STORYMIRROR

Anantha jothi

Children

4  

Anantha jothi

Children

தளிர் மனமே தடம் மாறாதே!!

தளிர் மனமே தடம் மாறாதே!!

2 mins
3


#மாண்புறு_மங்கையே_24

#தளிர்_மனமே_தடம்_மாறாதே


காலையில் பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சை எழுதப் போன மகளை, மாலையும் கழுத்துமாக எதிர்பாராத இருவரின் பெற்றோரும், பெண்காவலர் மாலதி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.


மனவேதனை தாளாமல் பிள்ளைகளை அருகில் அழைத்தும், அவர்கள் வராமல் இருக்க, தாயும் தந்தையும் தலையில் அடித்துக்கொண்டு அழுதனர். பார்த்திருந்த அனைவருக்கும் கண் கலங்கியது. ஆனாலும், அவர்களது பிள்ளைகளின் கண்களில் அந்தக் காட்சி விழவில்லை போலும்! 'எங்கே, தங்களைப் பிரித்து வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்களோ?' என்ற பயம் மட்டும் அவர்களிடம் இருந்தது.


தகப்பனும், தாயும் எவ்வளவோ எடுத்துரைத்தும், அவர்கள் வர மறுத்துவிட, காவலரிடம் பக்குவமாகச் சொல்லி, பிள்ளைகளைத் தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர் அவர்களின் பெற்றோர்!


மாலதி, இருவரிடமும் சற்று நேரம் பேசிவிட்டு, அவர்களின் பெற்றோரிடமும் அறிவுரை கூறி, அவர்களை அனுப்பி வைக்க முயன்றார். 


அவர்கள் போக மறுத்ததும், "உங்க ரெண்டு பேருக்கும் இப்போ அதுக்குரிய வயசு வரல. வாழ்க்கையில் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கு. அதைக் கடந்து வர நிறைய நாட்கள் ஆகும். அப்ப இதைவிட அழகும், திறமையும், படிப்பும், வசதியும் உள்ள நிறைய பேரைப் பார்க்கலாம். அந்த நேரம், அவசரப்பட்டுக் காதலில் விழுந்து, உங்க கனவுகள் உடைந்து சிதற காரணமாகிட்ட வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படும். பெற்றோர் பேச்சைக் கேட்காதது எத்தனை பெரிய தவறுன்னு நினைச்சு வருத்தப்படுவீங்க. அதுக்குதான் சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் உங்க பெற்றோரோடு வீட்டுக்குப் போங்க" என்றார்.


காயத்ரி, பெற்றோரின் அழுகையையும், காதலனையும் பார்த்து ஒரு முடிவிற்கு வராமல் இருக்க, "நீ சாதிக்கப் பிறந்தவ காயத்ரி! காதலில் மூழ்கிக் கல்யாண பந்தத்தில் சிறைப்பட்டு, உன் வாழ்க்கையை அழிக்க இல்ல. 'மங்கையராய் பிறப்பதற்கு நல்மாதவம் செய்திட வேண்டுமம்மா'ன்னு பள்ளிக்கூடத்துல படிச்சதில்லயா? பிறகும் ஏன், உன் வாழ்க்கையை நீயே அழிக்கப் பார்க்கறே?


இன்னைக்கு இனிப்பா இருப்பது, நாளைக்குக் கசக்கும். அப்ப உன்னால எதுவுமே பண்ண முடியாம போகும். உங்க பெற்றோரைப் பார்! உங்களைப் பெத்து வளர்த்து ஆளாக்கி, பிடிச்ச எல்லாத்தையும் செஞ்சு கொடுத்துட்டு, உங்க எதிர்காலம் அழிஞ்சு போயிடக் கூடாதுன்னு பயத்துல, கண்ணீர் வடிச்சிட்டு இருக்கறதை..." என்றதும், அவள் பதிலுரைக்கத் திணறினாள்.


பள்ளிப்பருவத்தில் ஏற்படுகின்ற காதலில், அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது. படிப்பும், பெற்றோரின் ஆதரவும், சஞ்சலமற்ற மனதும், நிம்மதியான வாழ்க்கையும் மட்டுமே, அவர்களை உயர்வடைய செய்யும் என்றுரைத்து, சில அறிவுரைகளுடன் இருவரையும் அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.


அவள் திடீரென்று திரும்பி வந்தாள். "படிப்பு முடிஞ்ச பிறகு, என் கார்த்திக் கூடவே என்னையும் அனுப்பி வைப்பீங்களா? அப்பவும், இப்படி சொல்லிப் பிரிச்சிட மாட்டீங்களே?" 


அவர் புன்முறுவலுடன், "அப்பவும், உங்க ரெண்டு பேர் மனசிலும், இதேநேசம் அழியாம இருந்தா, அவனே உன் கணவனாகவும் வருவான். உன் கனவுகளுக்கும் முழு வடிவம் கிடைக்கும்!" என்றார்.


அவர் சொன்னது அவளுக்குப் புரியவில்லை. அவர்கள் இருவரின் பெற்றோருக்கும் புரிந்தது. நன்றியுடன் அவர்களின் பார்வையும் இருந்தது!!


Rate this content
Log in

Similar tamil story from Children