DEENADAYALAN N

Children Stories Inspirational Children

5  

DEENADAYALAN N

Children Stories Inspirational Children

முழுவதும் அறிந்து சொல்!

முழுவதும் அறிந்து சொல்!

5 mins
265


கதை என் கையில்! முடிவு குட்டிஸ் கையில்! – 9

முழுவதும் அறிந்து சொல்!

(கோவை என். தீனதயாளன்)

                        

 

ஹை விவு, அவி, ரிஷி, ஸ்மயா, ரத்தி, லிசி, மஹா, ஐஷு, நெல்சன், பார்த்தன் மற்றும் மை டியர் குட்டீஸ்!


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!


 

 

வழக்கம் போல கிரிஷின் கண்கள் ரெண்டும் அங்கேயும் இங்கேயும் அலை பாஞ்சிகிட்டிருந்துச்சி. பள்ளிக்கூடத்தோட பிரதான பெரிய கதவு முன்னாலே மாணவ மாணவிகள் அவசர அவசரமா வகுப்பை நோக்கி போய்கிட்டிருந்தாங்க. அவங்கவங்க இருக்கைலே புத்தகப் பையை வெச்சிட்டு எல்லாரும் பிரார்த்தனைக் கூடத்துக்கு வந்துகிட்டிருந்தாங்க. கொஞ்ச நேரத்துக்குள்ளே பிரார்த்தனைக் கூடத்தின் மேடை மேலே தலைமை ஆசிரியர் சாமுவேல் சார் நின்னுகிட்டிருந்தாரு. அவருக்கு எதிரில் வகுப்பு வாரியா எல்லா மாணவ மாணவிகளும் ஒரே சீரா அணி வகுத்து நின்னுகிட்டிருந்தாங்க. ஒவ்வொரு வகுப்புக்கும் முன்னாடி அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் இல்லன்னா ஆசிரியைகள் நின்னுகிட்டிருந்தாங்க. தன் வகுப்பு வரிசையிலே நின்னுகிட்டு இருந்தாலும், இது அத்தனையையும், ஒன்னு விடாம கிரீஷ் பார்த்துகிட்டிருந்தான்.


பொன்பாண்டி சார் ஆர்மோனியத்தை வாசிக்க, சில மாணவ மாணவிகள் பிரார்த்தனை பாடலை பாடினாங்க.


பாடல் முடிஞ்சி, சின்ன சின்ன தகவல்களும் முடிஞ்ச உடனே எல்லா மாணவ மாணவிகளும் பிரார்த்தனை கூடத்திலேயிருந்து அவங்கவங்க வகுப்பை நோக்கி ஒரே சீரா நடக்க ஆரம்பிச்சாங்க.


கிரீஷின் வகுப்பு ஆசிரியை வகுப்புக்குள்ளே நுழைஞ்சாங்க. எல்லா மாணவ-மாணவியரும் வணக்கம் சொன்னாங்க. அவங்க வகுப்பு ஆசிரியையும் வணக்கம் சொல்லிட்டு, வருகைப் பதிவு செஞ்சி முடிச்சாங்க.


உடனேயே கிரீஷ் ஆரம்பித்தான்: ‘டீச்சர் இந்த முகில் எப்பொவுமே காலைலே வீட்டுலே சாப்பிட்டு வர்றதில்லே டீச்சர். ஒரு டிஃபன் பாக்ஸ்லே கொண்டு வந்து இங்க பள்ளியிலே தான் சாப்புடுறான் டீச்சர்’ என்று கூறினான்.


‘அப்பிடியா.. சரி.. அப்புறமா விசாரிக்கிறேன்னு’ சொல்லிட்டு பாடத்தை நடத்த ஆரம்பிச்சாங்க.


இடைவேளையில் முகிலை அழைத்து டீச்சர் விசாரித்ததை கிரீஷ் பார்த்தான். ‘முகில் நன்றாக திட்டு வாங்கி இருப்பான்’ அப்பிடீன்னு அவனுக்கு தோனுச்சி.




இரண்டு நாளைக்கு முன்னாலே இதே போலதான். ஸ்வஸ்திகா எப்பவும் காலையிலே பள்ளிக்கு வந்துதான் தன்னோட வீட்டுப் பாடத்தையெல்லாம் செஞ்சிகிட்டு இருக்கிறா அப்பிடீங்கிறதை கவனிச்சான். அதையும் வகுப்பு ஆசிரியைகிட்டே சொல்லிட்டான். வகுப்பு ஆசிரியை அவளை தனியே அழைத்து விசாரிச்சுகிட்டு இருக்கறதைப் பார்த்தான். அவளுக்கும் நல்ல திட்டு விழுந்திருக்கும்னு நினைச்சிகிட்டான்.


