Athila Nabin

Children Stories Drama Classics

5.0  

Athila Nabin

Children Stories Drama Classics

அற்றார் அழிபசி தீர்த்தல்

அற்றார் அழிபசி தீர்த்தல்

3 mins
434


குறள் # 226


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.


இயல்: இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue


அதிகாரம்: ஈகை (Eekai) – Giving


விளக்கம்:

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.


Translation:

Let man relieve the wasting hunger men endure;

For treasure gained thus finds he treasure-house secure.


Explanation:

The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth


Transliteration:

Atraar Azhipasi Theerththal Aqdhoruvan

Petraan Porulvaip Puzhi


விஜயதேசத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பசுபதி என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவன் ஏழை என்றாலும் நேர்மையாய் உழைப்பவன். தங்கம் போன்ற மனது உடையவன். தான் எந்த கஷ்டத்தில் இருந்தாலும் தன்னால் முடிந்தவரை பிறருக்கு உதவுபவன். தினமும் சம்பாதித்த காசில் வீட்டு செலவிற்கு போக மீதமுள்ளதை பசியால் வாடும் ஏழைகளுக்கு கொடுத்து விடுவான். அவன் மனைவி பணம் எங்கே என்று கேட்கும் போதெல்லாம் நான் அதை சேமித்து வைத்திருக்கிறேன் என்று கூறுவான்.


 


அந்நாட்டை தேவேந்திரன் என்ற அரசன் நல்ல முறையில் ஆண்டு வந்தான். ஆனால் அவர் மகனான இளவரசன் தேவமித்ரன் மிகவும் திமிரும் ஆணவமும் அகம்பாவமும் கொண்டு இருந்தான். அவன் குருவையும் சக இளவரசர்களுக்கு கூட மதிப்பதில்லை. ஏழைகளை கண்டாலே அவனுக்கு அருவருப்பாக இருக்கும். இளவரசனின் குணத்தை அறிந்து அரசர் மிகவும் வருத்தப்பட்டார். அந்நிலையில் முனிவர் ஒருவர் அவன் நாட்டிற்கு வந்திருப்பதை அறிந்து, இளவரசர் முனிவரிடம் ஆசி பெற்றால் திருந்திவிடுவான் என்று நம்பினார்.


அரசர் தன் மகனை அழைத்து “தேவ மித்ரா, நம் நாட்டிற்கு முனிவர் ஒருவர் வருகை தந்துள்ளார். அவரிடம் சென்று ஆசி வாங்கி வா மகனே” என்று கூறி அனுப்பினார். எரிச்சலுடன் சென்ற இளவரசன் முனிவர் தன்னை காணாது தவத்தில் கண்ணை மூடி இருப்பதை கண்டு கோபமுற்றான். அருகில் கிடந்த சிறு கம்பினை எடுத்து “முனிவரே! இளவரசன் வந்து நிற்பது கூட தெரியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்” என்று அவரை தட்டினான். தன் தவம் கலைந்ததால் கடும் சினம் கொண்டார் முனிவர். அவர் இளவரசனை பார்த்த உடனே அவன் குணம் புரிந்து விட்டது. “யாரையும் மதிக்காத, இரக்கமற்ற இளவரசனே.. நீ உன் மனம் போல் கல்லாய் மாறுவாய்” என்று சபித்து விட்டார். அடுத்த நொடியே இளவரசன் கற்சிலை ஆனான். அவனுக்கு உணர்வு இருந்தது ஆனால் உணர்ச்சி இல்லை.


நடந்ததை கேள்விப்பட்ட அரசன் முனிவரிடம் ஓடோடி வந்து கெஞ்சி கதறினார். “எனக்காக என் மகனை மன்னியுங்கள். தயவுசெய்து சாப விமோசனம் கொடுங்கள்” என்று அழுது வேண்டினார். அழும் அரசனை கண்டு இரக்கம் கொண்ட முனிவர் தன் கையிலுள்ள கலசத்தை அரசரிடம் கொடுத்து “உன் நாட்டில் உள்ள மிகப் பெரிய செல்வந்தர் இந்தக் கலசத்தில் உள்ள தீர்த்தத்தில் ஒரு துளியை இளவரசன் மீது தெளித்தால் அவன் பழைய நிலைக்கு திரும்புவான்” என்று கூறினார். அமைச்சர்கள் கூறினர் “மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அரசே, இந்த நாட்டிலேயே மிகப் பெரும் செல்வந்தர் தாங்கள்தான். ஆகவே நீங்கள் முதலில் தீர்த்தத்தை தெளியுங்கள்” என்று கூறினர். தேவேந்திரனுக்கும் சரி என்று தீர்த்தத்தை தெளித்தார். ஆனால் இளவரசனுக்கு ஒன்றுமே நடக்கவில்லை.


