இருட்டில் ஓர் வெளிச்சம்
இருட்டில் ஓர் வெளிச்சம்
அதிகாலை 3 மணி. கவிதாவின் தூக்கம் தழுவாத கண்கள் படுத்துக்கொண்டே தனது ஓரே மகனை பார்த்துகொண்டிருந்தது. ஆனால் மனதோ நேற்று நடந்த சண்டையை அசை போட்டு கொதித்துக்கொண்டிருந்தது
கவிதா, 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி. அவள் தன் பணக்கார கணவரோடு ஊட்டியில் வசிக்கிறாள். அவர்களுக்கு அருண் என்ற 6 வயது மகன் உண்டு . கவிதாவின் கணவருக்கு குடி பழக்கம் உண்டு . இதனால் வீட்டில் அடிக்கடி சண்டைகள் அரங்கேறியது ஆனால் நேற்று நடந்த சண்டை ஒரு படி மேலே சென்று கவிதாவை அடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இப்படியொன்றை கவிதா சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான கவிதா இந்த நிம்மதியற்ற வாழ்வை வாழ விருப்பமின்றி தற்கொலை செய்ய திட்டமிட்டாள் .
சட்ரென்று கவிதா குழந்தையை கட்டிலிலே விட்டுவிட்டு கணவரின் அறையை கடந்து தனது காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டார்.
கார் மலையின் உச்சியை நோக்கி சீறி பாய்ந்து கொண்டிருக்க, தூரத்தில் ஓர் டீக்கடையில் விளக்கு ஒளிர்வதை கண்டு ரோட்டின் ஓரத்தில் காரை நிறுத்தினாள். இறுதி ஆசை அவள் டீ குடிப்பது என்பது போலாகிவிட்டது .
அருகில் சென்று "அண்ணா டீ இருக்குதா ?" என்று கேட்க
"10 நிமிஷம் ஆகும்மா, சேர்ல உட்காருங்க" என்றார் டீக்கடைக்காரர்
நாற்காலியில் உட்கார்ந்திருந்த கவிதாவின் கண்கள் அவ்வழியே வந்த சிறுவனின் மேல் நகர்ந்தன . சிறுவன் கடைக்குள் நுழைந்து
"மாமா , இந்த பால் கேனை எங்க வைக்க? " என்றான் .
"அப்படி ஓரமா வச்சுட்டு போடா " என்றவர் "அப்படியே ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு போ" என்று சிறுவனிடம் கூறினார் .
"சரி "என்று தலையாட்டிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினான் சிறுவன் .
சிறுவனின் செயலை கண்டு கவிதா
"யாருண்ணே இந்த பையன், இந்த சின்ன வயசுல இவ்வளவு வேலை செய்யுறான்?" என்று டீக்கடைக்காரரை நோக்கி கேட்டாள்.
அதற்கு கடைக்காரர் "அவன் என்னோட சொந்த அக்கா பையன் . அக்கா தன் புருஷனோட சண்டை போட்டுக்கிட்டு தூக்கு மாட்டி செத்து போயிடிச்சு. அவ புருஷன் வேற கல்யாணம் முடிச்சிட்டு சந்தோஷமா இருக்கான். கடைசியில இந்த பய அனாத ஆகிட்டான். இப்ப நான் தான் இவன வளர்த்துக்கிட்டு வாரேன். அவனும் கூட வந்து உதவி செய்யுறதால கொஞ்சம் கஷ்டம் இல்லாம போகுது. அவன நம்ம பஞ்சாயத்து ஸ்கூல்ல மூனாப்பு சேத்து விட்டுருக்கேன் " என்றார்.
இதைக் கேட்ட கவிதா, தன் மறைவுக்குப் பின் தன் மகனின் நிலைமையை நினைத்துப் பார்த்தாள். டீ தன் தொண்டையை நனைத்திட கண்ணீர் வழிந்து டீ டம்பளரை நனைத்தது. உடனே வீட்டிற்கு திரும்பிய அவள் தன் மகனை அணைத்துக்கொண்டு தன் முட்டாள் தனமான காரியத்தை நினைத்து வருந்தினாள்.
பிறந்து விட்டோம் வாழ்ந்து தான் ஆக வேண்டும். வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் வரும் அதற்கு மருந்து தற்கொலை ஆகாது என்றும் தற்கொலையினால் குடும்பங்கள் அழிந்தே போகும் என்பதை உணர்ந்தாள் .
மனதில் ஒளி பரவ இருள் கவிதாவின் கண்களை கவ்வியது.
கவிதா தூங்கலானாள்.
