DEENADAYALAN N

Children Stories Inspirational Children

5  

DEENADAYALAN N

Children Stories Inspirational Children

எவ்வுயிரும் தம்முயிர் போல்

எவ்வுயிரும் தம்முயிர் போல்

4 mins
383



கதை சொல்வதில் நாங்கள் ஒரு முறை வைத்திருக்கிறோம். கதையை நான் சொல்லுவேன். கதையின் முடிவை, கதை கேட்க வந்திருக்கும் குட்டீஸில் ஒருவர் சொல்லுவார்! இதோ தொடர்கிறேன்…


ஹை விவு, அவி, ரிஷி மற்றும் மை டியர் குட்டீஸ்! அடடே.. இன்றைக்கு இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்களே.. மிகவும் நல்லது..


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!


‘அன்புக் குழந்தைகளே.. உங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷமான செய்தி. அடுத்த வாரம் நாம எல்லாரும் ஒரு நாள் சுற்றுலா போறோம். எல்லாரும் தயார் ஆகிக்கோங்க..’ என்ற ஆசிரியையின் அறிவிப்புக் கேட்டு, குழந்தைகள் ‘ஹோ…’ வென்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாங்க.


‘எங்கே போறோம் மிஸ்’ என்று எல்லோரும் ஒருமித்த குரலில் கேட்க, ‘நாட்ராயன் ஃபாரஸ்ட்’ என்று ஆசிரியை உரக்க அறிவிச்சாங்க.


சுற்றுலான்னாலே உற்சாகந்தானே! குழந்தைகளின் ஆரவாரம் எங்கும் பரவிடுச்சி. அன்று பள்ளி முடிஞ்சதும் குழந்தைகள் கூடிக்கூடி பேசினாங்க. ராமுவும் ரங்கனும் நெருங்கிய நண்பர்கள் வேற. அவங்க ரெண்டு பேரும் நிறைய பேசினாங்க.


சுற்றுலா தினம் பக்கமாய் வர வர குழந்தைகள் பல விதமான ஏற்பாடுகளை செஞ்சிகிட்டிருந்தாங்க. ஒவ்வொருத்தரும் ஏழு நாள்.. ஆறு நாள்.. அப்படீன்னு ‘கௌண்ட் டௌன்’ செஞ்சிகிட்டிருந்தாங்க.


‘டேய் டூருக்கு வரும்போது உனக்கு ஆச்சரியத்தைத் தருகிற மாதிரி நான் ஒன்னு கொண்டு வரப்போறேன்.. பார்த்தா நீ அப்பிடியே அசந்திடுவே...’ என்று ரங்கன் சொல்ல ராமுவிற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.



ராமுவிற்கு அளவில்லா ஆனந்தம். எத்தனை மணிக்கு எழுந்து தயாராவது, என்ன உடை உடுத்துவது, என்ன உணவு எடுத்துப் போவது, என்று தன் அம்மாவிடம் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்து விட்டான்.


‘ரங்கன் ஏதோ ஒன்னு கொண்டு வரப் போறேன்னு சொன்னானேம்மா.. அது என்னவா இருக்கும்மா’ ன்னு அதையும் அம்மாகிட்டே கேட்டுகிட்டே இருந்தான். ‘சின்ன கேமராவா இருக்கும்.. இல்லன்னா.. ‘கூலிங்க்ளாஸா’ இருக்கும்’னு அவங்களும் ஏதேதோ யோசிச்சி சொல்லிகிட்டிருந்தாங்க.


கடைசியா அந்த டூர் போகிற நாளும் வந்தது. காலை ஐந்து மணிக்கெல்லாம் குழந்தைகள் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டனர். ‘ஹோ.. ஹோ.. ஹோ..’ என்று ஆரவாரத்துடன் பேருந்து புறப்பட்டது.


ரங்கனும் ராமுவும் பக்கம் பக்கம் உட்கார்ந்து கொண்டனர். ஐந்து நிமிடம் ஆகி இருக்கும். பேருந்து உக்கடம் தாண்டி எட்டிமடை பாதையில் போய்க் கொண்டிருந்தது.


