STORYMIRROR

Priya Badri

Abstract

3  

Priya Badri

Abstract

மழையும் நானும்

மழையும் நானும்

1 min
200

ஊசி ஊசியாய் மழைத் துளிகள்

ஒன்றைப் பிடித்து ஒன்று இறங்குமோ?


போதை கொஞ்சம் கூடித்தான் போனதோ ?

தலை கீழாய் தொங்கும் பன்னீர் பூக்கள்!

திகட்டத் திகட்ட-

மழை மது அருந்தி,

வாய் வழி மிச்சம் கசிய விட்டபடி !


காக்கையின் கருமையை

கரைத்து வழித்து

வெளுத்து விட நினைத்ததோ மழை?


கொட்டும் மழையிலும்

கொஞ்சமும் போகாத

கருப்பின் பெருமிதத்தில்,

சாதம் இடச் சென்ற என்னிடம்

பீற்றிக் கொண்டு

சாய்ந்த கழுத்துடன் காகம் !


சும்மாவே உம் உம் என்று

உம் கொட்டும் புறாக்கள்

பதுங்கி அமர்ந்து

இன்னும் உறக்கக் கொட்டுகின்றன !

பெய் பெய் நன்றாகப் பெய் என்று....


ஓரமாய் மழைக்கு ஒதுங்கிய நாய்

உடம்பு சுருட்டிப் படுத்துக் கொண்டு...

உறங்கவில்லை அது

உற்றுப் பார்க்கிறது மழையை !


"பள்ளிக்கூடம் இருக்குமா?"


"காத்து பலம், ஆபிஸ் போகையில் பத்திரம்"


"நச நச ன்னு என்ன இப்பிடி பெய்யுது"


"செம்பரம்பாக்கம் நெறம்பிருமா"


"மழையில என்னடா வெளயாட்டு"


இந்தப் பேச்சுக்களைத் தாண்டி...

கப்பல் விடவும்

குதூகலிக்கவும்

கை நீட்டி மழை நீர் பிடிக்கவும்

சொட்டச் சொட்ட நனைந்து சிலிர்க்கவும்


நாயையும், காகத்தையும், புறாவையும், பன்னீர் புஷ்பத்தையும், என்னையும் தாண்டி....


ஒருவரும் காணவில்லை !


இருளில் முழுகிய வராந்தாவின்

விளக்கைப் போட்டுவிட்டு

இன்னும் கொஞ்ச நேரம்

ஜன்னலில் மழைக் காதல் செய்யும் என்னையும்


மழைக்கு சூடா ஏதாவது எனக் கேட்டு

முந்தானை பிடித்திழுத்து

முற்றுப் புள்ளி வைக்கிறது

பிள்ளை !


Rate this content
Log in

Similar tamil poem from Abstract