DEENADAYALAN N

Children Stories Inspirational Children

5.0  

DEENADAYALAN N

Children Stories Inspirational Children

குறுக்கு வழியும் நேர்மை இன்மையும்!

குறுக்கு வழியும் நேர்மை இன்மையும்!

4 mins
362


கதை என் கையில்! முடிவு குட்டிஸ் கையில்! - 5

குறுக்கு வழியும் நேர்மை இன்மையும்!

(கோவை என். தீனதயாளன்)


ஹை விவு, அவி, ரிஷி, ரோஹன், நித்தின், கிட்டி, லிசி, ஜரீ, ரஹீம் மற்றும் மை டியர் குட்டீஸ்!


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!



‘நான் சின்ன வயசுலே படிச்சிகிட்டிருந்தப்போ நடந்த ஒரு சம்பவம் இது. எங்க வகுப்புலே மூனு மாசத்துக்கு ஒரு தடவை புது வகுப்பு ‘லீடரை’ தேர்ந்தெடுப்பாங்க. வகுப்புப் பசங்க எல்லாம் சேர்ந்து ரகசிய ஓட்டு போட்டு புது லீடரைத் தேர்ந்தெடுப்பாங்க. அந்த மூனு மாசமும் வகுப்பு ஆசிரியர் அந்த லீடர்கிட்டேதான் எல்லா பொறுப்பும் கொடுப்பாங்க.


காலைலே வந்த உடனே சில மாணவர்களை வெச்சி கரும்பலகையை சுத்தப் படுத்தறது. ஆசிரியர்-மாணவர்கள் இருக்கைகளை சுத்தப் படுத்தறது, ஆசிரியர் இல்லாதப்போ வகுப்பை அமைதியா பார்த்துக்கறது, அடுத்த பாட வகுப்பு ஆசிரியர் வர்றதுக்குள்ளே யாராவது குறும்பு செஞ்சி சத்தம் போட்டா அவங்க பேரை ஆசிரியர்கிட்டே தெரிவிக்கிறது, ஆபீஸ் ரூமுக்கு போய் கட்டுரை நோட்டுகளை எடுத்துட்டு வர்றது, விளையாட்டு மைதானத்துக்கு போகும்போது எல்லோரையும் வரிசையா கூட்டிட்டுப் போறது அப்பிடீன்னு எல்லாத்துக்குமே அந்த லீடர்தான் பொறுப்பு. எல்லா மாணவர்களுக்கும் அந்த லீடர் மேல் மதிப்பும் மரியாதையும் பயமும் இருக்கும். அதனாலே நிறைய மாணவர்கள் லீடருக்கு ஒத்துழைப்பு குடுத்து அமைதியா இருப்பாங்க. ஆனா சில பேரு அடங்க மாட்டாங்க.


பெரும்பாலும் நல்லா படிக்கிற நல்ல பசங்களைத்தான் வகுப்பு மாணவர்கள் லீடரா தேர்ந்தெடுப்பாங்க. சில சமயம் ஒரே மாணவனே இரண்டு முறை தேர்ந்தெடுக்கப் படுறதும் உண்டு. ஒரு சமயம் கணேஷு அப்பிடீன்னு ஒரு பையன் லீடரா இருந்தான். வகுப்பு நல்லாத்தான் போய்கிட்டிருந்தது.



அப்போ எங்க வகுப்புலே கடோத் அப்பிடீன்னு ஒரு பையன் இருந்தான். அவன் வசதியான பையன். தினமும் வீட்டிலேயிருந்து பணம் கொண்டு வருவான். அதை வெச்சு நெறைய பசங்களுக்கு பள்ளிக்கு முன்னாலே இருந்த அண்ணாச்சி கடையிலே இருந்து திண்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பான். அதனாலே நெறையா பசங்க அவன் கூடவே சுத்துவாங்க. அவன் சொன்னதை எல்லாம் கேப்பாங்க. அவன் சொன்ன படியெல்லாம் செய்வாங்க. அதனாலே அவனுக்கு ரொம்ப கர்வமா கூட இருந்தது.



