"மாயை இல்லாதவர் யார்?" part 3
"மாயை இல்லாதவர் யார்?" part 3


தேவகியின் 8 ஆவது புத்ரன் உன்னைக் கொல்வான்" என்ற இந்த அசரீரி வாக்கைக் கேட்டதும், கம்ஸனுக்கு பயம் வந்துவிடுகிறது. தன் உயிருக்கு ஆபத்து என்றதும், தங்கை இருந்தால் தானே புத்திரன் பிறப்பான் என்று, அவளின் தலைமயிரைப் பிடித்து இழுத்து, கொல்வதற்கு வாளை எடுக்கிறான். வஸுதேவரின் நண்பர்களும், யாதவர்களும், “தங்கையைக் கொல்லாதே” இது பாபம் என்று தடுக்கிறார்கள். அவன் அதைக் காதிலேயே வாங்கவில்லை. அவர்களுக்கும் கம்ஸனுக்கும் சண்டை நடக்கிறது.
யாருடைய பேச்சையும் காதில் வாங்காத கம்ஸனைப் பார்த்து வஸுதேவர் சொல்கிறார்"தேவகிக்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளியும் உன்னிடம் தந்து விடுகிறேன். இது சத்யம். நான் வாக்குத் தவறினால் என் முன்னோர்கள் நரகத்திற்குச் செல்வர்" என்றார். எல்லோரும் இதுவே சரி என்று சொன்னார்கள்.வஸுதேவர் சொன்ன வார்த்தயை மீற மாட்டார் என்று நம்பிக்கை வைத்து, கம்ஸன் கோபத்தை விட்டுச் சாந்தமானான். தேவகீ வஸுதேவர் தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தனர்.
தேவகீ யௌவனம் அடைந்து கர்பவதியாகி, ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். வஸுதேவரும் குழந்தயைக் கேட்க, அவளும் இக்குழந்தயைக் காப்பதற்கு ஏதும் பிராயச்சித்தம் செய்ய முடியாதா? என்று கேட்கிறாள். நல்வினை தீவினையால் வரும் பயன்களை யாரானாலும் அனுபவித்தே ஆகவேண்டும் என்று சொல்லிக் குழந்தையை கம்ஸனிடம் கொண்டு தருகிறார்.
சத்யவானான வஸுதேவரிடம் கம்ஸன் சொல்கிறான் "8 ஆவது குழந்தை தானே என்னைக் கொல்லப் போகிறது. இது எனக்கு எதிரி அல்ல. அதனால் உம்மிடமே இருக்கட்டும்" என்று வஸுதேவரிடம் குழந்தையைத் திருப்பிக் கொடுத்து விடுகிறான். 8 ஆவது குழந்தைதானே எனக்கு எதிரி. மற்ற குழந்தைகளை ஏன் கொல்ல வேண்டும் என்று சொன்ன கம்ஸனின் வார்த்தை கேட்டு, மந்திரிகளும் மற்றவர்களும் சந்தோஷித்தனர்.
அப்பொழுது நாரதர் வருகிறார். அவருக்கு வஸுதேவர் தேவகிக்குப் பிறக்கும் குழந்தகளின் பூர்வ சரித்திரம் தெரியும். பூமியின் பாரத்தைக் குறைப்பது தேவியின் திட்டமல்லவா? அதற்கு அவரால் ஆனதைச் செய்ய வேண்டுமல்லவா? அதனால் நாரதர் சொல்கிறார்,
கம்ஸா! நீ முன் ஜன்மத்தில் காலநேமி என்னும் உலகம் முழுவதும் அறிந்த ஒரு அஸுரன். யுத்தத்திலே நீ விஷ்ணுவால் கொல்லப்பட்டாய். இந்த ஜன்மத்தில் நீ உக்ரசேனனுக்கு மகனாக, யது வம்சத்தில் பிறந்திருக்கிறாய். ஆனாலும் உன்னைத் தேவர்களும் விஷ்ணுவும் எதிரியாகத்தான் நினைக்கிறார்கள்.
உன்னைக் கொல்வதற்கே அவர்கள் ஆசைப்படுகிறார்கள் என்று நாரதர் தன்னுடைய கலகத்தை ஆரம்பித்தார்.
தேவர்கள் உன்னைக் கொல்வதற்கான திட்டங்களைத் தீட்டி இருக்கிறார்கள். அவர்கள் மானிட ரூபத்தில் அவதரித்திருக்கிறார்கள். சிலர் மதுராவிலும், சிலர் நந்தகோபர் இருக்கும் இடத்திலும் இருக்கிறார்கள். உனக்கு இது தெரியவில்லை. எல்லோரும் நண்பர்கள் போல் நடிக்கிறார்கள். ஏன் வஸுதேவரும், நந்தகோபரும் கூட நண்பர்கள் போல் நடிக்கிறார்கள் என்றார்.
உனக்கு ஒரு அசரீரி வாக்கு கேட்டதே! 8 ஆவது குழந்தை உன்னைக் கொல்லும் என்று சொன்னதே! அந்த 8 ஆவது குழந்தை யார் என்று உனக்குத் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை. அந்த விஷ்ணுவே தான் 8 ஆவது குழந்தையாக அவதரிக்கப் போகிறார். நீ பூர்வ ஜன்மத்தில் கால நேமியாக இருந்த போதும் அவர்தான் உன்னைக் கொன்றார். அவர் உன் ஜன்ம விரோதி. சத்ரு அல்பன் ஆனாலும் அலட்க்ஷயம் செயக்கூடாது.
நீ முதல் குழந்தயை ஏன் கொல்ல வேண்டும் என்று விட்டு விட்டாய். ஒன்றை நீ அறிந்து கொள். அந்த விஷ்ணு மாயாவி. எதையும் செய்யக் கூடியவன். எட்டு குழந்தைகளையும் வட்டமாக நிற்க வைத்தால் எது 8 ஆவது குழந்தை? வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக எண்ணிப்பார்? எது 8 ஆவது குழந்தை? முதல் குழந்தை கூட 8 ஆவது ஆகலாமே? எனவே கம்ஸா! நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார்
கம்ஸன் மீண்டும் தேவகியிடம் சென்று கொடுத்த குழந்தயை வாங்கி கற்பாறையில் அடித்துக் கொன்று விடுகிறான். தேவகீயையும் வஸுதேவரையும் சிறையில் வைக்கிறான். அதன் பின் பிறந்த 6 குழந்தைகளையும் அப்படியே கொன்று விடுகிறான். இவர்கள் சிறையில் இருக்கும் வரை நமக்கு பயம் இல்லை என்று நினைக்கிறான்.
செய்யக் கூடாததைச் செய்தால் அதோகதிதான். மனதாலும், உடலாலும் நான் எந்த பாபச் செயல்களையும் செய்யக்கூடாது. நான் எப்போதும் தேவிக்கு ப்ரியமுடையவனாக இருக்க வேண்டும் என்று இந்த கவி வேண்டுகிறார்.