ராமு ஐந்தாவது முறையாக ரங்கனிடம் கேட்டான். ‘டேய்.. ஆச்சரியமா ஒன்னு கொண்டு வர்றேன்னு சொன்னையேடா.. என்னடா அது.. காட்டுடா..’


ஒரு வழியாக ரங்கன் அதை எடுத்து ரகசியமாக ராமுவிடம் காண்பித்தான்.


‘உண்டிவில்!’


‘உண்டிவில்’ என்பது – அதில் ஒரு கல் போன்ற கடினமான பொருளை வைத்து - காடுகளில் தோட்டங்களில் ஓனான், ஒடக்கான், பறவைகள் போன்றவற்றை வேட்டையாட சிலர் பயன் படுத்துவர். ஏனோ ஒரு சில குழந்தைகளும் அதை வைத்து விளையாடுவதைப் பார்க்க முடிகிறது.


ராமுவின் உற்சாகம் அப்படியே வடிந்து விட்டது. ‘இதை எதுக்குடா கொண்டு வந்தே?’ என வருத்தமாக கேட்டான்.


‘டேய் நம்ம போறது காடு. அங்கே நெறைய ஓனான், ஒடக்கான், பறவைகள் எல்லாம் இருக்கும்டா.. நாம் உண்டிவில் வைத்து அவைகளை அடிக்கலாம்டா’ என்றான் உற்சாகமாக.


‘டேய்.. வேண்டாண்டா.. அதுக எல்லாம் பாவம்டா.. ‘ – ராமு


‘போடா.. இதெ வெச்சி வெளையாடுனா ஜாலியா இருக்கும்டா’ – ரங்கன்


‘நமக்கு ஜாலியா இருக்கும்.. ஆனா அந்த உசுருகளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா..’


‘போடா லூஸு.. இதெல்லாம் ஒரு வெளையாட்டுடா.. ‘ ரங்கன்


‘வேண்டாண்டா.. ப்ளீஸ்.. அதைத் தூக்கிப் போட்டுர்றா..’ ராமு


ரங்கன் கேக்கலே. ‘ஆசிரியைகிட்டே சொன்னா கண்டிப்பா ரங்கனெ பயங்கரமா திட்டுவாங்க.. அப்புறம் ரங்கன் என் கூட பேச மாட்டான்“ தயங்கினான் ராமு.


ராமுவோட டூர் உற்சாகமே போயிருச்சி..



அதற்குள் ‘நாட்ராயன் ஃபாரஸ்ட்’ வந்து விட்டது. அவரவர் அங்கங்கு கூடி மரமேறுதல், நீரோடையில் கால் நனைத்தல், புளியங்காய் அடித்து தின்னல் என்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


ராமுவால் எதிலும் கலந்து கொள்ள முடியவில்லை. ரங்கன் தனியாக ஒதுங்கிப் போய் உண்டிவில் பயன் படுத்தி சில உயிர்களுக்கு தீங்கு செய்ய

முயற்சித்துக் கொண்டிருந்தான். அதப் பார்த்து ராமுவோட மனசு ரொம்ப கஷ்டப் பட்டுச்சி.


ஆனால் நல்ல வேளை. உணவு இடை வேளைக்கு ஆசிரியை எல்லோரையும் அழைத்தார். அது வரை எந்த உயிரும் வதை படாமல் இருந்தது - ராமுவின் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.


ஆனால் மதியம் மறுபடியும் ரங்கன் இந்த உண்டிவில் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டால்..!



‘சரி! குட்டீஸ்.. உங்கள்ளே, தொடர்ந்து இந்தக் கதையை சொல்லி, ஒரு திருப்பத்தோட முடிக்கப் போறது யாரு?’ நான் கேட்டேன்.