மற்ற மாணவ மாணவியர் கிரீஷ் இந்த மாதிரி வகுப்பு ஆசிரியர்கிட்டே எல்லாத்தையும் ‘கோள்’ சொல்றதை விரும்பலே. அப்பிடி செய்ய வேண்டாம்னு அவன்கிட்டே கேட்டுகிட்டும், அவன் தன்னோட அந்த செயலை நிறுத்தலே.




இன்னொரு முறை பக்கத்து வகுப்புலே படிக்கிற மதிங்கிற பையன் எப்பவுமே பிரார்த்தனைக் கூடத்துக்கு வர்றதில்லேன்னு அவங்க வகுப்பு ஆசிரியர்கிட்டையே போய் சொன்னான்.


இதையெல்லாம் பார்த்து ‘கிரீஷுக்கு எப்பொதான் புத்தி வருமோ? அது எப்பிடி வருமோ?’ன்னு எல்லா வகுப்பு தோழர்களும், தோழியர்களும் நெனச்சாங்க.



கிரீஷ் அப்பிடி ஒரு பாடம் கத்துக்கற அந்த நேரமும் வந்துச்சி! அதுக்கப்புறம் அவன் மனம் திருந்தி, அடுத்தவங்களைப் பத்தி சொல்லுகிற அந்த பழக்கத்தை அறவே நிறுத்திட்டான்.


அப்பிடி என்னதான் நடந்துச்சி?




‘சரி! குட்டீஸ்.. இந்த இடத்துலே கதையை நிறுத்தறேன். ‘கிரீஷ் எப்படி திருந்தினான்? அப்பிடி என்னதான் நடந்திருக்கும்?’னு யோசிச்சு, உங்களில் யாராவது மேலும் தொடர்ந்து சொல்லி இந்தக் கதையை முடீங்க பாக்கலாம்!’ என்றேன்.


‘நான் சொல்றேன்’னு முன் வந்த லிசி தொடர்ந்தாள்:

கதை இப்பிடி போய்கிட்டிருந்தப்போ, ஒரு நாள் பாத்ரூம் இடைவேளை வந்துச்சி. நம்ம கிரீஷும் பாத்ரூம் போயிட்டு வந்தான். எப்பவுமே பள்ளியோட பெரிய கேட்டும் சின்ன கேட்டும் பூட்டிதான் இருக்கும். காலை, மாலை, மதிய உணவு வேளையில் மட்டும்தான் கதைவைத் திறப்பாங்க. ஆனா கிரீஷ் ஆச்சரியமா ஒன்னு பார்த்தான். அவனோட வகுப்பு மாணவர்கள் அறிவும் அகிலும் சிறிய கதவின் மேல் ஏறிக் குதித்து வெளியில் போய்கிட்டிருந்தாங்க. இடை நேரம் முடிந்து ஆசிரியை வகுப்புக்கு வந்த உடனே, அவங்கிட்டே கிரீஷ் விஷயத்தை சொல்லிட்டான்.


‘என்ன? ரெண்டு பேரும் கேட் ஏறிக்குதிச்சா போனாங்க?’ ஆசிரியை கோவமாக் கேட்டாங்க.


‘ஆமா டீச்சர்.. ‘ னு கிரீஷ் உறுதியா சொன்னான்.


‘சரி.. நீ உக்காரு.. வரட்டும்.. பார்த்துக்கலாம்..’ என்று ஆசிரியை கோபமாகக் காத்திருந்தார்.


பத்து நிமிஷம் கழிச்சி அறிவு மட்டும் வகுப்புக்கு வந்தான்.


‘எங்கடா அகில்..’ டீச்சரின் மிரட்டலான குரல் அறிவுக்கு பயத்தைக் கொடுத்தது.


‘இல்ல டீச்சர்.. அவன் வந்து.. ‘ என்று அறிவு சொல்ல ஏதோ முயன்றான். அப்போது அலுவலக உதவியாளர் ஒருத்தர் வந்து ‘டீச்சர்.. உங்களை தலைமை ஆசிரியர் உடனே வர சொன்னாரு’ ன்னு கூப்பிட்டாரு.


டீச்சர், அறிவுக்கு ‘பெஞ்ச்’ மேல் நிற்கும் தண்டனை கொடுத்து விட்டு, ‘எல்லாரும் அவங்கவங்க புத்தகம் எடுத்து படிச்சிகிட்டு இருங்க. யாரும் சத்தம் போடக்கூடாது.. தெரிஞ்சிதா..’ன்னு சொல்லிட்டு வெளியே போனாங்க.


