கோபத்தின் விளைவு
கோபத்தின் விளைவு


ஒரு பாம்பு, தச்சுவேலை நடைபெறும் அறையினுள் நுழைந்தது. பாம்பு மெதுவாக ஊர்ந்தது. பாம்பிற்கு அருகில் ஒரு ரம்பம் இருந்தது. பாம்பு ஊர்ந்து செல்லும்போது, ரம்பம் பாம்பின் உடலில் காயத்தை ஏற்படுத்தியது. பாம்பு வலியால் துடித்தது.
பாம்பு, அந்த ரம்பம் ஓர் உயிரினம் என நினைத்து, அதன் மீது ஆத்திரம் கொண்டது. அதை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று எண்ணியது. ரம்பத்தின் மேல், பாம்பு சுற்றியது. ஆனால், ரம்பத்தின் பற்கள் பாம்பை மேலும் காயப்படுத்தியது.
பாம்பு, ரம்பத்தை கொன்றே ஆக வேண்டும் என்ற வெறியுடன் இருந்தது. பாம்பு, தன் உடலை ரம்பத்தின் மீது மிகவும் இறுக்கமாக
சுற்றியது. ஆனால், ரம்பத்தின் கூர்மையான பற்கள், பாம்பின் உடலை வெட்டியது. பாம்பு இறந்து போனது.
பாம்பின் கோபமும் வெறியுமே, அது இறந்துபோனதற்கான காரணங்களாக அமைந்தன. ஆதலால், முடிந்தவரை நாம் தேவையில்லாமல் கோபப்படக்கூடாது.