் மாட்டுக்கார குடும்பம் என யாரெல்லாம் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் இருக்காங்களோ அவங்களை தேடிச்சென்று உதவிட்டு இருக்கேன். இதுக்காக தினமும் 60ல இருந்து 80 கிலோ மீட்டர் வரை வண்டியிலேயே பயணம் செய்றேன். எல்லோருக்கும் அரிசி, பருப்புனு வாங்கிக் கொடுக்காம யாருக்கு என்ன தேவையோ அதை வாங்கிக் கொடுத்துட்டு இருக்கேன். இதுவரை 400 குடும்பங்களுக்கு மேல் அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், கபசுரக் குடிநீர், தண்ணீர் பாட்டில்கள், வெள்ளரிக்காய், என அவரவரின் தேவைக்கு ஏற்ப உதவிக்கிட்டு இருக்கேன். இது என்னோட தனிப்பட்ட முயற்சி இல்ல. நிறைய பேர் எனக்கு நிதி கொடுத்து உதவிக்கிட்டு இருக்காங்க. ஒவ்வொரு வாரமும் எனக்கு நிதி அனுப்பியவர்களின் விவரம், அதற்கு வாங்கிய பொருள்களின், விலை எல்லாவற்றையும் சமூகவலைதளங்களில் ஷேர் பண்ணுவதால் நிறைய பேர் என்னை நம்பி உதவிப்பணம் கொடுத்துட்டு இருக்காங்க.
மற்ற நேரங்களைவிட இந்த ஊரடங்கு நேரத்தில் உதவுவதுதான் அவசியம். ஆனால், அதில் நிறைய சிக்கல்களும் இருக்கு. பொருள்கள் எல்லாம் விலை ஏறிப்போச்சு. ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலை வெச்சு விக்கிறாங்க. விலை விசாரிச்சு வாங்க முடியல. முதல் நாள் 4,500 ரூபாய்க்கு வாங்கிய பொருள்கள், மறுநாள் வேறு கடையில் வாங்கும்போது 3800 ரூபாய்னு கொடுக்குறாங்க. மக்கள் பசியில் சாகக் கிடக்குற நேரத்துலையும், வியாபாரிகள் அதிக விலை வெச்சு விற்பதுதான் வேதனையா இருக்கு. சரியான விலையில் பொருள்களைக் கொடுத்தால், உதவி இன்னும் அதிக மக்களுக்கு கிடைக்கும். அது வியாபாரிகளுக்குப் புரியுறது இல்ல. அது மட்டுமல்ல பொருள்கள் தொடர்ந்து கிடைப்பதிலும் சிக்கல்கள் இருக்கு. அரிசியெல்லாம் ஒரு டன் வேண்டும் என ஆர்டர் கொடுத்து, சில நாள்கள் காத்திருந்து வாங்கிட்டு இருக்கேன். ஏரியாவாரியாக உதவி செய்யாமல் யாருக்கு உண்மையில் உதவிகள் தேவைப்படுதோ அவங்களுக்கு கொடுப்பதால் ஒரு திருப்தியும் இருக்கு. எங்களுக்குக் குழந்தை பிறந்து 75 நாள்தான் ஆகுது. ஆனால், வெளியில் போயிட்டு வர்றதால் என்னை நானே தனிமைப்படுத்திகிட்டேன். என் குழந்தையைத் தூக்கி 45 நாள் ஆகுது. கொரோனா தொற்று வியாதி என்பதால் உதவுவோரிடம் இருந்து உதவி வாங்குவோருக்கும், உதவி வாங்குவோரிடம் இருந்து உதவி செய்பவர்களுக்கும் பரவாமல் இருக்க, பாதுக்காப்பாக இருப்பது அவசியம்" என்று விடை பெறுகிறார்.