ஒரு முறை ஒரு தமிழ் ஆசிரியர் வரலே. மாற்று ஆசிரியரும் போடப்படலே. அதனாலே தமிழ் பிரிவு வேளையில் லீடர் கணேஷுவே கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அப்போது கடோத் அடிக்கடி பேசுவதும், குறும்பு செய்வதும், சில மாணவர்களிடம் வம்பு செய்வதுமாய் இருந்தான். கணேஷு எப்போதுமே உடனடியாக பெயர்களை குறித்துக் கொள்ளாமல், ஒழுக்கமாக இருக்க சொல்லி ஓரிரு முறை எச்சரித்து வாய்ப்பளிப்பான். அதற்கு அப்புறமும் ஒழுங்கின்றி நடந்து கொண்டால் தான் அவன் பெயரை குறித்து வைப்பான்.


கடோத்தையும் இரு முறை எச்சரித்தான். அப்புறமும் அவன் அடங்காததால பெயரைக் குறிச்சி வெச்சி ஆசிரியர் வந்தப்புறம் தெரிவிச்சான். ஆசிரியரும் கடோத்தை கூப்பிட்டு அவனுக்கு தண்டனை கொடுத்தாரு. அதுக்கப்புறம் கடோத், கணேஷை எப்படியாவது பழி வாங்கணுமின்னு என்று துடிச்சான்.


அடுத்த தடவை தானே லீடராக வரணுமின்னு நெனச்சான். அதுக்கு ஒரு திட்டம் போட்டான். அன்றிலிருந்து நெறைய பணம் கொண்டு வந்து பல மாணவர்களுக்கும் செலவு பண்ணினான். ஒரு சில மாணவர்கள் தவிர, மத்தவங்க கடோத்தின் திட்டத்துக்கு பலியானாங்க.


நெனச்சது போலவே அடுத்த முறை கடோத்தே லீடரும் ஆனான்.


அதுக்கப்புறம் அவன் கணேஷுவை அடிக்கடி ஆசிரியரிடம் மாட்ட வைத்தான். முதல் தடவை ‘இவ்வளவு நல்ல பையன், இப்படி குறும்பு செய்கிறானே’ என்று வகுப்பு ஆசிரியர் சற்று கடுமையாகவே தண்டனை கொடுத்தார். கணேஷுவுக்கு மிகவும் அவமானமாகவும் வருத்தமாகவும் இருந்தது. அவன் வீட்டில் வந்து தன் அம்மாவிடம் இதை சொன்னான். ‘கவலைப் படாதே கணேஷு கண்ணா.. எந்த அநியாயமும் நிலைச்சு நிற்காது. தவறு செஞ்சவங்களுக்கு கடவுள் பாடம் கத்துக் குடுப்பார்.’ என தைரியம் சொல்லி பள்ளிக்கு அனுப்பி வெச்சாங்க.


அதிகாரம் கைக்கு வந்த உடனே கடோத்திற்கு தலைக் கணம் வந்துருச்சி. தன்னை ஆதரிச்ச மாணவர்கள்கிட்ட கூட தனிப்பட்ட விருப்பு வெறுப்பை வளத்துகிட்டு, அதிகாரத்தைக் காட்ட ஆரம்பிச்சான். அதனாலே அவனை ஆதரிச்ச பசங்களும் கூட ‘திண்பண்டங்களுக்கு ஆசைப்பட்டு தகுதி இல்லாத ஒருத்தனை லீடர் ஆக்கிட்டோமே’ன்னு ரொம்பவும் வருத்தப்பட்டாங்க. செஞ்ச தப்பை எப்படி திருத்திக்கிறதுன்னு யோசிச்சாங்க.


அவன் லீடர் ஆனதுக்கப்புறம் திண்பண்டங்கள் வாங்கித் தருவதையும் நிறுத்திட்டான். தன்னை லீடர் ஆக்கணும் அப்பிடீங்கறதுக்காகத்தான் இப்படி செஞ்சிருக்கான்னும் புரிஞ்சது. இப்படியே ஒரு மாத காலம் போயிருச்சி.


‘இன்னும் இரண்டு மாதங்கள் இதைப் பொறுத்துகிட்டுத்தான் இருக்கணுமா?’