பின்னர் அமைச்சர் ஒவ்வொருவராக முயற்சித்தனர். இளவரசர் மாறவே இல்லை. வீரர்களை அனுப்பி நாட்டிலுள்ள பணக்காரர்களை அழைத்து வரச் சொன்னார். ஆனால் யார் தீர்த்தம் தெளித்தும் இளவரசன் மாறவே இல்லை. நாளுக்கு நாள் தீர்த்தம் குறைந்து கொண்டே போனது. எந்த அறிஞர்களிடம் கேட்டாலும் பதில் கிடைக்கவில்லை. இனிமேல் வீரர்களை நம்பி பயனில்லை; தானே சென்று பணக்காரரை கண்டுபிடிக்கவேண்டும் என்று கிளம்பிவிட்டார் அரசர். ஒவ்வொரு ஊராக சுற்றியும் அவர் நினைத்தபடி யாரும் கிடைக்கவில்லை. கடைசியாக பசுபதி இருக்கும் கிராமத்திற்கு வந்து அமர்ந்தார்.


அன்று பசுபதிக்கு போதாத நேரம் போலும். அவன் பானை கொண்டு சென்ற வண்டி சறுக்கி விழுந்து பானைகள் அனைத்தும் உடைந்து விட்டன. உடையாமல் இருந்த ஒன்றிரண்டு பானைகளை விற்று 2 காசுகள் சம்பாதித்தான். அதைக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் அரசனைக் கண்டான். அரசரோ மகன் நிலைமையை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு கன்னங்கள் சுருங்கி தாடி நீளமாய் வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தார். அரசர் என்று அறியாத பசுபதி ஏதோ முதியவர் இருக்கிறார் என்று நினைத்து ஒரு காசுக்கு சாப்பாடு வாங்கி வந்தான்.


பிறகு அரசரிடம் “ஐயா, தாங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தயவுசெய்து இந்த உணவை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்று என்னிடம் இருந்த பணத்தில் இவ்வளவுதான் உங்களுக்கு வாங்க முடிந்தது. தவறாக எண்ணாதீர்கள்” இன்று மிகவும் பவ்வியமாக கூறினான். அதைக் கேட்ட அரசர் நெகிழ்ந்து போனார். நாம் பசுபதியை அழைத்து தீர்த்தம் தெளித்து பார்க்கலாம் என்று எண்ணினார். பசுபதியிடம் தான்தான் அரசர் என்றும் இளவரசருக்கு நேர்ந்த சாபத்தை பற்றியும் கூறினார். பசுபதி உடனே அரண்மனைக்கு வந்து இளவரசன் சாபம் போக்க முயற்சி செய்யுமாறு அழைத்தார்.


உடனே புறப்பட்டு இருவரும் அரண்மனையை அடைந்தனர். பசுபதி தீர்த்தத்தை கல்லாய் நிற்கும் இளவரசன் மேல் தெளித்தார். என்ன ஒரு அதிசயம்! உடனே இளவரசன் பழைய நிலைமைக்கு மாறினான். அனைவரும் ஆச்சரியம் உற்றனர். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த அரசர் “பசுபதி, உனக்கு என்ன வேண்டும் கேள். பொற்காசுகளா, வைர வைடூரியங்களா, பவளங்களா, ரத்தினங்களா? நீ செய்த உதவிக்கு என்ன கேட்டாலும் தருவேன்” என்றார். அதைக் கேட்டு பலமாக சிரித்த பசுபதி “அரசே, உங்களுக்கே தெரியும் இந்த நாட்டில் இப்பொழுது நான் தான் மிகப் பெரிய பணக்காரன் என்று. நீங்கள் கூறிய அனைத்து செல்வங்களும் உள்ள தங்களாலும் பல செல்வந்தர்களாலும் இளவரசன் சாபம் போக்க முடியவில்லை. அதனால் எனக்கு எதுவும் வேண்டாம்” என்று கூறிவிட்டு அரசனையும் அவையோரையும் வணங்கிவிட்டு கிளம்பினான். அரசன் பசுபதியை வியந்தார்.


நடந்த அனைத்தையும் பார்த்த இளவரசர் தான் இத்தனை ஆண்டு காலமாக ஆணவத்துடன் வாழ்ந்ததை எண்ணி வருந்தினான். “அப்பா, என்னை மன்னியுங்கள். நான் மிக மோசமாக நடந்து கொண்டேன். இனிமேல் என்னை திருத்திக்கொண்டு தங்களைப் போல் ஒரு சிறந்த ஆட்சியாளராக வாழ்வேன். நான் உடனே சென்று முனிவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறிக் கிளம்பினான்.


குழந்தைகளா.. என்ன தெரிந்து கொண்டீர்கள் இக்கதையிலிருந்து? நமக்குத் தேவையானது போக மிச்சத்தில் ஒரு பங்கை எளியோருக்கு தேவைப்படுபவர்களுக்கு தானமாக கொடுத்து உதவ வேண்டும். அதுவே நாம் செய்யும் சிறந்த சேமிப்பு. கடவுள் விரும்புவதும் அதுவே!


Rate this content
Log in