‘நானு’ என்று முன் வந்த விவு தொடர்ந்தான்:

உணவு உண்டு விட்டு குழந்தைகள் எல்லொரும் அந்த சிற்றோடையில் கை கழுவிக் கொண்டிருந்தார்கள். ஒரு கையில் உண்டிவில்லும் மறுகையில் உணவுப் பிசுக்கோடும் வந்த ரங்கன், அருகில் இருந்த ஒரு சிறிய கைப்பிடி சுவரின் மேல் உண்டிகோலை வைத்து விட்டு கை கழுவ ஓடையில் இறங்கினான். அதே சமயம் அவசரமாக ஓடி வந்த ‘ஒரு’ பையனின் கைப் பட்டு அந்த உண்டிவில் கைப்பிடி சுவருக்கு அந்தப் புறம் ஆழத்தில் இருந்த ஒரு புதரில் விழுந்து மறைந்து விட்டது.


கை கழுவிக் கொண்டு தண்ணீர் குடிக்கும் ஆவலில் ஓடைக்கு வெளியே வந்த ரங்கன் உண்டிவில்லை அப்போதைக்கு மறந்து போனான். மீண்டும் எல்லோரும் விளையாட அனுப்பப்பட்ட போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. அங்கே ஓடிப் போய்ப் பார்த்தான். அந்த கைப்பிடி சுவர் காலியாக இருந்தது.


சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தான். ஊஹும்.. அகப்படவில்லை. யாராவது எடுத்திருப்பார்களோ..? ஆசிரியையிடம் சொன்னால் ‘இப்படி ஒரு பொருளை ஏன் கொண்டு வந்தாய்?’ என்று முதலில் ரங்கனுக்குதான் திட்டு விழும். வேறு வழி இல்லாமல் அப்படியே அடங்கிப் போனான் ரங்கன்.


மதியத்திற்கு மேல் ரங்கன் உண்டிவில் பயன் படுத்தாதது ராமுக்கு சந்தோஷமாக இருந்தது. அவனும் மற்றவர்களுடன் நிம்மதியாக விளயாடிக் கொண்டிருந்தான்.


திடீரென குழந்தைகளின் ‘கசமுச’ சத்தம் கேட்டது. ரங்கன் அழுது கொண்டிருந்தான். கீழே விழுந்து ஒரு சிறிய கல் குத்தி ரங்கனின் கண்ணுக்கு அருகில் காயம் ஆகி விட்டது. ஆசிரியை முதலுதவி செய்து அவனை சமாதானப் படுத்தினார்.


மாலை பேருந்தில் வீடு திரும்பும்போது ராமுவிடம் ரங்கன் சொன்னான்: ‘ராமு ஒரு சிறிய கல் குத்தியே எனக்கு தாங்க முடியாத அளவிற்கு வலித்ததே. நான் உண்டிவில்லில் கல் வைத்து ஓனான் ஒடக்கான் பறவைகள் மேல் அடிச்சா அதுகளுக்கு எப்பிடி வலிக்கும்? இனிமேல் உண்டிவில்லைத் தொடமாட்டேண்டா!’


ராமு அகம் மிக மகிழ்ந்தான்!



‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று ரிஷி கேட்க, ‘நான் சொல்கிறேன்’ என்று அவி முன் வந்து சொன்னது: ‘எல்லா உயிர்களையும் நம் உயிர் போலவே எண்ண வேண்டும்’ அப்பிடீன்னு வள்ளலார் சொல்லி இருக்கார், நமக்கு எப்படி வலிகளும் உணர்வுகளும் இருக்கோ அது மாதிரியேதான் எல்லா உயிர்களுக்கும் இருக்கும். அதைப் புரிஞ்சிகிட்டு, எந்த உயிருக்கும் எவ்வித கெடுதலும் செய்யாமல், துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நாம் அறிய வேண்டிய நீதி!’. அவி சொன்னதை எல்லோரும் ஆமோதித்தனர்.


குட்டீஸ்! உங்களில் யாராவது உங்கள் கற்பனைக் குதிரையைத்தட்டி விட்டு, இந்தக் கதைக்கு வேறு விதமான முடிவு ஏதாவது தோன்றினால், அதை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.



மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?


அன்புடன்


கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in