‘சரி! குட்டீஸ்.. இந்த இடத்துலே கதையை நிறுத்தறேன். குறுக்கு வழிலே லீடர் ஆகிட்டு, தலை கணத்தோடவும் ஆணவத்தோடவும் ஆடிகிட்டிருக்கும் ‘கடோத்’தின் ஆட்டத்தை, அதிகாராத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வர்றது? அவனை எப்படி உணர வைக்கிறது? - உங்கள்லே யாராவது யோசனை பண்ணி, மேலும் தொடர்ந்து சொல்லி இந்தக் கதையை முடீங்க பாக்கலாம்!’ என்றேன்.


‘நான் சொல்றேன்’னு முன் வந்த அவ்யுக்த் தொடர்ந்தான்:

கடோத் குடுக்கிற ‘தவறு செய்யும் மாணவர்க’ளின் பட்டியல்லே கணேஷு மாதிரி ஒரு சில பசங்களோட பேரு மட்டும் அடிக்கடி வருவதை ஆசிரியர் கவனிச்சாரு. ஆசிரியருக்கு நல்லா தெரியும். கணேஷ் ரொம்ப பொறுப்பான பையன். இப்பிடி அவன் நடந்துக்கறதுக்கு வாய்ப்பே இல்லை. அது மட்டும் இல்லாமே குறிப்பிட்ட சில பசங்க பேரு எப்பவுமே இந்த பட்டியலில் வரலே. அதுவும் அவருக்கு சந்தேகத்தை உண்டாக்கிச்சி. அதனாலே அவரு ஒரு வகுப்புக்கு போகலே. காலியா இருந்த பக்கத்து வகுப்பிலிருந்து நடக்கறதை கவனிச்சார். அதில் கடோத் நேர்மையில்லாம நடந்துக்கறது புரிஞ்சது.


உடனடியா வகுப்புக்குப் போயி கடோத்தைக் கூப்பிட்டு விசாரிச்சாரு. நிறைய பசங்க கடோத் பாரபட்சமா நடந்துக்கறதை சொன்னாங்க.


‘கடோத்.. ஒரு பொறுப்புக்கு வருவதற்கு நீ முயற்சி பண்ணது தப்பில்லை. ஆனா அதுக்காக நீ தேர்ந்தெடுத்த வழிதான் தப்பானது. பல பசங்க உங்கிட்ட இருந்து ஆதாயம் அடைஞ்சி உன் வலைக்குள் விழுந்துட்டாங்க. ஆனா ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய உயரிய பண்புகள் உங்கிட்ட இல்லாததாலே, அந்த பசங்களே உனக்கு எதிராக திரும்பிட்டாங்க. நீ சீக்கிரமே மாட்டிகிட்டே. இப்போ சொல்லு. இன்னும் இந்தப் பதவிலே இருக்க நீ ஆசைப்படுறயா?’ தலையை குனிந்திருந்த கடோத் மெதுவாக இடம் வலமாக தலையை ஆட்டினான்.


‘சாரும் பசங்களும் என்னை மன்னிச்சிருங்க. அடுத்த முறை நியாயமாவும் நேர்மையாவும் இந்தப் பொறுப்புக்கு வந்து நீங்க எல்லாரும் ஆச்சரியப்படுற மாதிரி கடைமையைச் செய்வேன். இது உறுதி’ என்றான்.


ஆசிரியர் உட்பட எல்லாரும் கைதட்டி கடோத்தைப் பாராட்டினாங்க.!

 

‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று ரோஹன் கேட்க, நித்தின் சொன்னான்: ‘பணத்தால் நேர்மையை வாங்க முடியாதுங்கறதும், குறுக்கு வழிலே அடையும் பதவி நிலைக்காதுங்கறதும், ‘தலைமைப் பண்பு இல்லாத ஒருத்தர் தலைவரா நீடிக்க முடியாது அப்பிடீங்கறதும்’ இந்தக் கதையோட ன் நீதிகள் ஆகும்.


குட்டீஸ்! நித்தின் சொன்னது சரிதானே. குழந்தைகளே இக்கதை பற்றிய உங்கள் எண்ணங்களை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.



மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?


அன்புடன்


கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in