திருக்குறள் 56. கொடுங்கோன்மை (556-560) - மு .வா உரையுடன்
திருக்குறள் 56. கொடுங்கோன்மை (556-560) - மு .வா உரையுடன்
556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
மு.வரதராசனார் உரை:
அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.
557. துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
மு.வரதராசனார் உரை:
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
558. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
மு.வரதராசனார் உரை:
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.
559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
மு.வரதராசனார் உரை:
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
மு.வரதராசனார் உரை:
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