‘டீச்சரை தலைமை ஆசிரியர் கூப்பிட்டிருக்காரு. அவரு வந்தா கேட் ஏறி குதிச்சு போனதுக்கு ரொம்பக் கடுமையா தண்டனை குடுத்துருவாரு. அறிவு பாவம்’ அப்பிடீன்னு எல்லாரும் நெனச்சாங்க. அப்பிடி எதுவும் நடக்கக் கூடாதுன்னு எல்லாரும் சாமிய வேண்டிகிட்டாங்க. ‘இதுக்கெல்லாம் காரணம் கிரீஷ்’தான்னு அவன் மேல கோவமா இருந்தாங்க.


வகுப்பே அமைதி ஆயிருச்சி. எல்லாருக்குமே பயமா இருந்துச்சி. கிரீஷ் கூட கொஞ்சம் பயந்துட்டான்.




சுமார் பத்து நிமிஷத்துக்கு அப்புறம் டீச்சர் திரும்பினாங்க. ஆனா அவங்க கூட தலைமை ஆசிரியர் வரலை. ஒரு வேளை ‘என்ன தண்டனை’ அப்பிடீங்கிறதை தலைமை ஆசிரியர், டீச்சரிடம் சொல்லியனுப்பி இருப்பாரோ? இல்ல பின்னாலே வந்துகிட்டிருக்காரோ?


ஆனால் டீச்சர் வந்த உடன் ‘அறிவு.. நீ உட்காரு’ ன்னு சொன்னாங்க. பெஞ்ச்சிலிருந்து இறங்கி அறிவு தன்னோட இருக்கையில் உட்கார்ந்தான்.


‘கிரீஷ் நீ எழுந்து நில்லு’ன்னு சொன்ன உடனே கிரீஷ் எழுந்து நின்னான்.


‘மாணவ மாணவிகளே, இன்றைக்கு நாம் ஒரு நல்ல பாடம் கத்துக்கப் போறோம். அதப் பத்தி இப்பொ உங்களுக்கு விவரமா சொல்றேன்.


அப்பொ அப்பொ கிரீஷ் சில பேரைப் பத்தி என்கிட்ட வந்து சொல்லுவான்.

உதாரணமா ஒரு முறை ‘முகில் எப்பொவுமே காலை டிஃபனை வீட்டுலே சாப்பிட்டு வராம பள்ளிக்கு கொண்டு வந்து சாப்பிடுறான்’ அப்பிடீன்னான். முகிலை விசாரிச்சதுலே அவங்க அம்மா அப்பா ரெண்டு பேருமே காலைலே ஆறு மணிக்கே வேலைக்கு கெளம்பிப் போயிடுறதுனாலே அவன் டிஃபனை இங்கே கொண்டு வந்து ஒன்பது மணிக்கு சாப்பிடறான்னு தெரிஞ்சது.


இன்னொரு முறை ‘ஸ்வஸ்திகா எப்பவுமே தன்னோட வீட்டுப் பாடத்தை காலையிலே பள்ளிக்கு வந்துதான் செய்யிறாள்’னு சொன்னான். அவளை விசாரிச்சப்போ, அவளோட அம்மா ரெண்டு மாசமா ஆஸ்பத்திரிலே படுத்திருக்கறதாகவும், இரவு அவங்க அம்மாவுக்கு துணையா கூட இருக்க அவ ஆஸ்பத்திரிக்குப் போயிடுறதாகவும், அதனாலே வீட்டுப் பாடங்களை காலைலே பள்ளிக்கு வந்து செய்யிறாதாயும் சொன்னா.


அப்புறம் ஒரு முறை பக்கத்து வகுப்பு பையன் எப்பவுமே பிரார்த்தனைக் கூடத்துக்கு வர்றதில்லேன்னு பக்கத்து வகுப்பு ஆசிரியர்கிடே சொல்லி இருக்கான். விசாரிச்சா அந்தப் பையன் காலில் அடிபட்டு ஒரு பெரிய கட்டுப் போட்டிருக்கறதுனாலே அவனாலே நிக்க முடியாது. அதனாலே அவன் பிரார்த்தனைக் கூடத்துக்கு வரலேங்கிறது தெரிஞ்சது.


