DEENADAYALAN N

Children Stories

4.4  

DEENADAYALAN N

Children Stories

நேர்மையும் ஒழுக்கமும்!

நேர்மையும் ஒழுக்கமும்!

3 mins
747




மணியும் சங்கரும் ஆறாம் வகுப்பு முதல் ஒரே வகுப்பில் பயிலும் நண்பர்கள். படிப்பில் முதல் இரண்டு இடத்தையும் எப்போதும் இவர்களே பங்கிட்டுக் கொள்வார்கள். படிப்பில் கடும் போட்டி இருந்தாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள். மற்ற மாணவர்கள் இவர்களிடம் படிப்பில் நெருங்க முடியவில்லை.


A முதல் E வரை ஐந்து பிரிவுகள் இருந்தாலும் ஒட்டு மொத்த மாணவர்களில் இது வரை எவரும் சங்கரையோ மணியையோ படிப்பில் முந்தவில்லை.


பள்ளி இறுதி வகுப்பில் பயிலும் வருடம். இருவரும் அரையாண்டுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஒரு சைக்கிள் கம்பெனியிலிருந்து, பொதுத் தேர்வுக்கு படிக்க மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் அரையாண்டுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒரு சைக்கிள் பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தார்கள்.


எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு படித்தார்கள். தேர்வு எழுதினார்கள். ஆசிரியர்கள், விடைத் தாள்களை திருத்தி மதிப்பெண் இட்டு மாணவர்களிடம் ஒவ்வொரு பாடமாக வழங்கிக் கொண்டிருந்தார்கள். மாணவர்களே எல்லா பாடங்களின் கூட்டுத் தொகையையும் பார்த்து, ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் மணி முதலிடம் பெற்றிருந்ததாக கணித்திருந்தார்கள்.


ஆனால் தரப்பட்டியல் வெளியிடப்பட்ட போது சங்கர் முதலிடம் பெற்றிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில மாணவர்களுக்கு மட்டும், இது எப்படி சாத்தியமாயிற்று என்று குழப்பம் இருந்தது. என்றாலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு சங்கரே சைக்கிளைப் பரிசாகப் பெற்றான்.


ஓரிரு நாள் மகிழ்ச்சியைக் காட்டி வெற்றி பெற்ற பெருமித்ததுடன் சந்தோஷமாக இருந்த சங்கர், ஏனோ போகப் போக உற்சாகமிழந்து காணப்பட்டான். அதைப் பார்த்த மணி அவனை உற்சாகப் படுத்த எவ்வளவோ முயற்சித்தான். அவன் முக வாட்டத்திற்கான காரணத்தைக் கேட்டான். ஆனால் சங்கர் ஒன்றும் சொல்லாமல் மழுப்பி விட்டான்.



இதோ.. இது நடந்து இப்போது ஐம்பது வருடங்களுக்கு மேல் கடந்து விட்டது. நன்கு படித்து வெவ்வேறு இடங்களில் பணி புரிந்தாலும் மணியும் சங்கரும் தொடர்பிலேயே இருந்தார்கள்.


இருவரும் பணி ஓய்வு பெற்றார்கள். இருவருமே அவர்களின் சொந்த ஊரிலேயே குடியேறினார்கள்.


அந்த சமயம் மணியின் பேரனுக்கு பிறந்தநாள் வந்தது. பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடினார்கள். சங்கரும் அவர் மனைவி சந்தியாவும் விழாவிற்கு சென்றார்கள்.

.

சங்கர் சுமார் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சைக்கிளை மணியின் பேரனுக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தார்.


விழா முடிந்து வீட்டிற்கு வந்த சங்கர் வழக்கத்திற்கு மாறாக மிக மிக மகிழ்ச்சியாக காணப்பட்டார்.


சங்கரின் மனைவி சொன்னாள்: ‘என்னங்க இது ஆச்சரியமா இருக்கு! நம்ம கல்யாணம் முடிஞ்சி வாழ்ந்த இவ்வளவு நாள் வாழ்க்கைலே.. உங்களை இவ்வளவு மகிழ்ச்சியாக நான் பார்த்ததே இல்லீங்க. உங்க முகம் அவ்வளவு களையாகவும் உற்சாகமாகவும் அப்பழுக்கில்லாத சந்திரன் போல இருக்குங்க. இந்த அளவுக்கு நீங்க மகிழ்ச்சி அடையறதுக்கு அப்பிடி என்னதான் எனக்குத் தெரியாம அந்த பிறந்த நாள் விழாவுலே நடந்தது!’


முகத்தில் சிறிய சலனத்துடன் மனைவியைப் பார்த்தார் சங்கர். ‘சொல்றேன் சந்தியா. நீ என் ஆத்மார்த்த மனைவி. என் சகல உள்-வெளிகளை அறிஞ்சவ. உன்னிடம் சொல்லாம நான் யாரிடம் சொல்லப் போறேன். சொல்றேன் கேளு..’


