கறையோடு ஒரு தேநீர் கோப்பை
கறையோடு ஒரு தேநீர் கோப்பை
தேனீர் இன்றிப்
பேசப் பிடிக்காத
நீ !
தேனீர் போடத்
தெரியாத நான் !
கல்லூரி விடுதியின்
கஷாயத் தேநீர்,
பொதுவில் இருவருக்கும்
பிடித்தமிருந்ததில்லை.
உனக்காகப் பயின்ற
பலதில் முதல்
தேநீர்!!
தள தளக்கும் தண்ணீர்
தவிப்பது,
எதிரிருக்கும் நம்மோடு
பேச என்பாய்.
இஞ்சியும் ஏலமும்
உண்டென்று இடுகையில்,
இன்னமும் பொங்குது-
என்னவோ சொல்லுதென்பாய்.
தேயிலைப் பொடியும்
தேவைக்கு இட்டவுடன்,
துள்ளல் கூடுது-
துடிப்பைப் பார் என்பாய்.
ஆங்கொரு வாசனை
ஆவியோடு வருகையில்,
மணம் கொண்டு மனம் மயக்க
வாசக் கரம் நீட்டுதென்பாய்.
ஜீனியும் பாலும்
கொஞ்சம் கலக்கையில்,
அடங்கிப் போவதாய்
அமிழ்ந்தொரு நொடியில்,
புஸ்ஸெனச் சீறியும்
சேராமல் அடங்கி
கோப நிறம்
கோப்பையில் படர,
கும்மென்று தொண்டையில்-
விழுங்கும் வார்த்தையாய்
இறங்குதென்பாய்.
வாழ்வின் கலவைகள்
தேவைக்கேற்ப சேர
எட்டிச் சொல்ல
எத்தனித்தும் முடியாமல்
கோப்பைகளுக்குள்ளே
அடங்கிப் போனோம்
நீயும் நானும் !!
தினம் விழுங்கும்
மிடறுத் தேநீரில்
நாம் சொல்லிக் கொள்ளாத சொற்களையும்
சேர்த்து விழுங்கிக் கொண்டிருக்கிறேன்....
நீயும் தானே?
"அந்த டீ கப்பை நானாச்சும் கறை போகக் கழுவறேனே" என்கிறாள் மனைவி....
அது என்
சோகம் படர்ந்த
கோப்பை என
யார் அவளுக்குச் சொல்வது ??