DEENADAYALAN N

Children Stories Children

5  

DEENADAYALAN N

Children Stories Children

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

2 mins
420



 

 

ஹை விவு, அவி, ரிஷி, நித்தின், ரோஹன் மற்றும் மை டியர் குட்டீஸ்!


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!


ராமுவும் சோமுவும் ஒரு நாள் கடை வீதிக்கு போனாங்க! அப்பொ அங்க ஒரு கடையிலே கும்பலா நின்னுகிட்டிருந்தாங்க! என்னான்னு பார்த்தா அவங்க நண்பன் கிச்சாமி நூறு ரூபாய் பணத்த தொலச்சிட்டானாமா! அந்த கடைக்கு முன்னாடி எல்லாரும் தேடிகிட்டிருந்தாங்க!


அப்பொ அந்த கூட்டத்துலே இருந்து சங்கர் வெளியே வந்தான்.


‘டேய் சங்கர்.. எங்கடா இந்த பக்கம்..?’ என ராமு கேட்டான்.


‘ஒன்னுமில்லேடா சும்மாதான் வந்தேன்’ னு சொல்லிட்டு சங்கர் போயிட்டான்.


கடைத்தெருவுலே வேணும்ங்கறதை வாங்கிட்டு ராமுவும் சோமுவும் வீட்டுக்கு திரும்பி வந்துகிட்டு இருந்தாங்க. மைதானத்துலே சங்கர் நின்னு பட்டம் பறக்க விட்டுகிட்டு இருந்தான். அவன் விட்டுகிட்டு இருந்த பட்டம் ரொம்பப் பெருசா இருந்துச்சி. அவன் கையிலே இருந்த நூல்கண்டும் ரொம்ப பெருசா இருந்தது. ரெண்டும் வாங்கனுமின்னா நூறு ரூபாயாவது வேணும். சங்கருக்கு ஏது அவ்வளவு பணம்ன்னு ராமுவும் சோமுவும் ஆச்சரியப்பட்டாங்க!



‘டேய் சங்கர் இவ்வளவு பெரிய பட்டமும் நூற்கண்டும் வாங்க ஏதுடா பணம்?’ என ராமு கேட்டே விட்டான்.


‘எங்க பாட்டி கொடுத்தாங்கடா..’ என்று சங்கர் சொன்னான்.


ஆனால் சோமு அதை நம்பவில்லை. ஏனெனில், அவன் பாட்டி ஊருக்குப் போய் பத்து நாள் இருக்கும்.


அப்போது பார்த்து நூறு ரூபாய் பணத்தை தொலைத்த கிச்சாமி வந்து கொண்டிருந்தான். அவனிடம் சோமுவும் ராமுவும் ‘டேய் கீழே விழுந்த உன் பணத்தை சங்கர்தான்டா எடுத்திருக்கான்.. பாரு அந்த பணத்துலேதான் நூலும் பட்டமும் வாங்கி விட்டுகிட்டிருக்கான்’ என்று கூறினர்.


சோகத்தில் இருந்த கிச்சாமி சங்கரிடத்தில் சண்டைக்குப் போனான். ஆனால் சங்கரோ, தான் கிச்சாமியின் பணத்தை எடுக்கவேயில்லை என்று சொன்னான்.


அதை ஏற்காத ராமு சோமு கிச்சாமி ஆகியோர் ‘இதைப் பற்றி எல்லோரிடமும் சொல்லலாம் வாங்க’ன்னு கிளம்புனாங்க!



சரி! இப்பொ யாரு இந்த கதையை முடிக்கப் போறீங்க?


‘நானு’ என்று விவு முன் வந்து கதையைத் தொடர்ந்தான்:

அப்பிடி அவங்க கெளம்ப ஆரம்பிச்சப்போ நித்தின் ஓடி வந்தான். ‘டேய் கிச்சாமி.. இந்தா உன் நூறு ரூபாய். கடைக்கு முன்னாடி கிடந்த இந்த பணத்தை யாரோ சாமான் வாங்க வந்த ஒருத்தரு பார்த்து, கடைக்காரர்கிட்டே எடுத்து குடுத்தாராமா. கடைக்காரர் அதை உங்கிட்டே குடுக்க சொல்லி எங்கிட்டே குடுத்தாரு!’ என்று கூறி நித்தின் பணத்தை கிச்சாமியிடம் கொடுத்ததும், ராமு சோமு கிச்சாமி மூவரும் வெட்கப்பட்டு தலை குனிந்தனர். இது போல் இனி மேல் அவசரப்பட்டு யாரையும் தீயவர்களாக கருதக் கூடாது என்பதை ராமு சோமு கிச்சாமி மூவரும் உணர்ந்தனர். சங்கரிடம் மன்னிப்பு கேட்டனர்.



‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று ரிஷி கேட்க:

‘கண்ணால் காண்பதும் பொய் – காதால் கேட்பதும் பொய் – தீர விசாரிப்பதே மெய்’ – என அவி முடித்து வைத்தான்.


குட்டீஸ்! இந்தக் கதையை வேறு விதமாகவும் முடிக்கலாம்! உங்களில் யாராவது உங்கள் கற்பனைக் குதிரையைத்தட்டி விட்டு, முயன்று, வேறு முடிவுகளை எழுதி, அதை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.


மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?


அன்புடன்


கோவை

என். தீனதயாளன்

 

 

 

 


Rate this content
Log in