பள்ளி இறுதி வகுப்பு அரையாண்டுத் தேர்வில் தான் சைக்கிளைப் பரிசாகப் பெற்ற வரை சொல்லி முடித்தார் சங்கர்.


‘சரி.. சைக்கிளை நீங்க பரிசாக பெற்றது நல்ல விஷயம்தானே..?’ – சந்தியா.


‘இல்ல சந்தியா. அதுலதான் நான் ஒரு மிகப் பெரிய பித்தலாட்டம் பண்ணிட்டேன். மதிப்பெண் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னாடி, திருத்தப் பட்ட விடைத் தாள்களை எங்களுக்கு கொடுத்த உடனே, மாணவர்களாகிய நாங்களே மதிப்பெண்களைக் கூட்டிப் போட்டோம். அதில் நான் ஒரு மதிப்பெண்ணில் இரண்டாம் இடம் பெற்று சைக்கிளை இழக்கப் போகிறேன் என்று தெரிந்தது.


அதே சமயம் என் கணித விடைத்தாளை ஆராய்ந்த போது, இரண்டு மதிப்பெண்களுக்கான ஒரு கணக்கை நான் தவறுதலாக விட்டிருந்தது தெரிந்தது.


அது ஒரு ‘ஒற்றை வார்த்தையில் விடை’ அளிக்கும் கணக்கு. அந்தக் கணக்கின் கேள்வி எண் ஐந்து. கேள்வி எண் நான்கை உடைய கணக்கின் விடைக்குக் கீழே காலி இடம் இருந்தது. அதில் இரண்டு வரிகள் எழுதுவதற்கான இடமும் இருந்தது. நான் எந்தப் பேனாவில் தேர்வு எழுதினேனோ, அந்தப் பேனாவும் என்னிடம் இருந்தது.


ஏதோ ஒரு உந்துதலில் அந்த இடத்தில் 5 என்று எண்ணிட்டு அந்த கணக்கிற்கிற்கான ஒற்றை வார்த்தை விடையையும் எழுதி விட்டேன். மதியம் கணித ஆசிரியரிடம் எடுத்துப் போய் திருத்தாமல் விட்டு விட்டதாக காட்டினேன். என் மீது மிகுந்த நம்பிக்கையும் நல்ல அபிப்பிராயமும் வைத்திருந்த கணித ஆசிரியர், உடனடியாக எனக்கு மதிப்பெண் கொடுத்து அவரது குறிப்பேட்டிலும் அதை குறித்துக் கொண்டு அனுப்பினார்.’


‘இதன் காரணமாகவே என்னால் முதலிடம் பெற்று சைக்கிளைப் பரிசாக பெற முடிந்தது.’


‘ஓரிரு நாள் பரிசு பெற்ற சைக்கிளை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், அதன் பின் மனசாட்சி உறுத்த ஆரம்பித்தது. மகிழ்ச்சி மறைந்து போனது. உற்சாகம் வடிந்து போனது. மன உளைச்சல்! என் நண்பன் மணி, அப்போதே என் முக வாட்டத்தை கவனித்து காரணமும் கேட்டான். ஆனால் நான் என்ன சொல்ல முடியும்?’


‘ஞாயமாக என் நண்பனுக்குப் போக வேண்டிய சைக்கிள் அது. கேவலம் ஒரு அற்ப சைக்கிளுக்காக நேர்மையும் ஒழுக்கமும் தவறினேன். ஆனால் அந்த சமயத்தில் ஏனோ எனக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை. இந்த உறுத்தல் இவ்வளவு காலமும் என் மனத்தில் தங்கியிருந்தது. எனவேதான் என் நண்பன் மணியின் பேரனுக்கு பிறந்த நாள் பரிசை ஒரு சைக்கிளாகவே அளித்தேன். இப்போது ஓரளவுக்கு மனம் நிம்மதியாக இருக்கிறது. நேர்மையும் ஒழுக்கமும் தவறிய அன்றைய என் செயலை கடவுள் மன்னிப்பார் என்று நம்புகிறேன்.’


‘நிச்சயமாக..!’ சந்தியாவின் மெல்லிய குரல் கனிவாக ஒலித்தது.


கடவுள் மன்னிப்பார்தானே!


(கோவை என்.தீனதயாளன்)

என். தீனதயாளன், C-323, நித்யா கார்டன்ஸ் அபார்ட்மென்ட்ஸ், சங்கரலிங்கனார் ரோடு, மணியகாரன் பாளையம்,கோயமுத்தூர்-641006; தமிழ்நாடு

கைபேசி: 99942 91880; 79041 78038       மின்னஞ்சல்:        deenajamuna@yahoo.co.in




Rate this content
Log in