ஓர் மழைத்துளியின் தாகம்
ஓர் மழைத்துளியின் தாகம்


கருமேக தாயின்
கருவறையில் பிறந்தேன்
பூமியில் விழுந்தால்
புண்ணியம்
அதனினும் புண்ணியம்
குடிநீராக அவதாரம் எடுத்தல்
என்றார்கள் உடன்பிறந்தவர்கள்..
பெண்ணாக பிறந்தவள்
பூப்பெய்துவது போல்
மழை துளியாக பிறந்த நான்
பூப்பெய்தினேன் "குடிநீராக"
தொப்புள் கொடி பந்தமும்
தோற்றுப்போகுமென
பூரிப்போடு
பூமி (புகுந்த) வீட்டிற்கு
வந்தேன்
ஒரு மாலை வேளை
மழை துளியாக...
என் குடிநீரவதாரம்
கிடைக்க பெற்றவருக்கு - உமிழ்நீர்
கிடைக்க பெறாதவருக்கு -உயிர் நீர்
உணவு
உடை
இருப்பிடம் - இந்த
மூன்றிற்கும் கொடுக்கும்
முக்கியத்துவம் ஏனோ
நீருக்கு இவர்கள் கொடுப்பதில்லை
காரணம் நாங்கள்
இவர்களின் பிள்ளைகள் அல்ல
இயற்கையின் பிள்ளைகள்
மனிதர்களுக்கு
எங்களின் மகத்துவம்
அறிய பட வேண்டும்
கிடைக்க அரியதானால் தான்
ஒவ்வொரு மழை துளியின்
தாகத்தின் தாக்கம்
புரியும் மனிதருக்கு
எங்களுக்கும்
ஆசை-கனவு
விருப்பு-வெறுப்பு
அனைத்தும் உண்டு
நா
ங்களும் உயிர்கள்தாம்
ஆதலால் தான்
தற்கொலை செய்யும்
எண்ணமும் தோன்றியது எனக்கு
என்னை வீண் விரயம்
செய்யப்படுவதை
சகிக்க முடியாமல்..
நீ என்னை வீணடித்து
கொலை செய்வதை காட்டிலும்
நான் தற்கொலை செய்துகொள்வது
மேல்
அது நான் உங்களுக்கு
கொடுக்கும் மரண தண்டனை
மனிதா
நீ என்னை
நேசிக்கும் வரை
என் கருமேக
தாய் வீட்டிற்கு சென்று
வருகிறேன் ஆ(நீரா)வியாக...
ஏமாற்றமும் ஏமாந்து
போகும் வகையில்
இருந்தது என்
பூமி பிரவேசம்...
நீ மழை துளியை
என்று
உயிர் துளியாய்
உன்னதபடுத்துகிறாயோ
அன்று வருகிறேன்
மறுபடியும் பூமிக்கு...
அதுவரை நான் உனக்கு
சொல்லி கொள்வதெல்லாம்
ஒன்று தான்...
தமிழுக்கு அடுத்து
தண்ணீர் தான்
அமுதமாம்..
தமிழை தான்
சேமிக்க நேரமில்லை உனக்கு
தண்ணீரையாவது
சேமிக்க உணர்ந்து கொள்
நீ என் உன்னதம்
உணருமன்று
மீண்டும்
பிறப்பெடுப்பேன்...
"மழை துளியாக" !!!