இதோ இப்பொ இந்த கேட் ஏறி குதிச்ச விஷயத்துலே என்ன நடந்திருக்குன்னா: அறிவும் அகிலும் பாத்ரூம் போகும்போது அகிலுக்கு தலை சுத்தறமாதிரி இருந்திருக்கு. அவனை அறிவு தாங்கி பிடிச்சிருக்கான். அப்பொ அங்கே வந்த தலைமை ஆசிரியர் என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்கார். அகிலைத் தொட்டுப் பார்த்தா அவனுக்கு லேசா காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருந்திருக்கு. விசாரிச்சதுலே அகிலோட வீடு நம்ம பள்ளி காம்பவுண்ட் சுவர ஒட்டின மாதிரி இருக்கற போலீஸ் குடியிருப்பில் இருக்குன்னு தெரிஞ்சது. அதனாலே தலைமை ஆசிரியர் அறிவுகிட்டே ‘நீ அவனை அவங்க வீட்லே கொண்டு போய் விட்டுட்டு வா. நான் உங்க வகுப்பு டீச்சர் கிட்டே விஷயத்தை சொல்லிடுறேன்’ னு சொல்லி இருக்கார். ‘சின்ன கேட் பூட்டி இருக்கு சார்’னு அறிவு சொல்லி இருக்கான். காவலாளி அங்க இல்லாததனாலே, ‘பரவாயில்லே சின்ன கேட் தானே. ஏறிக் குதிச்சுப் போயிரு.’ ன்னு சொல்லி இருக்காரு. அறிவும் அதே மாதிரி செஞ்சிருக்கான். அவன் கேட் ஏறிக் குதிக்கிறதை மட்டும் பார்த்த கிரீஷ் எங்கிட்ட வந்து சொல்லிட்டான்.


‘இதுதான் இந்த விஷயத்துலே நடந்தது’ன்னு டீச்சர் சொல்லி முடிச்சாங்க.


‘கிரீஷ்..’ அப்பிடீன்னு கூப்பிட்டு, ‘நீ மத்தவங்களோட செயல்களைப் பத்தி அரைகுறையாதான் எங்கிட்டே வந்து சொல்லியிருக்கே. முழு விவரமும் தெரியாமெ நீ மத்தவங்க மேலே தப்பு சொல்லக் கூடாது. நீ தப்பா சொன்ன எல்லா விஷயங்களுக்குள்ளேயும் ஒரு ஞாயம் இருந்தது அப்பிடீங்கிறதை இப்பொ நீ தெரிஞ்சிகிட்டிருப்பே. அதனாலே இனிமேல் எதையும் முழுசா தெரிஞ்சிகிட்டு அதுலே ஒரு தப்பு இருந்தாதான் நீ டீச்சர்கிட்டயோ இல்லன்னா பெத்தவங்கிட்டையோ சொல்லணும். இல்லன்னா அந்த விஷயத்தை பெரிசு பண்ணக் கூடாது. புரிஞ்சிதா?’ ன்னு கிரீஷை எச்சரிச்சாங்க.


கிரீஷ் டீச்சரையும் மாணவ-மாணவி களையும் பார்த்து, ‘எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. இனிமேல் இந்த மாதிரி தவறு செய்ய மாட்டேன்’னு சொன்னான். டீச்சர் அவனை உட்கார சொல்லிட்டாங்க.


‘அப்பிடீன்னா யாரு வித்தியாசமா நடந்தாலும் பெரியவங்ககிட்டே சொல்லக் கூடாதா டீச்சர்’ என்று ஒரு மாணவி கேட்டாள்.


‘அப்பிடி இல்லே.. ஒருவரோட வித்தியாசமான செயல்னாலே அவருக்கோ இல்லே மத்தவங்களுக்கோ ஏதாவது ஆபத்து நடக்கும்னு தெரிஞ்சா உடனே அதை அவங்ககிட்டையும் சொல்லணும். பெரியவங்க கவனத்துக்கும் கண்டிப்பா கொண்டு வரணும். அப்பிடியில்லாம எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாத செயல்னா, அதை சொல்ல வேணும்ங்கற அவசியம் இல்லே’ என்று டீச்சர் விளக்கினார்.


‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று ரிஷி கேட்க ஸ்மயா: ‘ஒருவர் செய்யும் செயலை, அது அசாதாரணமானதாக இருந்தால் கூட, முழுவதும் புரிந்து கொள்ளாமல், என்ன ஏது என்று விசாரிக்காமல், ஏதோ அவர் தவறு செய்வதைப் போல் நினைத்து, அதை ஒரு குற்றமாக மற்றவர்களிடம் கூறிக் கொண்டிருக்கக் கூடாது.’

 


குட்டீஸ்! ஸ்மயா சொன்னது சரிதானே! சரி குழந்தைகளே! இந்தக் கதை பற்றிய உங்கள் எண்ணங்களை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.



மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?


அன்புடன்


கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in